Saturday, April 02, 2005

கவிச்சோலை

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்,'பெக் கியோ' சமூக மன்றத்தின் இந்திய இளைஞர் நற்பணிக் குழுவினருடன் இணைந்து மாதா மாதம் 'கவிச்சோலை' என்னும் கவிதைக்கான ஒன்றுகூடலை ஒழுங்கு செய்து வருகிறார்கள்.ஒவ்வொரு முறையும் ஒரு தலைப்புக் கொடுக்கப்பட்டு அதற்கேற்ப வரும் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று கவிதைகளுக்கு பரிசில்களும் வழங்கப்படுகின்றன.

கவிதைப் போட்டி தவிர கவிதை பற்றிய உரையாடல்கள்,புலமையாளர்களின் சொற்பொழிவுகள்கலந்துகொள்ளும் இளங்கவிஞர்களின் கவிதைகளைப் படித்தலும் நயத்தலும் என்று பல்சுவை நிகழ்வாக மாதந்தோறும் நிகழ்ந்து வருகிறது.

இம்மாத கவிச்சோலை நிகழ்வு நாளை மாலை(03/04/05) 7.00 மணியளவில் கேம்பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள பெக்.கியோ சமூக மன்றத்தில் நடைபெறவுள்ளது.சிறப்பு விருந்தினராக தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மா.கண்ணப்பன் அவர்கள் கலந்து கொண்டு 'கவிதைக்குப் பொய் அழகு அல்ல' என்ற தலைப்பில் உரையாற்றவிருக்கிறார்.

இம்மாதக் கவிதைப் போட்டிக்கான தலைப்பு 'கோல்'

இளங்கவிஞர்களும் கவிதை ஆர்வலர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் வேண்டப்படுகிறார்கள்.
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

சிங்கப்பூர் தமிழ் மொழி நூலுக்கு தமிழக அரசு பரிசு

சிங்க்ப்பூர் சித்தார்த்தன் எனும் புனைபெயரில் எழுதும் சிறந்த உள்ளூர் எழுத்தாளரும் கல்வியாளருமான திரு. பா. கேசவன் எழுதிய "இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம்" என்ற தமிழ் இலக்கண நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்துள்ளது.

தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்குகிறது. சிறுகதை, கதை, கவிதை, நாவல் என்று மொத்தம் 23 பிரிவுகளில் பரிசு வழங்கப்படுகிறது. மொழியியல் பிரிவில் இந்த ஆண்டு சிங்கப்பூரின் திரு. பா.கேசவன் எழுதிய இலக்கண நூலுக்குப் பரிசு கிடைத்துள்ளது.

இது தொடர்பில் திரு. பா. கேசவன் கூறும்போது,
சிங்க்ப்பூர் மொழியியல் துறைக்குக்கிடைத்த அங்கீகாரம் இது. உள்ளூர் எழுத்தாளர்களுக்கு நிச்சயம் இது ஓர் ஊக்கு சக்தியாக அமையும். சிங்கப்பூர் எழுத்தாளர்கள் பெருமைப்படத்தக்க ஒன்று. இவை எல்லாவற்றுக்கும் மேலாகச் சிங்கப்பூர் இளையர்களுக்குத் தமிழ்மொழி மீது ஆர்வம் அதிகரிக்க இந்த பரிசு உதவும். தமிழக எழுத்தாளர்களுடன் போட்டி போட்டு நாமும் எழுதலாம் எனும் தன்னம்பிக்கையை இந்த அங்கீகாரம் அனைவர்க்கும் கொடுக்கும் என்று தனது கருத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நூலின் பெயர்: இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம்

செந்தமிழின் இலக்கண விதிகள் அனைத்தையும் சுவையான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும் அரிய நூல்!

இந்நூல் சென்ற ஆண்டு நர்மதா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

Thursday, March 31, 2005

சிங்கப்பூரிலிருந்து ஒரு முரசு

வலை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

தமிழில் வலைப்பதிவுகள் ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகும் நேரத்தில் வலைப்பதிவுகளின் அடுத்த கட்டம் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.இலக்கிய வெளிப்பாடுகளாக மாற்றுச் செய்தி ஊடகங்களாக,விவாத மேடைகளாக சமூகத்தின் குரலாக வலைப்பதிவுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.அவற்றின் தொடர்ச்சி எவ்வாறு இருக்கும் என்பதே அனைவர் முன்பும் உள்ள கேள்வி.

வலைபதியும் நண்பர்கள் ஒரு குழாமாக அன்றாடம் இணையத்தில் சந்தித்து முகம் தெரியாது உரையாடிருந்த நிலையைத் தாண்டி நேரடியாகச் சந்தித்து உரையாடும் நிலைக்கு வந்துள்ளோம்.சிங்கையில் நடந்த வலைப்பதிவாளர்/இணைய எழுத்தாளர்கள் ஒன்றுகூடலானது இதற்கான முதற்படியை அமைத்திருக்கிறது.

முதலாவது சந்திப்பைத் தொடர்ந்து இரு மாதங்களின் பின்னர் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பில் ஆக்கபூர்வமான சில விவாதங்கள் நடைபெற்றன.அதில் ஒன்று சிங்கை வலைப்பதிவாளர்கள்/இணைய எழுத்தாளர்கள் ஒருமித்து செயற்படுவது.அதற்காக சிங்கை கலை இலக்கிய நண்பர்கள் என்ற பெயரில் குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குழுவின் தொடர்பாடலுக்காக மின்னஞ்சல் குழு ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சார்ந்த தமிழிலக்கிய விடயங்களை முன்னெடுத்துச் செல்வதும் இலக்கிய நிகழ்வுகளையும் சந்திப்புகளை ஒழுங்கு செய்வதும் அவை பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வதுமே இந்த நண்பர்கள் குழுமத்தின் நோக்கம்.

