Wednesday, January 24, 2007

எளிமையாக வெளியீடு கண்ட கனமான நூல்கள்

--- பனசை நடராஜன்


சிங்கப்பூரில் மட்டுமில்லாது இணையம் வழியாக உலகளாவிய வாசகர்களைப் பெற்றுள்ளார் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல் மற்றும் ஒரு ஆய்வு நூல் உள்ளிட்ட இவரது நான்கு நூல்கள் கடந்த ஜனவரி 21ம் தேதி மாலை 5 மணிக்கு சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவில் அங் மோ கியோ நூலகத்தில் வெளியீடு கண்டன.


இந்நிகழ்ச்சியில் நூல் வெளியிடுதல், பெற்றுக்கொள்ளுதல் போன்ற சடங்குகள் இல்லாமல் புதுமையாகவும் எளிமையாகவும் இருக்கும் என்று சொன்னார் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ரம்யா நாகேஸ்வரன். இவர் நூலாசிரியருடன் சேர்ந்து விகான் பிரசுரத்திற்கு 'சிங்கப்பூர் வாங்க' என்ற நூலை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.


நிகழ்வின் முதல் அங்கம் சிறப்புரை. நூல்களைப் பற்றி செரிவான உரை நிகழ்த்தினார் திரு. ராம. கண்ணபிரான். இயற்பியல் பட்டதாரியான ஜெயந்தி சங்கர் 1990ம் ஆண்டு சிங்கப்பூர் வந்தது முதல்; நான்கு ஆண்டுகளுக்கு புத்தக வாசிப்பில் செலவிட்டது, பிறகு எழுதத் துவங்கியது, இதுவரை புனைவு சார்ந்த 5 நூல்களையும், 3 கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளதையும் அறிமுகமாகச் சொல்லிப் பாராட்டினார். அதன் பிறகு, கம்யூனிஸ ஆட்சிக்குப் பிறகு சீனப்பெண்களின் நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், எழாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் பெண்களின் மேம்பட்ட நிலை, பெண்சிசுக்கொலை, பாதங்களைக் கட்டுதல், பலதார மணம் போன்ற சமூக இழிவுகள் எப்போது எவ்வாறு குறைய ஆரம்பித்தது என்று 'பெருஞ்சுவருக்குப் பின்னே' என்ற நூலில் தான் புரிந்து கொண்டவற்றைப் பற்றி விரிவாகக் கூறினார்.


'நியாயங்கள் பொதுவானவை' மற்றும் 'பின் சீட்' ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளிலிருந்து தான் படித்த சிறுகதைகளில் இருந்த கதாமாந்தர்களை அறியா பருவத்தினர் மற்றும் அறிந்த பருவத்தினர் என்று வகைப் படுத்துவதாகக் கூறினார். பதின்பருவத்தினரின் உடல், மன மாற்றங்கள், அவர்களுடைய நண்பர்களின் அணுகுமுறையால் முக்கியத்துவம் பெறுகிறதென்றும், அறிந்த மனிதர்களிடம் தான் தியாக மனப்பான்மையும் மோசமான குணங்களையும் ஒருங்கே பார்க்க முடிகிறது என்றும் சொன்னார். 'வாழ்ந்து பார்க்கலாம் வா' நாவலில் உமா மற்றும் மணி மாமா பாத்திரப்படைப்புகளின் முக்கியத்துவம் மற்றும் நாவலின் ஓட்டத்திற்கு அப்பாத்திரங்கள் எப்படித் துணை புரிகின்றன என்றும் அழகாகச் சொன்னார். அவுன்ஸ் மாமா என்கிற மணி மாமாவின் பாத்திர அமைப்பு இவரைக் கவர்வதாகத் தெரிகிறது. கட்டுரைகள் எழுதும் போது தகவல் சேகரிக்கும் திறனும் சிறுகதைகள் படைக்கையில் மனித மனங்களை ஊடுருவி எழுதும் கலையையும் ஜெயந்தி சங்கர் ஒருங்கே கைவரப் பெற்றிருக்கிறார் என்று முத்தாய்ப்பாகச் சொல்லி முடித்தார்.


'வாழ்ந்து பார்க்கலாம் வா' என்ற நூலைத் திறனாய்வு செய்த மாதங்கி நாவல் வடிவத்தினைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லிவிட்டு நகர்சார் வாழ்க்கை நமது பிள்ளைகளை இயந்திரமாக மாற்றி விட்டது என வேதனையுடன் கூறினார். கிட்டத்தட்ட முழு நாவலையும் அலசி, நாவலில் வாசகன் உணரக்கூடிய ஆச்சரியங்களைத் தொட்டுக்காட்டி, எதிர்மறையான விஷயங்களையும் நேர்மறையாகச் சொல்வது தான் நூலாசிரியரின் சிறப்பு என்றார்.


'பெருஞ்சுவருக்குப் பின்னே' என்ற ஆய்வு நூலைத் திறனாய்வு செய்த ப்ரஷாந்தனின் உரை சிறப்பாக அமைந்தது. 'இதே னூலை வேறு ஒருவர் எழுதியிருந்தால், பெரிய அளவில் அமைச்சரைக் கூப்பிட்டு கோலாகலமாக வெளியிட்டிருப்பார்கள்', என்று துவங்கினார். 'அடங்கியிரு', 'உன்னைக் கடைசியில் வை', 'கீழ்படி' என்று மதக் கோட்பாடுகள் எப்படி சீனப் பெண்களை அடக்கி ஒடுக்கியது என்று விளக்கினார். மரணித்த பாதங்கள், பெண்மொழி போன்ற கட்டுரைகள் தன்னைக் கவர்ந்ததென்றார். குறுகிய பாதங்களே நளினமானது என்று கருதப்பட்டதால், பெண்கள் தங்கள் பாதங்களைக் கட்டிக் கொண்டு எவ்வாறெல்லாம் சிரமப்பட்டனர் என்றும் இது ஒரு கலையாகச் சீனாவில் கருதப் படுகிறது என்றும் வியந்து சொன்னார். ஆண்களால் திருமணப்பொருளாகப் பார்க்கப்பட்ட பெண்கள் தங்களின் ஆற்றாமைகளையும் மனவேதனையையும் சக பெண்களிடம் பகிர்ந்துகொள்ளவென்று உருக்கிப் பாவித்த பெண்மொழி நுஷ¤ குறித்தும் படித்தபோது மனம் கலங்கியதாகச் சொன்னார். சீனப் பெண்களின் வரலாற்றைத் தமிழ்ச்சூழலுக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் ஜெயந்தி சங்கரைப் பாராட்டிவிட்டு ஆய்வுக்கென்று படித்த நூல்களின் பட்டியலைக் கடைசிபக்கத்தில் சேர்த்திருக்கலாம் என்றார். இந்நூல் பரவலாக வாசகர்களைச் சென்றடையவும் உரிய அங்கீகாரம் பெறவும் உதவிட கல்வியாலர்கள் மற்றும் பிரபலங்களை நோக்கி வேண்டுகோள் விடுத்து விட்டு உரையை முடித்தார்.


நூலின் ஓரிரண்டு கதைகளை மட்டும் படித்து விட்டு வந்து திறனாய் செய்யும் தற்காலமரபினை மீறி 16 கதைகளையும் படித்து முடித்துவிட்டு வந்திருப்பதாக வேடிக்கையாகச் சொல்லி ஆரம்பித்தார் 'பின் சீட்' சிறுகதைத் தொகுப்பினைக் குறித்து உரையாற்ற வந்திருந்த அருள் குமரன். குறிப்புகள் கூடக் கொண்டுவந்திருக்காமல், தான் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அம்மா பேசினாள், தலைச்சன், மறுபக்கம், கடைக் கடிதம் போன்ற சிறுகதைகளைக் குறித்து விரிவாகச் சொன்னார். பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்வை, அவரது சொந்த அனுபவமோ என்று சந்தேகித்துவிடும் அளவுக்கு எதார்த்தமாய், வாசகனை உள்ளிழுத்துச் செல்லும் வகையில் மிகைப் படுத்தாமல் அருகில் அமர்ந்து சொல்வது போன்ற உணர்வுடன் நூலாசிரியர் சொல்லியிருப்பதாகக் கூறி வியந்தார். மொத்தத்தில் 'பின் சீட்' நிச்சயம் பின்னால் இல்லை என்று தமிழ்த் தொலைக் காட்சி பாணியில் முடித்தார்.
சிறுகதைகள் யாவும் திரைப் படங்கள் பார்ப்பதைப்போல உணர்ந்ததாகச் சொல்லி ரத்தினமாய் முடித்தார் 'நியாயங்கள் பொதுவானவை' சிறுகதைத் தொகுப்பினை ஆய்வு செய்ய வந்த ரத்தின வியாபாரி ஜாகுர் ஹ¤ஸெயின். நூலைப் படிக்காமலே வந்து பேசியதாகத் தானே ஒப்புக்கொண்ட இவர் எப்படி இப்படி உணர்ந்திருக்க முடியும்? ஆனால், நூலைப் படித்த இவரின் நண்பர்கள் உணர்ந்ததாகத் தானே சொன்னார்.


அடுத்து பார்வையாளர்களிடமிருந்து கேள்விகள் எழுந்தன. சீனப் பெண்களைப் பற்றி எழுதக் காரணம் என்ன என்று கேட்டபோது, தான் சில ஆண்டுகளுக்கு முன்ன 'பசித்த ஆவிகள் விழா' குறித்த கட்டுரை எழுதும் போது, சீனச் சமூகத்தில் பெண் ஆவிகளுக்கு மட்டும் படையல் இல்லை என்று அறிந்தபோது மிகுந்த ஆச்சரியம் கொண்டதாகவும், சமூகத்தில் சீனப் பெண்களின் நிலை தான் என்ன என்று அறியத் தலைப்பட்டதாகவும், ஆய்வுகள் துவங்கியதாகவும் சொன்னார் ஜெயந்தி சங்கர். அச்சிந்தனையே நூலை எழுதுவதற்கு உந்துதலாக அமைந்தது என்றார்.
இந்நூலை எழுத சீனாவுக்க்குச் சென்றீர்களா என்று ஒருவர் கேட்டார். சீனாவுக்குப் போகவில்லை என்றும், நூலகத்தின் நூல்கள், இணையம், சீனத் தோழிகள் ஆகிய திசைகளிலிருந்து பெற்ற தகவல்களே நூலாக்கத்திற்கு உதவின என்றார்.


சீனர்களின் எந்தக் குழுவினரிடம் பாதங்களைக் கட்டும் பழக்கம் இருக்கிறது என்று ஒரு வர் கேட்டதற்கு, சீனத்தில் அது பொதுவான பழக்கம் என்றும், குறிப்பட்ட வட்டாரத்திற்குரியதல்ல என்றும் சொன்னார். தான் சீனப் பெண்களின் வரலாற்றைக் காலக்கிரமத்தில் எழுதாமல், சீனப்பெண்களின் சமூகச் சிக்கல்களையே முதன்மைப் படுத்தியுள்ளதாகக் கூறினார். அத்துடன், மற்ற பெண்ணிந்த்தைப் போலவே சீனப்பெண்களின் வாழ்விலும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருப்பதாகச் சொன்னார்.


நீங்கள் சிறைச் சாலைகுறித்து எழுதுவது எப்படி என்று ஒருவர் கேட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு தோழி ஒருவரின் கணவர் 'white color crime'க்காக சிறைக்குச் சென்றார். தோழி மாதாமாதம் அவரைக் கண்டு விட்டு வந்து சொன்ன செய்திகள் மனதிற்குள் இருந்தன என்று பதிலளித்தார்.


தன்னை எழுத்தாளர் என்று சொல்லிக்கொண்ட முதியவர் ஒருவர் எழுந்து சிங்கப்பூரில் கதை எழுத கரு கிடைக்கவில்லை என்று தான் நினைத்திருக்கையில் இவ்வளவு திறம்பட சிங்கப்பூர் சூழல்களைக் கையாண்டு எழுதிவருகிறீர்களே என்று சொல்லிப் பாராட்டியதோடு, தகுந்த அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்று அக்கறையுடன் கூறினார். அவருக்கு எதிர்வினையற்றும் வகையில் நூலாசிரியர் சிறுகதை வடிவம் ஒரு பக்கக் கதை, கடுகுக் கதை என்றெல்லாம் சிதைந்து வருகிறது என்று வருத்தப்பட்டு, திடீர் திருப்பம் பாடம் புகட்டு தொனி போன்றவற்றை நம்பி நவீன சிறுகதை இப்போது இயங்குவதில்லை. வாசகனுக்குக் கொடுக்கக்கூடிய 'அனுபவம்' சார்ந்தே இயங்குகிறது என்றார்.


நிகழ்வின் இறுதியில், நூலக வாரியம், தமிழ் முரசு, திண்ணை, பதிவுகள், தமிழ்நேசன் உள்ளிட்ட அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி கூறி நூலாசிரியர் நன்றியுரை ஆற்றினார்.


இந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட நான்கு நூல்களுமே தரமானவை என்பதில் ஐயமில்லை. குறிப்பாக 'பெருஞ்சுவருக்குப் பின்னே' என்ற நூல் சீனச் சமூகத்தின் ஒரு பகுதியை நமக்குக் காட்டும் காலக் கண்ணாடி. தேனி போல் உழைத்து இந்நூலை எழுதியுள்ளார் ஜெயந்தி சங்கர். ஆனாலும், காலத்துக்கேற்றபடி பகட்டான விளம்பரமோ மிகைப் படுத்தப்பட்ட நடவடிக்கைகளோ இல்லாமல் வெளியாகியிருக்கின்றன நூல்கள். சரியான ஆதரவு இல்லை என்றே சொல்லிவிடலாம். வரும் காலங்களிலாவது தமிழ்ச் சமூகம் வாசித்துப் பாதுகாக்கக்கூடிய இது போன்ற நூல்களுக்கு ஆதரவு அளித்தால் தான் காலத்தைக் கடந்து நிற்கும் இது போன்ற நூல்கள் தோன்ற வழி பிறக்கும்.
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்: