Tuesday, May 29, 2007

சிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கிய உள்ளங்களை ஒருங்கிணைக்கும் கருத்தரங்கம்


சிங்கப்பூர் தேசிய நூலகத்தில், வரும் ஜூன் 9ம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு " சிங்கப்பூர் மலேசியத் தமிழ் இலக்கியம் - நேற்று, இன்று, நாளை " என்ற தலைப்பில் கருத்தரங்கமும், கலந்துரையாடலும் நடைபெறுகிறது.

சிங்கப்பூர், மலேசியாவின் புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய ஆதரவில், சிங்கைத் தமிழ்ச் சங்க ஏற்பாட்டில் நடைபெறும் இந் நிகழ்வு பாலு மீடியாவால் ஒருங்கிணைக்கப் படுகிறது.

சிங்கப்பூர் தமிழ் இலக்கியச் சூழலைப் பற்றி ஒலி 96.8 செய்திப்பிரிவின் மூத்த செய்தி ஆசிரியர் செ.ப.பன்னீர்செல்வம், தேசிய கல்விக்கழகத்தின் முனைவர் சீதாலட்சுமி, எழுத்தாளர் சுப்பிரமணியன் ரமேஷ் ஆகியோர் கட்டுரை படைக்கிறார்கள்.

தமிழ் உலகம் நன்கறிந்த எழுத்தாளர் சை.பீர்முகம்மது, மலேயாப் பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் முனைவர் கிருஷணன் மணியம், மலேசியாவின் புகழ் பெற்ற வார இதழான "தென்றலின்" ஆசிரியர் வித்யாசாகர் போன்றோர் மலேசிய இலக்கிய சூழல் பற்றிய செய்திகளை சிங்கப்பூர் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.


வாசகர்கள் - எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர் சித்தார்த்தன் தலைமை வகிக்க கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ கலந்துரையாடலை வழி நடத்துகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி இலவசம். மேல் விவரம் வேண்டுவோர் பாலு மணிமாறனோடு 90753234 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

7 கருத்துக்கள்:

கூறியவர்: Anonymous Anonymous

which national libarary nu sollave illaiye :-)

May 30, 2007 1:17 AM  
கூறியவர்: Blogger வடுவூர் குமார்

இப்பவே போட்டுவிட்டீர்களே!
நம் மக்களுக்கு மறந்து போக வாய்புள்ளது.

May 30, 2007 1:04 PM  
கூறியவர்: Blogger மாலன்

கருத்தரங்கம் வெற்றிகரமாக அமைய என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.கருத்தரங்கில் வாசிக்கப்படும் கட்டுரைகளை உங்கள் வலைப்பூவில் வெளியிடுதல் இயலுமா?குறைந்த பட்சம் சுருக்கத்தையாவது வெளியிட முயற்சி செய்யுங்கள். அல்லது இணைய இதழ்கள், இணையக்க் குழுக்களை அணுகிப் பாருங்கள். கருத்தரங்கை அமர்வுகளாகப் பகுத்திருக்கிறீர்களா எனத் தெரியவில்லை. இணையம் சிங்கைத் தமிழ் இலக்கியத்தின் மீது ஏற்படுத்திய தாக்கங்களை யாரேனும் ஆராய்ந்தால் அது வரவேற்கப்படத்தக்கதாக அமையும். சிங்கை இலக்கிய வரலாற்றுப் பின்னணியில் இது முக்கியமானது. ஏனெனில் அதுவரை தமிழ் உலகின் பலபகுதிகளையும் சென்றடையாத சிங்கை எழுத்துக்கள் வலை மூலம் பலரையும் அடைந்து கவனம் பெற்றது. அது புதிய தாக்கங்களை அந்தப் படைப்புலகில் ஏற்படுத்தியுள்ளது என்றே எண்ணுகிறேன் .யோசித்துப் பாருங்கள்.
அன்புடன்
மாலன்

May 30, 2007 6:02 PM  
கூறியவர்: Blogger பாலு மணிமாறன்

சிங்கப்பூர் தேசிய நூலகம் விக்டோரியா ஸ்டிரீட்டில் அமைந்துள்ளது. அதன் 5வது தளத்தில் நமது நிகழ்ச்சி நடைபெறுகிறது. நண்பர்களோடு வந்து கலந்து கொள்ளுங்கள் துர்கா!

இந்நிகழ்வு சார்ந்து வேறு ஏதும் தகவல் வேண்டுமெனில் நீங்கள் எங்களை தாராளமாக அழைக்கலாம்..

May 30, 2007 11:36 PM  
கூறியவர்: Blogger பாலு மணிமாறன்

உண்மைதான் குமார். வலைப்பூ என்பது தகவலை கொண்டு போய் சேர்க்கும் "இன்னுமொரு வலுவான தளம்" என்பதை உணர்கிறோம்.

இதோடு -பத்திரிக்கை, வானொலி, மின்னஞ்சல், Flyers என மற்ற பல வகையிலும் தகவல் இலக்கிய ஆர்வலர்களை சென்று சேர முயன்று வருகிறோம். உங்கள் அக்கறைக்கு நன்றி குமார்!

May 30, 2007 11:44 PM  
கூறியவர்: Blogger பாலு மணிமாறன்

உங்கள் அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி மாலன் சார்!

இந்த கருத்தரங்கில் வாசிக்கப்படும் கட்டுரைகள் நிச்சயம் வலைப்பூ மற்றும் இணைய இதழ்களின் மூலம் உலகத் தமிழர்களோடு பகிர்ந்து கொள்ளப்படும். சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் திரு.கண்ணபிரான் அவர்கள் இந்த நிகழ்வில் வாசிக்கப்படும் கட்டுரைகளையும், பகிரப்படும் கருத்துக்களையும் சிறு புத்தகமாக்கினால் என்ன என்ற கருத்தை முன்வைத்துள்ளார். அது ஆக்கம் பெறும் வாய்ப்பும் உள்ளது.

ஜெயந்தி சங்கர், குழலி, எம்.கே.குமார் ( இவரது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு 'மருதம்' பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது ) போன்றோர் சிங்கப்பூரில் இருந்து இணையம் வழி படைக்கும் படைப்புகளின் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்து வரும் சூழலில் உங்கள் கருத்து மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்கிறோம் (சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கு உள்ள ஒரே உள்ளூர் ஊடகம் "தமிழ்முரசு" நாளிதழ்தான்!).நீங்கள் குறிப்பிட்ட மாதிரி இணையம் சிங்கப்பூர் இலக்கியச்சூழலில் ஏற்படுத்தியுள்ள தவிர்க்க முடியாத தாக்கம் பற்றி வலைப்பதிவர் சுப்பிரமணியன் ரமேஷ் தன்னுடைய கட்டுரையில் விரிவாக பகிர்ந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது

நிகழ்ச்சிக்கு தேசிய நூலகத்தில் வழங்கப்பட்டுள்ள கால அளவு 3 மணிநேரம். 2 மணி நேரம் கருத்தரங்கிற்கு, 1 மணி நேரம் கலந்துரையாடலுக்கு என்று முடிவு செய்துள்ளோம்.

இந்த நேரத்தை மிக பயனுள்ளதாக்கும் பொறுப்பு ஏற்பாட்டளர்கள், கட்டுரையாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கு சம அளவில் இருக்கிறது!

May 31, 2007 12:17 AM  
கூறியவர்: Blogger மானஸாஜென்

நண்பர் பாலுமணிமாறனின் இப்பதிவைச் சற்று காலம் கடந்தே பார்க்கிறேன்.

திரு. மாலன் அவர்களின் கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி! அவர் சொன்ன கருத்து பயனுள்ளதும், தற்போதைய தேவையும் ஆகும். என்னுடைய கட்டுரை 'சிங்கப்பூர் இலக்கியம் நாளை' என்னும் தலைப்பிலானதினால் தற்போதைய நிலவரத்தை ஆவல் இருந்தும், அதிகமாக தொட இயலாவில்லை, வருங்கால சாத்தியப்பாடுகள் என்று மட்டுமே இணைய நிகழ்ச்சிகளை பற்றி குறிப்பிட நேர்ந்திருக்கிறது.

June 04, 2007 12:16 PM  

Post a Comment

<< Home