Friday, July 13, 2007

நேற்று இன்று நாளை

---- ஜெயந்தி சங்கர்


சிங்கப்பூர் மலேசிய தமிழ் இலக்கியம் 'நேற்று இன்று நாளை' என்ற ஒரு பயனுள்ள கருத்தரங்கு சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் கடந்த சனிக்கிழமையன்று (09-06-07) மாலை ஆறுமணியளவில் நடந்தேறியது. தேசியநூலகவாரியம் மற்றும் சிங்கைத் தமிழ் சங்கம் ஆகிய அமைப்புக்களின் ஆதரவுடன் பாலுமணிமாறனின் பாலு மீடியா மேனேஜ்மெட் ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்வின் நெறியாளர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ. வரவேற்புரை மற்றும் நன்றியுரைகளைச் சுருக்கமாக முடித்துக் கொண்டு நகர்ந்தார் பாலுமணிமாறன்.


1980களில் சிங்கப்பூர் கவிஞர் பரணன் அவர்களால் இயற்றப்பட்டு மலேசிய இசைஞர் ஒருவரால் மெட்டமைக்கப்பட்ட தமிழ்மொழியைப் போற்றிடும் ஒரு பாடலைத்தானே பாடி மரபுவழியில் தனது உரையை துவங்கிய சிங்கப்பூர் வானொலியைச் சேர்ந்த சே.பா.பன்னீசெல்வம், சிங்கப்பூரின் 1990 வரையிலான தமிழ் இலக்கியத்தைக் குறித்துப் பேசினார். சிங்கப்பூர் மலேசிய தமிழ் இலக்கியத்திற்கிடையே நிலவிய நட்புறவு, சிங்கப்பூர் 'இந்தியாவின் சிட்னி' என்றழைக்கப்பட்ட விவரம், அக்காலத்தில் நடந்த எழுத்துப் பட்டறைகள், தமிழ் முரசு தவிர அன்று நடந்த சில பத்திரிக்கைகளின் செயல்பாடுகள், பல பத்திரிக்கைகளின் ஒரு பிரதிகூட கைவசம் இல்லாத நிலை, கலைமகள் தமிழ்ப்பள்ளி, மாணவர்களுக்கென்று நடத்தப்பட்ட போட்டிகள், வானொலி சார்ந்த நிகழ்வுகள், நினைவுகள், வானொலியில் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள் என்று விரிந்த இவரின் உரையில் தமிழ் இலக்கியம் தொடர்பான ஆய்வுநூல்கள் மலேசியாவில் இருக்கும் அளவில் சிங்கப்பூரில் இல்லை என்ற முக்கிய ஆதங்கமாகத் தெறித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், மொழி அடையாளம் அறியப்படாத ஒரு கல்வெட்டு சிங்கப்பூரில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டு ஆங்கிலேய அதிகாரி குண்டு வைத்துத் தகர்த்தபோது பாதி கல்வெட்டு உடைந்த நிலையில் மறுபாதி இன்றும் சிங்கப்பூரில் இருப்பதாகவும் அதில் இருப்பது பழைய தமிழ் எழுத்துக்கள் என்றும் அது குறித்த விரிவான ஆராய்ச்சியின் தேவை குறித்தும் சொன்னார். 1896ல் சிகந்தர் சாகிப் என்பவர் எழுதிய 'மலாய் காவியம்' குறித்த பதிவு சிங்கப்பூரின் தேசிய நூலகத்தில் இருக்கும் 'Pages from yester years' எனும் நூலில் இருப்பதைக் குறித்துச் சொல்லி, இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வானொலித் துறையின் பல புத்தகங்களை சிறைக்கைதிகள் 'பைடிங்க்' செய்து கொடுத்ததாகவும் சில சுவாரஸிய தகவல்களைச் சொல்லி மொழிப்பற்றையும் மண்மணம் கமழும் படைப்புக்களின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.



அடுத்து பேசவந்த மலேசியமூத்த படைப்பாளி சை.பீர்முகம்மது மலேசியாவின் 1990வரையிலான இலக்கியத்தை இருபது நிமிடங்களில் சொல்லிவிடமுடியாது என்று ஆரம்பித்து, ஒரே ஒரு கிலோமீட்டர் இடைவெளி இருக்கும் சிங்கப்பூர் மலேசியாவிற்கிடையே இருந்த 'பெர்லின் சுவர்' உடைந்ததற்கு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். மலேசியாவின் நேற்றைய இலக்கியத்தைச் சொல்லும் போது சிங்கப்பூரை ஒதுக்கிவிட முடியாது என்றும், மலேசிய தமிழிலக்கிய வரலாறு எழுதப்பட வேண்டியதன் அவசியத்தைச் சொல்லி, அக்காலட்டத்தில் வெளியான பத்திரிக்கைகள் இப்பணிக்கு சிறப்பாக உதவும் என்றும் சொன்னார்கள். சிறுகதை என்று பலராலும் ஒத்துக்கொள்ளப்படா விட்டாலும், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலேயே மலேயாவின் முதல் சிறுகதை மிகுதூம் சாயிப் அவர்களால் எழுதப்பட்டுவிட்டது, அதே காலகட்டத்தில் தமிழின் முதல் மொழிபெயர்ப்பு நூல் மலாய் மொழியிலிருந்து வந்தாகிவிட்டது போன்ற பல வரலாற்றுத் தகவல்களைச் சொன்னார். 1786ல் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வந்த பினாங்கின் ஒரு பள்ளிவாசலில், அக்காலட்டத்திலேயே பிள்ளைகளுக்கு அரபிக், உருது தவிர தமிழும் கற்பிக்கப்பட்டதற்கான குறிப்புகள் உண்டு; ஆகவே, குறைந்தது அதற்கும் 30 வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக்கவேண்டும் என்றார். நேதாஜி காலத்தில் மலேசிய தமிழ் இலக்கியம் ஒரு முடக்கத்தைக் கண்டு, பிறகு மீண்டும் புத்துயிர் பெற்றது என்று சொன்னார். அன்றைய தமிழ் முஸ்லிகள் கடை ஊழியர்கள் மலேசியாவில் இந்தியப்பணத்திலேயே ஊதியம் கொடுக்கப்பட்டார்கள்; 1கிலோ இறைச்சியை 54 துண்டுகளாக்கி 54 பேருக்குக் கொடுக்கப்பட்டது; போதிய உணவில்லாது வாய்ந்த கடினவாழ்வை இஸ்மாயில் 'கடை சிப்பந்திகளின் கண்ணீரி'ல் எழுதியதைக் குறிப்பிட்டார். புதுமைப்பித்தன் குறித்து அப்போது நடைபெற்ற சர்ச்சை அச்சூழலில் இருந்த வாசிப்புப்போதாமையையே காட்டியது என்றும் ஆதாரத்துடன் சொன்னார். 1950களுக்குப் பிறகு திராவிடச் சிந்தனைகளும் அண்ணா, கலைஞர் போன்றோரின் திரைப்பட வசனமும் தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்திய பெருத்த தாக்கத்தைத் தன் சொந்த அனுபவங்களுடன் சேர்த்து சுவைபடச் சொன்னார். சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்தபோது எழுதப்பட்ட பாடலைக்குறிப்பிட்டர்.



விரிவாகப் பேசிட நேரமில்லை என்று துவங்கிய சிங்கப்பூரின் முனைவர் சீதாலட்சுமி என்று பாதி நேரத்தை தனது பழைய நான்கு மொழிகளின் ஒப்பீட்டாய்வின் பகுதிகளைப்படித்துக் கழித்தார். 100 பேர் எதிர்பார்த்த இடத்தில் வந்திருந்த கிட்டத்தட்ட 65 பேரும் கொடுக்கப்பட்ட தலைப்பை மீண்டும் மீண்டும் பார்ப்பதும் லேசான சலசலைப்பை ஏற்படுத்தவும் செய்தனர். சுற்றிவளைத்து 'மற்ற மூன்று மொழிகளில் நடைபெறும் பரவலான இலக்கியச் செயல்பாடுகள் தமிழில் இல்லை' என்று சொல்ல முயன்று தமிழில் 1990 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் வெளியான சிற்கதை, ஆய்வு, கவிதை, குழ்ந்தை இலக்கியம் போன்ற நூல்களின் எண்ணிக்கைகளை முன்வைத்தார். குமுதம் போன்ற பத்திரிக்கைகளோடு நின்று போகும் வாசிப்பு குறித்துச் சொன்னவர் விமரிசனங்களை ஏற்றிடும் மனோபாவம் வளரவேண்டும் என்று அக்கறைப்பட்டார். படைப்பிலக்கியம் இடைவெளியில்லாமல் தொடர்ந்து செயபடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தமிழில் உறவு சார்ந்த அனுபவம், மனித பலவீனங்கள், தத்துவங்கள் குடும்ப உறவுகள், நாட்டு நடப்பு, கலப்பு மணம், பெண்முன்னேற்றச் சிந்தனை, உறவின் உண்மை முகங்கள் போன்றவை எழுதப்படுகின்றன என்று சொல்லி இளைஞர்கள் எழுதுவது குறைவாகவே இருப்பது ஒரு குறை தான் என்றார். பேச்சுமொழியிலேயே எழுதும் சிறுகதையின் வரவு குறித்துச் சொன்னதுடன் சிங்கப்பூரில் அமைப்புக்கள் ஒன்று படவேண்டும் என்றார். இஸ்லாமியப்படைப்புகளில் பழக்கவழக்கங்கள் சிறப்பாகப்பதியப்படுவதாகச் சொன்னவர், கவிதையில் நாட்டுத் தலைவர், நாடு, இயற்கை, பொது மற்றும் காதல் ஆகியவை பிரபலமான பாடுபொருட்களாகின்றன என்றார். தமிழ் மொழிப்புலமையைப் பொருத்து 2 பிரிவுகளாக போட்டிகளை அறிவிக்கலாம் என்றும் போட்டியில் தோற்றால் உணர்ச்சிக்குழம்பாகிவிடும் சிறுபிள்ளைத்தனங்கள் களையப்படுதல் வேண்டும் என்றும் சொன்னவர் தமிழில் பொதுவாகவே வாசிப்புப்பழக்கமும் மொழியில் முனைப்பும் இல்லை என்றார். அடுத்த பேச்சாளரை அழைக்கும் முன்னர் நிகழ்வுநெறியாளர், 'ஆய்வாளர்களும் பரவலாய் வாசிக்கவேண்டும்', என்று வலியுறுத்தியதை ஆமோதிக்கும் வகையிலான சிறுசலசலப்பு பார்வையாளர் மத்தியில் எழுந்தது.



மலேசியாவின் இன்றைய தமிழ் இலக்கியம் குறித்து அடுத்து உரையாற்ற வந்த டாக்டர்.கிருஷ்ணன் மணியம் வெகுசன ஆக்கங்களும் காத்திரமான ஆக்கங்களும் படைக்கப்படுவதாகச் சொல்லித் துவங்கி மரபு சிறப்பாக இருப்பதாச் சொன்னார். வானம்பாடிகளின் தாக்கம் நிறைந்த புதுக்கவிதைகளில் சில நல்ல வீச்சுக்களுடன், கவிதையில் சமகாலப்பிரச்சனைகள் சிந்து வடிவிலும், குதிரைப்பந்தயலாவணி போன்றவையும் படைக்கபடுவதாகச் சொன்னார். வெகுசன ஆக்கங்களில் பெண்களை காட்சிப்பொருளாகவும் வக்கிரங்களின் சித்தரிப்பாகவும் காணமுடிவதாகச் சொன்னார். காத்திரம் நிறைந்த ஆக்கங்களில் பொதுவுடைமைச் சிந்தனைகளும், கோட்பாட்டு ரீதியிலான செய்திகளும் விளிம்பு நிலை மாந்தரைக் குறித்துப் பேசும் படைப்புகள் மார்க்ஸிய சிந்தனைதாங்கியவையாகத் தோன்றுகின்றன என்றார். தொலைக்காட்சியின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் மலேசிய சமூகத்தில் அர்த்தமே தெரியாது சுலோகம் சொல்லும் போக்கும், மலேசிய வாழ்க்கைக்கு சம்மந்தமேயில்லாத திரைப்படங்களை தமது சொந்த வாழ்க்கையாகப் பார்த்திடும் குணம் இருக்கிறது என்றார். வீடு இழந்து உடமிகள் இழுந்து தமிழ் சமூகத்தில் குண்டர் கலாசாரமும் வன்முறையும் அதிகமிருக்கிறது என்று அக்கறைப்பட்டார். தமிழர்களின் தோட்டத்து வாழ்க்கையின் பின்னணியைச் சொல்லி, சரியான வழிநடத்துதலோ முன்னோடியோ இல்லை என்று சொன்னார். சமூகத்துக்கு இவர்களின் மேல் பரிவோ அக்கறையோ இல்லை. எழுத்தாளர்கள் சட்டாம்பிள்ளைக்ள் இல்லை என்றாலும் வாழ்க்கையைச் சரிவரப் பதிவது அவர்களின் கடமையாகிறது என்றார். இப்பேச்சாளர் பல சிறுகதைகளிலிருந்து குறிப்பிட்டவரிகளை எடுத்தாண்டு மலேசிய சிறுகதைகள் எப்படி எளியமக்களின், தோட்டத்து மக்களின் கிரானி எனப்படும் முதாலாளிகள் தொழிலாளிகளைக் கசக்கிப்பிழிவது போன்ற பிரச்சனைகளைப் பேசுகின்றன என்று தன் வாதங்களை மிகச் சிறப்பாக முன்வைத்தார். சிறுகதை வடிவமே மலேசியதமிழில்க்கியத்தின் பலம் என்றார். 'காட்டாறு' எனும் மாஜிக்கல் ரியலிஸ ஆக்கமும் மற்றும் தமிழனுக்கே நாடேயில்லை எனும் கூற்றை மறைமுகமாகச் சொன்ன 'குயில் கூவுகிறது' எனும் பின்நவீனத்துவமும் மலேசிய இலக்கியத்தின் முக்கிய பங்களிப்புகள் என்றார். 'Fire' திரைப்படம் வெளியாகும் முன்னரே பெண்களிடையேயான ஒருபால் உறவு குறித்துப்பேசிடும் 'பெண் குதிரை' எனும் நாவலை சை. பீர்முகம்மது அவர்கள் எழுதிவிட்டதாகக் குறிப்பிட்டார். ரெ.கார்த்திகேசு போன்றோரின் பங்களிப்பால் நாவல் வளர்ச்சி மெதுவாகவே இருந்தாலும் சீராக இருப்பதாகச் சொன்னார்.



நவீன வாழ்வின் நெருக்கடியில், மனிதன் அவகாசமற்றவனாகவும், அவசரம் கொள்பவனாகவும், மேம்போக்கானவனாகவும் மாறிவரும் சூழலில், வாசிக்கும் நாட்கள் தொலைக்காட்சியின் முன் மண்டியிடும் நாட்களாகிப் போய்விட்ட இந் நாட்களில் நாளய சிங்கப்பூர் தமிழிலக்கியத்தை கணிப்பதென்பது ஒரு விதத்தில் ஜோதிடம் கணிப்பதைப் போன்றோ, தட்ப-வெப்பக் கணிப்புகளைப் போன்றதாது என்றார் அடுத்து பேச வந்த சுப்பிரமணியன் ரமேஷ். இவர் வடித்தெடுத்து வந்து வாசித்த கட்டுரை முழுமையானதாக இருந்ததாக பலரும் கருத்துரைத்தனர். எதிர்காலத்தை கணிப்பதில் இருவிதமான அணுகுமுறைகளைக் கைக்கொள்ளலாம் என்றார். இப்போதிருக்கும் நிகழ்காலச் சூழலினை, அனுசரித்து அதை நீட்டித்துப் பார்ப்பது, மற்றது தன் கற்பனைக்கேற்ப சாத்தியப் பாடுகளை விரித்துக் கனவு காண்பது. உண்மையான கலைஞன் உருவாக்கப் படுவதில்லை, அவன் உருவாகிறான். இடையறாத தேடலிலும், சுயவிசாரணையிலும், அறத்தின்பால் கொள்ளும் தீராத காதலிலும், தான் கண்டடைந்த விழுமியங்களை சமூகத்தின் முன் வைக்கும் நெஞ்சுரத்திலும் அவன் தன்னை உருவாக்கிக் கொள்கிறான். கலையின் அழகென்பது அலங்கார வார்த்தைகள் அல்ல என்பதும், அது தன்னகத்தே கொண்டிருக்கும் சத்தியத்தின் அழகென்பதும், தன் ஆன்மாவிற்கு ஒளியேற்றும், அதற்கு எதுவுமே விலையாக முடியாதென்பதும் அவனுக்குத் தெரியும். அத்தகைய கலைஞர்கள் சிங்கப்பூரின் படைப்பிலக்கியத்தை வருங்காலத்தில் அலங்கரிப்பார்களா? காலம் மட்டுமே அறியும் அந்த ரகசியத்தை. சூழல், அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தேவைப்படும் கண்ணோட்ட, தளமாற்றங்கள், சில தேவையான தனி மனித மாற்றங்கள், சில தேவையான சமூக மாற்றங்கள் போன்ற ஒவ்வொன்றையும் விரிவாக அலசினார் சுப்பிரமணியன் ரமேஷ். நாளைய சாத்தியப்பாடுகள் குறித்தும் ஒவ்வொன்றாக விரிவாக முன் வைத்தார். 'சிங்கப்பூரில் நாளைய தமிழிலக்கியம் வளமாக இருக்குமா? மகத்தான கலைஞர்கள் தோன்றுவார்களா? நாளையின் நிஜமென்பது இப்போதைய கணத்திலிருந்து துவங்குகிறது. வளமான தமிழிலக்கியத்தின் உருவாக்கத்தில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பிருக்கிறது. அந்தப் பொறுப்பை யாரும் யாருக்குக்குள் திணிக்க இயலாது, அவரவரின் ஆத்மார்த்தமான அக்கறையால் மட்டிலுமே அது சாத்தியம். பொறுப்பை உணர்ந்த அவரவர் சுய-விசாரணையே படைப்பிலக்கியத்துக்கு பலமாகவும் உரமாகவும் அமையும். வாழ்க்கையை அர்த்தப்படுத்திடும் தேடலும் நிச்சயம் இலக்கியத்தை வளப்படுத்தும்', என்று சொல்லி முடித்தார்.



கடைசியாக மலேசிய தமிழ் இலக்கியம் நாளை என்று பேச வந்தார் வித்யாசாகர். தமிழன் வாழ்வை, ப்ண்பாட்டை மற்றும் மொழியைத் தொலைத்த அவலத்தை நகைச்சுவைக்கென பல்வேறு விதமாகச் சொன்னார். முதல் முறையாக வந்த சிங்கப்பூரைப் போற்றி சில வார்த்தைகள் சொன்னார். சிங்கப்பூர் மலேசியா என்று இலக்கியதளத்தில் பிரிக்காமல் இதுபோலச் சேர்ந்து செயல்படும் சாத்தியத்தைக் குறித்தும் பேசினார். அழகியலும் வாழ்க்கையும் அறிந்திராத ஒருவரால் எழுதமுடியாது என்றும் உண்மைகளும் நிதர்சங்களுமே இலக்கியமாகும் என்றும் சொன்ன இவர் மலேசியாவில் இளையர்கள் எழுதாததால் வயதான மூத்த தலைமுறை எழுத்தாளர்களே இப்போதும் காலத்துக்கேற்றாற்போல் எழுதவேண்டியுள்ளது என்றார். இழப்புக்களும் இம்சைகளும் அடையாள இழப்புக்களும் இருக்கும் நிலையில் இளையதலைமுறைக்கு இலக்கியத்தில் ஈடுபட ஏது நேரம் என்று ஆதங்கப்பட்டார். வாசிப்பைப் பொழுதுபோக்காக எப்படிப் பார்க்கிறார்களோ என்று ஆத்திரப்பட்டுப் பேசி அது கடமையல்லவா என்று முடித்தார். வெகுகாலமாக எழுதும் எழுத்தாளர்களிடையே ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு அனுசரித்து ஒற்றுமைபாராட்டிடும் பெருந்தன்மையும் இல்லையாதலால், இவ்விளைஞர்களுக்கு முன்னுதாரணமும் இல்லை. தவிரவும் தொலைக்காட்சியின் தாக்கமும், கைத்தொலைபேசிக்கடிமையான போக்கும் அதிகமிருப்பதால் வாசிப்புக்கும் எழுத்துக்கும் இளையதலைமுறைக்கு நாட்டமில்லை. எழுத்தாளர்களை விட குண்டர்களே பரவாயில்லை என்ற அளவுக்கு சில எழுத்தாளர்கள் தங்களின் கதாப்பாத்திரத்தின் அளவில் கூட நற்பண்பில்லாதவர்களாக இருப்பதாய் அலுத்துக்கொண்டார். திருடனின் பிள்ளை கூட திருடனாகிறான்; ஆசிரியர்களின்/ எழுத்தாளர்களின் பிள்ளைகள் தமிழே படிப்பதில்லை என்று அதிரடியாகத் தாக்கி எழுத்தாளனின் பிள்ளை எழுத்தாளாகும் சாத்தியங்கள் குறைவு என்றும் சொன்னார். 'ஏதோ இதாவது எழுதட்டும்', என்று சொந்தமாக எழுதி, அச்சில் பார்த்துப்பூரிக்கும் இளையர்களைத் தான் ஊக்குவிப்பதாகச் சொன்னார். இன்னும் 10 ஆண்டுகளில் ஒரு புதிய எழுத்தாளர் சமூகம் உருவாகும் என்று நம்பிக்கையுடன் சொன்னார்.



சிங்கப்பூர் மலேசியாவின் வரலாற்றைத் தொடாமல் சிங்கப்பூர் மலேசிய தமிழிலக்கியத்தையும் அலசிடமுடியாதென்ற பொது அவதானிப்பை கருத்தரங்கு கொணர்ந்திருந்தது. 'அச்சு இதழ்கள் தேவையா?', 'எழுதுபவர்களே குறைவாக இருக்கும் போது இஸங்கள் தேவையா?', 'எழுத்தாளர்கள் சட்டாம்பிள்ளைகளா?', 'தனிமனித துதி தேவையா? இலக்கியம் நவீனத்தை நோக்கிப்போக இவ்வகைப்போக்குகள் உதவுமா?', 'படைப்பு யாரைத் திருபிதிப்படுத்தவேண்டும்? படைப்பாளியையா? வாசகனையா? விமரிசகரையா? திறனாய்வாளரை?' என்று பல்வேறு கேள்விகளுக்கு சிங்கப்பூர் சித்தார்த்தன் அவர்களின் ஒருங்கிணைப்பில் ஆறு பேச்சாளர்களும் கேள்விகளுக்கு பதிலளித்தனர். சிங்கப்பூரின் 'வீராசாமி சாலை' குறித்து பேச்சாளர் வித்யாசாகர் கேட்டகேள்விக்கு செ.பா.பன்னீர்செல்வம் அவர்கள் நாட்டுவைத்தியர் வீராசாமி குறித்து விரிவாகச் சொல்லி சாலையின் பெயர்பின்னணியை விளக்கினார். நேரக்குறைவால் குறுகிவிட்ட கலந்துரையாடலில் பாதிக்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய சீட்டுகளை அவ்வந்த பேச்சாளர்களிடம் வெறுமே கொடுத்துவிடவேண்டிய நிலை. மிகவும் ஈடுபாட்டுடன் ஒன்றிப்போயிருந்த பார்வையாளர்களிடையே 'ஒருநாள் கருத்தரங்காக இருந்திருக்கவேண்டும்', என்ற ஒருமித்த கருத்து நிலவியது. நிகழ்ச்சி கிட்டத்தட்ட முழுவெற்றியடைந்தது.



ஜெயந்தி சங்கர்
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

2 கருத்துக்கள்:

கூறியவர்: Blogger Abhay&Shreena

Dear Contributors,

We would like to feature your blog as a tamil literary blog for one of our post. We are from the National Library of Singapore. Please do get back to us should we be able to have your permission. Thank you.Please email at primadonnatella@gmail.com

August 02, 2007 9:55 AM  
கூறியவர்: Blogger www.bogy.in

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

April 15, 2010 10:10 AM  

Post a Comment

<< Home