Thursday, March 31, 2005

சிங்கப்பூரிலிருந்து ஒரு முரசு

வலை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

தமிழில் வலைப்பதிவுகள் ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகும் நேரத்தில் வலைப்பதிவுகளின் அடுத்த கட்டம் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.இலக்கிய வெளிப்பாடுகளாக மாற்றுச் செய்தி ஊடகங்களாக,விவாத மேடைகளாக சமூகத்தின் குரலாக வலைப்பதிவுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.அவற்றின் தொடர்ச்சி எவ்வாறு இருக்கும் என்பதே அனைவர் முன்பும் உள்ள கேள்வி.

வலைபதியும் நண்பர்கள் ஒரு குழாமாக அன்றாடம் இணையத்தில் சந்தித்து முகம் தெரியாது உரையாடிருந்த நிலையைத் தாண்டி நேரடியாகச் சந்தித்து உரையாடும் நிலைக்கு வந்துள்ளோம்.சிங்கையில் நடந்த வலைப்பதிவாளர்/இணைய எழுத்தாளர்கள் ஒன்றுகூடலானது இதற்கான முதற்படியை அமைத்திருக்கிறது.

முதலாவது சந்திப்பைத் தொடர்ந்து இரு மாதங்களின் பின்னர் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பில் ஆக்கபூர்வமான சில விவாதங்கள் நடைபெற்றன.அதில் ஒன்று சிங்கை வலைப்பதிவாளர்கள்/இணைய எழுத்தாளர்கள் ஒருமித்து செயற்படுவது.அதற்காக சிங்கை கலை இலக்கிய நண்பர்கள் என்ற பெயரில் குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குழுவின் தொடர்பாடலுக்காக மின்னஞ்சல் குழு ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சார்ந்த தமிழிலக்கிய விடயங்களை முன்னெடுத்துச் செல்வதும் இலக்கிய நிகழ்வுகளையும் சந்திப்புகளை ஒழுங்கு செய்வதும் அவை பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வதுமே இந்த நண்பர்கள் குழுமத்தின் நோக்கம்.

சந்திப்புகள்,மாநாடுகளின் போது விழா மலர் வெளியிடுவதுதான் வழமை.நாங்கள் வலையில் சந்தித்தோம் வலைப்பதிவுகளால் இணைந்தோம் ஆகவே சந்திப்பின் ஞாபகார்த்தமாகவும் தொடர்ச்சியைப் பேணும் முகமாகவும் வலைப்பதிவொன்றை ஆரம்பித்தலே முறையென்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது.அந்த வலைப்பதிவு 'சிங்கை முரசாக' உங்கள் கணனித் திரையில் தவழ்ந்துகொண்டிருக்கிறது.

இதன் பணி உலகத் தமிழிலக்கியத்தில் சிங்கையின் பங்கு பற்றி எடுத்துக்கூறுவதோடு சிங்கப்பூரில் நிகழும் கலை இலக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறியத் தருதலாகும்.கூடவே உலகின் ஏனைய பாகங்களிலிருக்கும் வலைப்பதிவாளர்களுடன் உறவைப் பேணுவதற்கும் இவ்வலைப்பதிவு உதவுமென்று நம்புகிறோம்

வலைப்பதிவாளர் சந்திப்பை ஆரம்பித்து வைத்தவர்கள் என்ற பெருமையைப் பகிர்ந்து கொள்ளும் அதேவேளை.இதனைச் சாத்தியமாக்கிய சிங்கை நண்பர்கள்,தமிழ்மணம் காசி,மதி,மற்றும் தமிழ் வலைப்பதிவுகளின் மேம்பாட்டுக்காய் உழைக்கும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதனை எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் சென்னை வலைப்பதிவாளர் சந்திப்புப் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.அந்நிகழ்வானது சிறப்பாக நடைபெற சிங்கை கலையிலக்கிய நண்பர்களும் 'சிங்கை முரசு'ம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

நண்பர்கள் யாராவது சிங்கப்பூர் வருவதாக இருந்தால் சிங்கை முரசில் பின்னூட்டம் மூலம் அறியத் தாருங்கள் அல்லது மேலே இருக்கும் நண்பர்களில் யாராவது ஒருத்தருக்குத் தெரியப்படுத்துங்கள்.உங்களை சந்தித்து உரையாட ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம்.கூடவே உங்களுக்கு அறிமுகமான படைப்பாளிகள் சிங்கப்பூர் வருமிடத்து சிங்கப்பூர் கலை இலக்கிய நண்பர்கள் குழுவினரை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
என்றும் அன்புடன்
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

8 கருத்துக்கள்:

கூறியவர்: Blogger Sardhar

அப்டி போடுங்க...

சிங்கை முரசு நண்பர்களை சந்திக்க முடியுமா - ன்னு தெரியல.. ஆனா சந்திக்க விருப்பம்.

வரும் ஏப்ரல் 3-ந்தேதி முதல் 10 வரை அலுவல் விஷயமா சிங்கை வர்றதா இருக்கேன். (Killiney Road, Orchard Grand Court ல் தங்க உத்தேசம்)

உங்க உள்ளூர் தொடர்பு எண்களை தெரிவிச்சீங்கன்னா வந்ததும் அழைக்க வசதியா இருக்கும்.

அன்புடன்,
சர்தார்

March 31, 2005 1:48 AM  
கூறியவர்: Blogger Vijayakumar

சர்தார் அண்ணே! வந்த கட்டாயம் 91029154 (கைத்தொலைப்பேசி) அல்லது 64750893 இல் என்னை தொடர்புக் கொள்ளலாம். முடிந்தால் தாங்களை சந்திக்கிறேன். இல்லையென்றால் குறைந்தது தொலைப்பேசியிலாவது உரையாடலாம்.

March 31, 2005 4:16 PM  
கூறியவர்: Blogger Salahuddin

Br. Sardhar,

Please contact me at 81003085 if possible.

- Salahuddin

March 31, 2005 5:12 PM  
கூறியவர்: Blogger பாலு மணிமாறன்

I have posted a write up about Vijayasarathi's "kavithai nool veliyeedu" ...

i saw it listed in Tamil manam too...

But it has disappered now...any technical fault ? : )))

April 01, 2005 11:18 AM  
கூறியவர்: Blogger மாலன்

அன்புள்ள நண்பர்களுக்கு,

உங்கள் புதிய முயற்சி வெல்ல என் வாழ்த்துக்கள். சிங்கை இலக்கியத்தின் மீது நன் மதிப்பும், வலைப்பதிவுகளின் ஆரம்பகால வாசகர்களில் ஒருவன் என்ற வகையிலும் ஒரு யோசனை சொல்லலாமா?

உங்களது வலைப்பதிவையே ஏன் ஒரு வார இதழாக மாற்றக் கூடாது. ஒவ்வொருவாரமும் சிங்கை எழுத்தாளர்களது படைப்புக்கள் ( இரண்டு மூன்று கவிதைகள்), சிங்கை எழுத்தாளர் பற்றிய/ சிங்கைப் படைப்புக்கள் பற்றிய அறிமுகம், செவ்விகள், சிங்கை எழுத்தாளர்களது அல்லது சிங்கைத்தமிழரால் எழுதப்படும் நூல் விமர்சனங்கள் (சிங்கப்பூர் நூலகங்கள் பெரும் செல்வக் களஞ்சியங்கள்) என்று உலகிற்கு அறிமுகப்படுத்தக்கூடாதா?

வாரம் ஒரு ஆசிரியர் என்றோ அல்லது ஓர் ஆசிரியக் குழுவென்றோ வைத்துக் கொண்டு செயல்படலாமே?

இது மற்ற நாடுகளில் வசிப்பவர்கள் - உதாரணம் ஆஸ்திரேலியா, ஜெர்மனி - தங்களது சரக்கை அறிமுகப்படுத்துவதன் ஓர் முன்னோடி முயற்சியாகக் கூட அமையலாம். இணையத்தில் தமிழை அறிமுகப்படுத்திய சிங்கை இன்னொரு ஆரம்பத்திற்கு வித்திட்ட பெருமையும் கூடக் கிடைக்கலாம். சிங்கைப் பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கும் முயற்சிகளுக்குக் கூட இது உறுதுணையாக அமையலாம்.

நல்ல செய்திக்குக் காத்திருக்கிறேன்.

மாலன்

April 01, 2005 11:48 AM  
கூறியவர்: Blogger Vijayakumar

அன்புள்ள மாலன் அவர்களே,

அருமையான யோசனை சொன்ன உங்களுக்கு முதலில் நன்றி சொல்கிறோம். சிங்கை எழுத்துக்களை ஆவணப்படுத்த வேண்டும் என்ற கருத்தை சென்ற இணைய நண்பர்கள் கூட்டத்திலேயே சிறு தீப்பொறியாக பற்ற வைக்கப்பட்டது. உங்களது ஊக்கமொழிகளும், ஆக்க கருத்தும் கண்டிப்பாக வெகுவிரைவில் நண்பர்களுடன் கலந்தாலோசிக்கப்படும்.

விரைவில் நல்ல செய்தியுடன்

April 01, 2005 5:47 PM  
கூறியவர்: Blogger எம்.கே.குமார்

மாலன் சார் சொன்னது நல்ல யோசனை. இதுபற்றி ஏற்கனவே நான் நண்பர்கள் சிலரிடம் பேசிக்கொண்டிருந்தேன். பிறகு இது பெரிய விஷயம் என்பதாய் பிளாக்குக்கும் குழுவுக்கும் மாறுதல் அடைந்தது.

செய்யலாம், நண்பர்கள் சேர்ந்து பேசுவோம்.

எம்.கே.குமார்.

April 01, 2005 6:35 PM  
கூறியவர்: Blogger ஈழநாதன்(Eelanathan)

அன்பின் மாலன் அவர்களுக்கு.உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி.கடந்த சந்திப்பில் சிங்கை இலக்கியங்கள் ஆவணப்படுத்தப்படவேண்டும்.பிற நாடுகளிலுள்ளவர்கள் அறியும் வகையில் இணையத்தில் பரவலாக்கப்படவேண்டும் என்று நண்பர்களால் விவாதிக்கப்பட்டு அதன் ஆரம்பப் படியாகவே இந்த வலைப்பதிவை ஆரம்பித்திருக்கிறார்கள்.விரைவில் படிமுறை வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.

April 01, 2005 11:41 PM  

Post a Comment

<< Home