சந்திப்புகள்,மாநாடுகளின் போது விழா மலர் வெளியிடுவதுதான் வழமை.நாங்கள் வலையில் சந்தித்தோம் வலைப்பதிவுகளால் இணைந்தோம் ஆகவே சந்திப்பின் ஞாபகார்த்தமாகவும் தொடர்ச்சியைப் பேணும் முகமாகவும் வலைப்பதிவொன்றை ஆரம்பித்தலே முறையென்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது.அந்த வலைப்பதிவு 'சிங்கை முரசாக' உங்கள் கணனித் திரையில் தவழ்ந்துகொண்டிருக்கிறது.

இதன் பணி உலகத் தமிழிலக்கியத்தில் சிங்கையின் பங்கு பற்றி எடுத்துக்கூறுவதோடு சிங்கப்பூரில் நிகழும் கலை இலக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறியத் தருதலாகும்.கூடவே உலகின் ஏனைய பாகங்களிலிருக்கும் வலைப்பதிவாளர்களுடன் உறவைப் பேணுவதற்கும் இவ்வலைப்பதிவு உதவுமென்று நம்புகிறோம்

வலைப்பதிவாளர் சந்திப்பை ஆரம்பித்து வைத்தவர்கள் என்ற பெருமையைப் பகிர்ந்து கொள்ளும் அதேவேளை.இதனைச் சாத்தியமாக்கிய சிங்கை நண்பர்கள்,தமிழ்மணம் காசி,மதி,மற்றும் தமிழ் வலைப்பதிவுகளின் மேம்பாட்டுக்காய் உழைக்கும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதனை எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் சென்னை வலைப்பதிவாளர் சந்திப்புப் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.அந்நிகழ்வானது சிறப்பாக நடைபெற சிங்கை கலையிலக்கிய நண்பர்களும் 'சிங்கை முரசு'ம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

நண்பர்கள் யாராவது சிங்கப்பூர் வருவதாக இருந்தால் சிங்கை முரசில் பின்னூட்டம் மூலம் அறியத் தாருங்கள் அல்லது மேலே இருக்கும் நண்பர்களில் யாராவது ஒருத்தருக்குத் தெரியப்படுத்துங்கள்.உங்களை சந்தித்து உரையாட ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம்.கூடவே உங்களுக்கு அறிமுகமான படைப்பாளிகள் சிங்கப்பூர் வருமிடத்து சிங்கப்பூர் கலை இலக்கிய நண்பர்கள் குழுவினரை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
என்றும் அன்புடன்
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

Wednesday, March 30, 2005

தங்க முனை விருதுப்போட்டி 2005 (NAC-SPH Golden Point Award)

வணக்கம்.

கடந்த சில வருடங்களாக சிங்கையின் தேசிய கலைகள் மன்றம், SPH ஆதரவுடன் ஈராண்டுக்கொருமுறை நடத்திவரும் தங்க முனை விருதுப்போட்டியின் (NAC-SPH Golden Point Award) இந்த வருடத்துக்கான அறிவிப்பு நாளிதழ்களில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இது சிங்கையின் அதிகாரத்துவ மொழிகளான மலாய், ஆங்கிலம், மாண்டரின்(சீனம்) மற்றும் தமிழில் நடைபெறும் என்பது நம்மில் பலருக்குத்தெரியும்.

அந்த அறிவிப்பைத் தவறவிட்டிருந்தாலும், நீங்கள் பரிசைத்தவிரவிடமாட்டீர்கள் என்று தெரியும். அதனால் போட்டி பற்றி நாளிதழ்களில் வந்த அறிவிப்பு இங்கே:

--------------------------------------------------------------
தங்க முனை விருதுப்போட்டி 2005

ஒவ்வொருவரின் உள்ளத்தில் குறைந்த பட்சம் ஒரு நல்ல கதை இருப்பதாகக் கூறப்படுகிறது. உங்களுடையது என்ன?

தங்க முனை விருதுப் போட்டி சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகளிடமிருந்து மிகச்சிறந்ததும், மிகவும் படைப்புத்திறன் வாய்ந்ததும், அசலானதும், பதிப்பிக்கப்பட்டதுமான சிறுகதை அல்லது கவிதையைப் பெற முயல்கிறது.

ஒவ்வொரு விருதையும் பெறும் வெற்றியாளருக்கு $10, 000 ரொக்கமும், கல்விப்பயிற்சிக்குரிய உதவித்தொகையும் பெற வாய்ப்பிருக்கிறது.

விண்ணப்பப் படிவத்தினைச் சமர்ப்பிக்க வேண்டிய இறுதிநாள்: 23-05-1005.

--------------------------------------------------------------

விண்ணப்ப படிவத்தைப் பெறவும் மற்ற மேல் விபரங்களுக்கும்...

சிறுகதை தமிழ்பிரிவுக்கான முதல்பரிசை கடந்த 2003ல் வென்ற எழுத்தாளர், ஓவியர், கவிஞர் நண்பர் மானச-ஜென் ரமேஸ் அவர்களுக்கும், ரம்யா அவர்களுக்கும் மற்ற றும் வெற்றியாளர்களுக்கும் இந்த தருணத்தில் பாராட்டுக்களும்...

இந்த வருட போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்களும்.

என்றென்றும் அன்புடன்,
அன்பு
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்: