Thursday, July 14, 2005

இலக்கியம் என்றால்,.. ..

ஒன்று உண்மையிலேயே நமக்குப் பிடிக்கிறதா பிடிக்க வில்லையா என்பதை நாமே அவ்வளவு சீக்கிரம் உணர்ந்து விடமுடியாது. எத்தனையோ மாயைகள் நமது அறிவையும் மனசையும் ஆத்மாவையும் மறைக்கிற போது நமக்குப் பிடிக்காதவைகூடப் பிடித்தவை போன்றும் பிடித்தவை கூடப் பிடிக்காதவை போன்றும்; பிடிபடாதவை போன்றும் மயக்கங்கள் ஏற்படும்.

இவைதாம் அனுபவங்கள். பிடித்தவையும் பிடிக்காதவையும் பிடித்தது என்று நாம் முதலில் நினைத்துப் பின்னர் பிடிக்காமற்போனவையும், பிடிக்காதவை என்று நாம் ஒதுக்கியவை பின்னர் பிடித்தவையாகி நம்மை வந்து சிக்கெனப் பிடிப்பதும் எல்லாமே அனுபவங்களாகும்.

அனுபவத்தால் அறிந்ததைப் பிறகும் அனுபவிக்கும் படி அறியச் சொல்லி, அதன் விளைவை அனுபவித்து அறிந்து கொள்வதே இலக்கியமும், இலக்கியத்தின் பயனும் ஆகும்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலில் (மீனாட்சி புத்தக நிலையம் வெளியீடு) தனது முன்னுரையில் கூறியது (பக்கம் 10/11 களில் பிரசுரமாகியிருக்கும் முன்னுரையின் ஒரு பகுதி).
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

நான் ஏன் எழுதுகிறேன் ? !

* எழுதுவதால் நான் மேன்மையுறுகிறேன். அதற்காக எழுதுகிறேன்.

* எழுதுவதால் எனது மொழி வளம் பெறுகிறது. அதற்காகவும் எழுதுகிறேன்.

* எழுதுவதால் எனது மக்கள் இன்னமும் பலனை எய்துகிறார்கள். அதற்காகவும் எழுதுகிறேன்.

* எழுதுவதால் சமூகப் புரட்சிகள் தோன்றுகின்றன. அதற்காகவும் எழுதுகிறேன்.

* எதிர்காலச் சமூகத்தை மிக உன்னத நிலைக்கு உயர்த்திச் செல்ல இலக்கியம் ஒன்று தேவை என்பதாலும் எழுதுகிறேன்.

* வாளினும் வலிமை பொருந்தியது எழுதுகோல். வாழ்க்கைப் போராட்டத்தில் நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஆயுதம் எழுதுகோல். அதனால், எழுதுகிறேன். எழுதுகோல் என் தெய்வம்.

--------- எழுத்தாளர் ஜெயகாந்தன் வானொலி உரையிலிருந்து 5, ஜூன் 1971.


எழுத்தாளர் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சிலமனிதர்கள்' நாவலின் (மீனாட்சி புத்தக நிலையம் வெளியீடு) பின் அட்டையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

Wednesday, July 13, 2005

இலக்கியம் என்றால் என்ன?

நல்ல இலக்கியம் என்பது உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படும் போது மனிதக் குரல் களையும் முகங்களையும் போல சாயல்களும் தனித்தன்மையும் வளமாகக் கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராணி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கெல்லாமோ ஆசைப் பட்டு தங்களையே நகல் களாக்கிக் கொண்டு ஒரே மாதிரியாக பொம்மை செய்து கொண்டே போகிறார்கள். போலி என்பதைக் கூட்டிக் கொண்டே போகிறார்கள்.

மனிதமுகங்கள் வேறுபடுவதைப்போலத்தான் நல்ல இலக்கிய முயற்சிகளும் வேறுபடுகின்றன. வேறு பட வேண்டும். தான் உண்மை என்று தேடிய வழியையும் கண்டதையும் சமூகத்திற்கோ, பெரியார்களுக்கோ, கெட்ட பெயருக்கோ புறக்கணிப்புக்கோ பயப்படாமல் ஒருவர் சொல்லும் போது அதில் தனித் துவமும் அதனால் ஏற்படும் கவர்ச்சியும் அழகும் கவர்ச்சியும் நிறைந்து கிடக்கும். தன்னுடைய முயற்சியில் நம்பிக்கையையும் தான் கண்டது உண்மை என்ற திட நம்பிக்கையும்(பிறர் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரி) எழுத்துக்கும் அடிப் படையாக இருக்கும் பொழுது அது கட்டாயம் நல்ல சிருஷ்டி இலக்கியமாகத் தான் இருக்கும்.

-------எழுத்தாளர் தி.ஜானகிராமன் சொன்னது

நன்றி: 'அம்மா வந்தாள்' -ஐந்திணைப்பதிப்பகம் (நாவலின் பின் அட்டையில் பிரசுரமாகியுள்ளது)
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

சிங்கப்பூர் எழுத்தாளர் பெருவிழா





இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சிங்கப்பூரில் நடைபெறும் சிங்கப்பூர் எழுத்தாளர் பெருவிழா எதிர்வரும் முதல் வரை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்,சீனம்,மலாய்,ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் அவற்றைப் பேசும் மக்களையும் அவர்களது இலக்கியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கவிதை,கதை,கட்டுரை,குறும்படங்கள் திரையிடல்,திரை விமர்சனம்,நாவல் விமர்சனங்கள்,வாசிப்புப் போட்டிகள் எழுத்தாளர் சந்திப்பு போன்ற பல நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியுள்ளன.

சிங்கையில் வதியும் எழுத்தாளர்களுடன் கூடவே தெற்கு,தென்கிழக்காசிய நாடுகளிலிருந்தும் பல்வேறு மொழிகளைப் பேசும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் நாடகாசிரியர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இலக்கியவாதிகளுடன் ஊடாடி அவர்களது நாட்டு இலக்கியங்களைப் பற்றி அறியும் வாய்ப்பு இது.

தமிழ் மொழி இலக்கியத்துவத்தைப் பிரதிநிதிக்கும் வகையில் கனடாவிலிருந்து கவிஞர் சேரனும்,தமிழ்நாட்டிலிருந்து பூமணி,பாமா இருவரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.இவர்களுடன் உள்ளூர் செயற்பாட்டளர்களாகிய கவிஞரும் நாடக ஆசிரியருமான இளங்கோவன்,சுந்தரராசு ஆகியோரும் பங்குபற்றுவார்கள்.
இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேராத பிறமொழி இலக்கியவாதிகள் மூவரும் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

மலேசிய இலக்கியத்தையும் சிங்கை இலக்கியத்தையும் ஒன்றாகத் தரிசிக்கும் நிகழ்வும் இநிகழ்வுகளுள் ஒன்றாகும்.

நிகழ்வுகளின் முத்தாய்ப்பாக புதிய இணைய எழுத்தாளர்கள் என்ற தலைப்பில் ஒவ்வொரு மொழியிலிருந்தும் சிங்கப்பூர் வலைப்பதிவாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவர்களின் வலைப்பதிவு அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் ஏற்பாடாகியிருக்கிறது.
வலைப்பதிவுகள் நிகழ்வில் தமிழைப் பிரதிநிதிக்க சிங்கை முரசு வலைப்பதிவு தேர்வாகியுள்ளது என்பதை மிகுந்த மனமகிழ்வுடன் அறியத் தருகிறோம்.
அறிமுக நிகழ்வின் போது சிறப்பினை அடையவேண்டுமென்பதற்காக இப்போதே சிங்கை முரசு தனது வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க இருக்கிறது.அங்கத்தினர்களின் முழு வினைத்திறனையும் காண்பிக்கவேண்டிய நேரமிது.மற்றைய மூன்று மொழிகளையும் விட தமிழ் வலைப்பதிவுகளின் பெருமையையும் கூடவே உலகத் தமிழ் வலைப்பதிவுகளின் பிரதிநிதித்துவத்தையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நேரமிது

சிங்கை பற்றிய வரலாற்றுக்குறிப்புகள்,புகைப்படங்கள்,சிறப்புச் செய்திகள் நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் என்று இந்தப் பக்கங்களை நிறையுங்கள்
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்: