Tuesday, September 06, 2005

நகரிலே சில முகங்கள்

Faces in the city

அப்பாடா இப்போதுதான் பெருமூச்சோடு ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடிகிறது.கிட்டத்தட்ட 12 நாட்களுக்கு மேல் நடைபெற்ற சிங்கப்பூர் எழுத்தாளர் வார நிகழ்வுகளிலும் எழுத்தாளர்களுடனான சந்திப்புகளிலும் கலந்து கொண்டு பகிர்வுகள்,விவாதங்கள்,வினாக்கள் விடைகள் என்று நீடித்த நாட்கள் ஓய்வுக்கு வந்திருக்கின்றன.

ஒவ்வொருநாள் நிகழ்வாக,நிகழ்வு நடைபெறும் போதே பதியவேண்டுமென்றுதான் நினைத்திருந்தேன்.ஆயினும் இடையறா வேலை.வேலை முடிந்தவுடன் பறந்து போய்,நேர அட்டவணையில் பறக்கும் நிகழ்வுகளைப் பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம்.நிகழ்வு முடிந்தவுடன் எழுத்தாளர்களுக்கு வேண்டிய சிறு சிறு ஒழுங்குகளை மேற்கொள்ளல் இவற்றில் காலம் எனக்காகக் காத்திராமல் அடுத்த நாளுக்கு நகர்ந்து விடுகின்றது.

மீண்டும் அடுத்த நாள் என்ன நடந்திருக்கும் என்பதை இதே பந்தியை திரும்பவும் படித்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொருநாள் நிகழ்விலும் எழுதவேண்டுமென்று நினைத்தவற்றை சிறு குறிப்புகளாக எடுத்து வைத்திருக்கிறேன்.அவற்றின் உதவியுடன் நினைவிலிருந்து மீட்டு எழுதலாம் என்றிருக்கிறேன்.இடையில் ஏதாவது சந்திப்பு வராமல் இருக்கவேண்டும்.

சிங்கப்பூருக்கு வளம் சேர்க்கும்,தமிழ்,சீனம்,ஆங்கிலம்,மலாய் ஆகிய நான்கு மொழிகளிலிருந்தும் உள்ளூர் வெளியூர் எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் சிங்கப்பூர் எழுத்தாளர் வாரமும்.உள்ளூர்ப் படைப்பாளிகளை ஊக்குவிப்பதற்காக நடத்தப்பெறும் தங்கமுனை விருதுப் போட்டியும் இரண்டு வருடங்களுக்கொருமுறை நடைபெறுகின்றன.

இரண்டு வருடங்களுக்கொருமுறை வரும் இந்த விழா சிங்கப்பூர் இலக்கியத்தைப் பொறுத்தவரை கோலாகலத் திருவிழா என்றுதான் சொல்லவேண்டும்.பத்திரிகை,வானொலி,தொலைக்காட்சி இவை போதாதென்று சிங்கப்பூர் வலைப்பதிவுகள் எல்லாவற்றிலும் இதே பேச்சாக இருந்தமையைக் காணக் கூடியதாக இருந்தது.

இந்த வருட எழுத்தாளர் விழாவின் கருப்பொருள் நகர்ப்புற எழுத்து(Text in the city)

இந்த வருட விழாவில் தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும்(பகுதி) வளம் சேர்த்த படைப்பாளர்கள்

பூமணி


சிறுகதை,நாவல்,கட்டுரை,திரைப்படம் என்று பல்வேறு பரிமாணங்களில் செயற்படுபவர் தமிழக எழுத்தாளர் பூமணி.பூமணியின் வெக்கை,பிறகு ரெண்டு முதலிய நூல்களை அனேகம் பேர் படித்திருப்பீர்கள்.சிறுவயதுத் தொழிலாளர்களின் அவலத்தை கருவேலம் பூக்கள் என்னும் படமாகச் செதுக்கியவர் .அதற்காக விளக்கு இலக்கிய அமைப்பின் விருதையும் பெற்றுக்கொண்டவர்.



பாமா


தற்காலத் தமிழ்/தலித் இலக்கியத்தின் முக்கிய பெண் ஆளுமைகளில் ஒருவர் பாமா.கருக்கு,சங்கதி,வன்மம் என்னும் நாவல்களையும் கிசும்புக்காரன் என்னும் சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கிறார்.தற்போது ஆசிரியராகக் கடமையாற்றுகிறார்.



சேரன்

ஈழத்தில் பிறந்து கனடாவில் வதியும் கவிஞர் சேரன்.ஏற்கனவே சிங்கை தமிழ் நாளிதழான தமிழ்முரசில் எழுதும் பத்திகள் மூலமும் கவிதைகள் மூலமும் சிங்கப்பூரில் பரவலாக அறியப்பட்டவர். ஈழப்போராட்டத்தின் பல்வேறு படிநிலைகளைத் தனது கவிதையில் வடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டவர்.எலும்புக்கூடுகளின் ஊர்வலம்,யமன் போன்ற கவிதைத் தொகுதிகள் வெளிவந்த நேரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டவை.மரணத்துள் வாழ்வோம் என்ற எதிர்ப்பிலக்கியக் கவிதைகளின் தொகுப்பாளர்களுள் ஒருவர்.



சுந்தரராசு

சிங்கப்பூர் மண்ணுக்கேயுரிய எழுத்தாளர்.ஆசிரியர்சிறுகதை,நாடக எழுத்தாளர்.என்னதான் செய்வது,புதிய அலைகள் என்னும் இரு சிறுகதைத் தொகுதிகளையும்,உதயத்தை நோக்கி என்கிற வானொலி,தொலைக்காட்சி நாடகங்கத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.கடந்த திசைகள் இதழில் இவரது சிறுகதை வெளிவந்திருக்கிறது.சிங்கை நாளிதழ் தமிழ் முரசிலும் எழுதி வருபவர்.

சங்கையா

சிங்கை மண்ணுக்குரிய இன்னொரு படைப்பாளி.2001 ஆம் ஆண்டிற்கான தங்கமுனை விருதை வென்றிருக்கும் சங்கையா தமிழ்முரசில் எழுதி வருகிறார்.இவரது சிறுகதைகள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.தனது முதல் சிறுகதைத் தொகுதியை 1993இல் வெளியிட்டார்



இளங்கோவன்


கவிஞர்,நாடகாசிரியர்,சிறுகதை எழுத்தாளர் என்று பல்பரிமாணமுள்ள சிங்கப்பூர் படைப்பாளி இளங்கோவன்.அக்னிக்கூத்து என்னும் நாடகக் குழுவை ஆரம்பித்து இயக்கிவருகிறார்.தலாக்,மைன்ஸ் போன்ற அரசியல் சமூக விமர்சனங்கள் நிரம்பிய நாடகங்கள் பலவற்றை இயக்கியுள்ளார்.மௌன வதம்,விழிச்சன்னல்களுக்குப் பின்னால்,ட்ரான்ஸ்கிரியேசன் என்னும் கவிதைத் தொகுப்புகள் வெளிவந்த நேரத்தில் சிங்கப்பூர்ச் சூழலில் பெரும் பரபரப்பையும் சர்ச்சைகளையும் தோற்றுவித்தவை.

கலந்து கொண்டு சிறப்பித்த பிற இந்தியமொழிப் படைப்பாளர்கள் மற்றும் பிறநாட்டுப் படைப்பாளர்கள் பற்றிய விபரத்துக்கு
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்: