Monday, June 13, 2005

தொடர் நேசிப்பின் சில பகிர்வுகள்

புத்தக வாசிப்பு தொடர்பான இத் தொடர் போட்டியில் என்னையும் இணைத்த அன்பு அண்ணாவுக்கு நன்றிகள்..."சிங்கைமுரசு" நண்பர்கள் மின் அஞ்சல் குழுமத்தில் இணைக்கப்பட்ட பின்பே தமிழில் தடச்சு செய்ய நேர்ந்தது..வாய்த்தது...தூண்டியவர்களுக்கும் நன்றிகள்...

வாசிப்பு என் நேசிப்பாக புலமைப்பரிசில் தேர்வுக்கு முன்னமே ஆரம்பமாகியிருந்தது..

ஐயா(எனதுஅப்பா)எனது வாசிப்புக்கான ஊக்கியாக இருந்துள்ளார்..பலரும் குறிப்பிட்டபோல அம்புலிமாமா,ரத்னபாலா,பாலமித்ரா,கோகுலம்,முத்துகாமிக்ஸ்...போன்றனவும் கொழும்பில் வெளியான "லிட்டில் ஸ்டார்" என்ற ஆங்கில சிறுவர் வாரப் பத்திரிகையும் ஆரம்ப வாசிப்புக்குத் தீனி போட்டவை..

யாழ்ப்பாண கொக்குவில் கிராம நூலகம்,நல்லூர் முத்திரைச்சந்தி நூலகம்,யாழ் இந்துக் கல்லூரி நூலகம்,கோண்டாவில் மாவீரர் படிப்பகம்,திருமலை கோணேஸ்வரா இந்து கல்லூரி நூலகம்,திருமலை நகரசபை நூலகம்,கிழக்கு பல்கலைக்கழக நூலகம்,மட்டக்களப்பு மாநகரசபை நூலகம்...என்று "வளம்" தந்த "அமைப்புசார்" நிலையங்களில்..தற்போது சிங்கை தேசிய நூலக வாரியத்தின் நூலகங்கள்...

வாசிப்பதில் "வரையரை" பெரும்பாலும் நான் கொண்டிராமையால்,"தீவிர வாசிப்பாளனாகக் கருதாவிட்டாலும் வாசிப்பதில் தீவிரம் கொண்டவன் என்பதால் நன் வாசித்தவை பல வகையரா....

"பட்டியல்" போட்டு வாசித்திராமையால்.. ஒருசிலவற்றைமட்டுமே பகிர்கின்றேன்....

சிறுவனாக இருக்கையில்.....பூவண்ணனின் கதைகளை விரும்பிப் படிப்பேன்...எப்ப அடுத்த தொடர் வரும் என்று நாள்களை எண்ணியதுண்டு...

பள்ளிக் காலத்தில் சாண்டில்யனின் "கடல் புறா","யவன ராணி,"ராஜ பேரிகை"...இன்னும் பல விரும்பி "விடாது" படித்திருக்கிறேன்...ஒவ்வொரு அத்தியாயத்திலும் வர்ணனை கணிசமான இடத்தைப்பிடிப்பது எனக்கு பிடித்ததுண்டு..

கல்கியின் "சிவகாமியின் சபதம்" படித்த பின் அக்கதைப்பின்னணிச் சூழலிலிருந்து விடுபட நாள்கள் நிறையத் தேவைப்பட்டன....வாசிக்க எடுத்த நாள்களைப்போல..! "பார்த்தீபன் கனவு", "கள்வனின் காதலி" என்பனவும் கதைமாந்தரோடு ஒட்டி "இம்சித்தவை"!

இவை தவிர அக்காக்கள் வாசித்துக் காட்டிவைத்த "மங்கை"யில் வந்த பல "நாவல்கள்..இன்னும் பெயர் நினவுக்கு வராத புத்தகங்கள்...

முதலில் வாசித்த கவிதைப் புத்தகங்கள்....வாசிப்பும் ,அவை கிடைத்த விதமும் சிலிர்ப்புக்குரியவை...சேரனின் "யமன்"(தமிழ் இளையர்கள் மீதான சிங்கள அரசபயங்கரவாதக் கொடூரங்களை ரத்த வரிகளால் படம் போட்டன}, மு.மேத்தாவின் "கண்ணீர்ப்பூக்கள்"...

இவையும் இன்னும் சிலவும் ஊரிலிருந்த போராளிகளின் பணியகம் ஒன்றை "அமைதிப் படை" என்ற பெயரில் வந்தவர்கள்(1987 அக்டோபரில்) உடைத்த பின், அங்கு சென்ற அண்ணாவும் பெரியப்பாவும் கொண்டுவந்தது நினைவு..(1994 இல் இவற்றையும் இனும் சிலவற்றையும் மாவீரர் படிப்பகத்துக்கே கொடுத்துவிட்டேன்)

1990களில் யாழ் குடாநாட்டில் "சங்க காலம் திரும்பியது" என்று கூறும்படியாக விளைந்த பலவற்றுள் ..."அறிவுக்களஞ்சியம்", "நங்கூரம்", "சாளரம்", "வானோசை", "உலக உலா""சிட்டு" போன்ற பொதுஅறிவுசார் சஞ்சிகைகளும் "வெளிச்சம்" இலக்கிய ஏடும் எனது வாசிப்பில் பெரும் பங்கை பிடித்திருந்தன....

சேகுவேராவின் "கியுபா;புரட்சிகர யுத்தத்தின் கதை","நிக்கரகுவா புரட்சிகர யுத்தம் (இரண்டும் யாழ் பல்கலைக்கழக மறுமலர்ச்சிக் கழக வெளியீடுகள்),பிடல் காஸ்ட்ரோவின் "வராலறு என்னை விடுதலை செய்யும்",ஜுலிஸ் பூஸிக்கின் "தூக்கு மேடைக் குறிப்புக்கள்"...போன்றன விடுதலைப் போராட்டங்கள்/ஏகாதிபத்தியங்களின் சுரண்டல்/சதிகள் பற்றிய ஆரம்பப் பார்வைகளைத் தந்தவை

இடப்பெயர்வுகளும் பல்கலைக்கழக கல்வி மறும் பிறவும்..வாசிப்பில் குறிபிடத்தக்கவை..

"நூலக வாரம்" மூலமும் பிற நூல் கண்காட்சிகளிலும் வாங்கிய நூல்கள் நிறைய....

"புதிய உலகம்"(போராட்டக் குழுவின் உள் நடந்த அநீதிகளும் மாற்றுக் கருத்துகளும் பற்றிய பதிவு), குவான் தின் கோவின் "உன் அடிச் சுவட்டில் நானும்"(வியட்னாமியப் போரட்டக் கதை...ஒரு போரளியின் காதலி ஆக்கிரமிப்பளரால் வதைக்கப்பட்டு..பின் அவளும் போராட்டதில் நேரடியாகப் பங்கெடுப்பதை விபரிக்கும் உண்மைக் கதை), சுவாமி தயானந்த சரஸ்வதியின் "மனம் மலரட்டும்"(வாழ்க்கை முகாமைக்குத் தேவையான நற்கருத்துக்கள் நிறைந்தது), ஆனந்த விகடன் வெளியீடான "ரொமான்ஸ் ரகசியங்கள்", "காதல் படிக்கடுக்கள்", "ஏன்?எதற்கு?எப்படி?". மாஸ்டர் & ஜோன் ஸனின் "செக்ஸ் மானுவல்".......முதலானவை அதில் அடங்கும்.

"புரிந்துணர்வு உடன்படிக்கை" வந்த பின்....எமது வாழ்வை(ஈழ வாழ்வு) நாமே வெவ்வேறு அனுபவங்களினூடு வாசிக்க முடிந்தது."வெளிச்சம்"சஞ்சிகை மீள கிடைத்தது..குறிப்பாக அதன் வெள்ளி/பொன்/பவள விழா மலர்கள் "பரந்த" கருத்தாடல்களைத் தந்தன."போரிலக்கியம்" என்பதன் வியாபகங்களைத் தரிசிக்க முடிந்தது...பல புதிய படைப்பாள்ர்களைக்,குறிப்பாக "கள" கர்த்தாக்களை/படைப்புக்களை வாசிக்க வாய்த்தது.வளநாடான்,குழல்,ச.பொட்டு,கருணாகரன்,நிலாந்தன்,....மலைமகள்,தமிழ்க்கவி,

அம்புலி,ஆரண்யா,சுதாமதி...என்றெல்லாம் நிறையப் படைப்பாளார்களையும்........"எழுதாத கவிதை"(தமிழ் ஈழ பெண்களின் கவிதைத் தொகுப்பு),"கனவுக்கு வெளியேயான உலகு"(தமிழ் ஈழ பெண்களின் சிறுகதைத் தொகுப்பு),தமிழ்க்கவியின் "இனி வானம் வெளிச்சிடும்"(நாவல்),வியாசனின்"உலைக்களம்"(கவிதைத் தொகுப்பு),தூயவனின்"சமரும் மருத்துவமும்"(கள மருத்துவ நிகழ்வுப் பதிவு),மணலாறு விஜயனின் "மௌனப் புதைகுழிகள்","வில்லுக் குளத்துப் பறவைகள்"(அமைதிப் படைகளின் கொடூர கால உண்மைப் பதிவுகள்)...என நிறையவற்றை உணர்வொன்றித்து வாசிக்க முடிந்தது.

சிங்கைக்கு வந்த பின் மீண்டும் குங்குமம், குமுதம், ஆனந்தவிகடன்.. போன்றனவும்.. குமுதம் சிநேகிதி,அவள் விகடன்,நக்கீரன்....முதலானவற்றையும் இடையிடேயே வாசிக்கிறேன்.

அண்மையில் வாசித்த புத்தகங்கள் கவிதாயினி தாமரையின் "ஒரு கதவும் கொஞ்சம் களிப்பாலும்"(கவிதைத் தொகுப்பு)& "என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள்"(சிறு கதைத் தொகுப்பு),கனிமொழியின் "கருவறை வாசனை"{மூன்றும் பெண்களின் உணர்வுகளை,அடக்குமுறை உடைப்பை,விருப்புக்களை...என பலவற்றைப் பேசின...},ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்",சிவசங்கரியின்"47நாட்கள்"{2ம் "வாசிப்போம் சிங்கபூர்" வாசிக்கத் தூண்டியவை}, சேரனின் "உயிர் கொல்லும் வார்த்தைகள்"(கட்டுரைத் தொகுப்பு),தம்மன்னச் செடியாரின் "காதல்+காமம்=கடவுள்",காசி ஆனந்தனின் "நறுக்குகள்"..

சிறப்பாக அண்மையில் வாசித்த/ சிங்கையில் வெளியீடு கண்ட நூல்கள்....-கருணாகரசுவின் "தேடல்",வீ.விசயபரதியின் "பூடுக்கள்" &"நிழல் மடி",அமலதாசனின் "புல்லாங்குழல்",நூர்ஜகான் சுலைமானின் "வேரில் நிற்கும் விழுதுகள்"

வாசித்துக்கொண்டிருப்பவை....அ.முத்துலிங்கத்தின் "அங்க இப்ப என்ன நேரம்?"(கட்டுரைத் தொகுப்பு)

வாசிக்க இருப்பது.."அம்மா வந்தாள்" & "ஜே ஜே சில குறிப்புகள்" & தபு சங்கரின் "காதல் தேவதைகள்"

ஊரில் நான் வைத்திருந்த/வாசித்த "மரணத்துள் வாழ்வோம்"(ஈழத்துக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு)அண்மையில் "கவிமாலை"/"கவிச்சோலை"நண்பர் ஒருவர் மூலம் மீள வாசிக்கக் கிடைத்தமை வித்தியாசமான "மீள் உணர்வூட்டிய" அனுபவம்.

நான் யாரை அழைப்பது...பலரும் ஏற்கனவே பகிர்ந்திருக்கிறார்கள்...என்றாலும் முறைக்காகவும் மேலும் பகிரவும்..

ஈழநாதன்
ஜெயந்தி சங்கர்
எம்.கே.குமார்
பாலு மணிமாறன்
பனசை நடராஜன்

வாசிப்பின் மீதான நேசிப்பு நீள்கிறது..நீளும் என்ற நம்பிக்கையுடன்...

அன்புடன்,
ஷாந்தன்
(சிங்கை/திருமலை,)
ktps24@yahoo.co.uk
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்: