Monday, May 09, 2005

த்தோம் த்தோம் சந்தித்தோம் !

தொகுப்பு : ஜெயந்தி சங்கர்மூன்றாம் இலக்கிய சந்திப்பு

மே 8ஆம் தேதி, அதாவது நேற்று நான்கு மணிக்கு சிங்கப்பூரின் அங்க் மோகியோ நூலகத்தில் சிங்கப்பூர் வலை / இணைய நண்பர்களின் மூன்றாம் சந்திப்பு நடைபெற்றது. 9 பிப்ரவரி, மீண்டும் 20 மார்ச் ஆகிய சந்திப்புக்களுக்குப் பிறகு இது மூன்றாவது இலக்கியச் சந்திப்பு ஆகும்.

இடையில் குறுகிய காலத்தில் சிங்கப்பூர் கலையிலக்கியக்குழு நண்பர்களால் (சிங்கை முரசு) ஏற்பாடுசெய்யப்பட்டு 24 ஏப்ரல் அன்று நடந்த மலேசிய எழுத்தாளர் திரு ரே. கார்த்திகேசு அவர்களின் நூல் வெளியீட்டு விழாவை மறந்துவிடமுடியாது.

மூன்றாம் இலக்கிய சந்திப்பு ஒரு கலை தொடர்பானதாக அமைந்து பங்குபெற்ற எல்லோரையும் மகிழ்வித்தது. அஜீவன் என்றொரு கலைஞரைச் சந்திக்கவிருந்தோம். தவிர்க்க முடியாத சில காரணங்களினால், அவரால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமுடியாது போனது. நல்லவேளை ஈழநாதனிடம் அவரின் குறும்பட வட்டுக்கள் இருந்ததால், சந்திப்பு நிறைவாய் அமைந்தது.

அஜீவன்

அஜீவனைப் பலருக்கும் தெரிந்திருக்கலாம். அறியாதவர்களுக்கு சில தகவல்கள். தமிழ்ச் செல்வம் என்ற அஜீவன் இலங்கையில் பிறந்தவர். சிங்கப்பூரில் வளர்ந்தவர். தனது 'மூன்றாவது' கண்ணால் உலகைச் சுற்றிப் பார்ப்பவர். உலகெங்கும் போகுமிடமெல்லாம் தன் அடையாளத்தை விட்டுச் செல்லும் பழக்கமுடையவர். எதார்த்தமாய் காட்சிகள் அமைப்பதில் ஆர்வமுடைய இவர் பல இந்திய மொழிப்படங்களில் பணியாற்றி அனுபவப் பட்டவர். பிழைதிருத்தம், ஸ்கிரிப்ட் எழுதுதல் மற்றும் இயக்குதல் ஆகிய வெவ்வேறு துறைகளில் ஈடுபாடு கொண்டு திறனை வளர்த்துக் கொண்டுள்ளார். அஜீவன் சுவிஸ்ஸில் மட்டுமில்லாது உலகெங்கும் உள்ள தமிழ் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர்.யாசீர்

தெமாஸிக் பாலிடெக்னிக்கில் படித்து முடித்துவிட்டிருக்கும் 21 வயது இளையர். இவரின் இலட்சியம் இந்தியக் கலைஞர்களை இயக்குவது. இன்னும் 10 வருடங்களில் இந்த முழுநீளப் படத்தை இயக்கிச் சாதிக்கப் போகிறாராம். இலக்குடனும் துடிப்புடனும் செயல் படுகிறார். இன்னும் அனுபவம் இல்லை என்று நேர்மையாக ஒத்துக்கொண்டு தனக்குத்தெரிந்ததைப் பகிர்ந்து கொண்டார். பெற்றோர் ஆதரவு கிடைத்திருப்பதையும் தன்னுடைய பாடத்தின் ஒரு பகுதியான குறும்படத்தைத் தன் தாய் மொழியில் இயக்கியதைப் பெருமையாக நினைப்பதாகவும் சொன்னார். 'பொம்மை' க்கு அவருக்கும் B + தான் கிடைத்தாம். ஆங்கிலத்தில் இயக்கியிருந்தால் நிச்சயம் A கிடைத்திருக்கும் என்றாலும் தமிழில் இயக்கியதால்தான் தான் அறியப் பட்டதாகவும் அந்த இயக்கம் நல்ல அனுபவமாய் அமைந்தது என்றும் கூறினார். sub title சம்பந்தமாகவும் தேர்வாளர்கள் குறைகள் சொன்னார்களாம்.
லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடக்கவிருக்கும் போட்டி ஒன்றுக்கு இதே 'பொம்மை'யை மீண்டும் எடுத்து மெருகூட்டி அனுப்பப் போகிறாராம்.

குறும்படம்நிகழ்ச்சியின் தொடக்கமாக அஜீவனது 'எச்சில் போர்வை' என்ற குறும்படம் திரையிடப்பட்டது. திரையிடப்பயன்படும் ப்ரொஜெக்டர் கணியுடன் இணைக்கப் பட்டிருந்தது. அங்கேயிருந்த ஸ்பீக்கர் கொஞ்சம் சோதித்தது. அருள் குமரனும் ஈழநாதனும் சேர்ந்து, அங்கேயிருந்த நூலக ஊழியர்களையும் கேட்டு, வேறு ஒரு ஜோடி ஸ்பீக்கரைக் கேட்டு வாங்கிப் பொருத்தினார்கள். இதற்குள் கேட்ட லேசான ஒலியிலேயே நாங்கள் அந்தப் படத்தை இருமுறை பார்த்து விட்டோம். ஸ்பீக்கர் பொருத்தி மீண்டும் ஒரு முறை பார்த்தோம்.

'செருப்பு' என்ற குறும்படம் தான் மிகவும் பிடித்தது பொதுவாக எல்லோருக்கும். களம் இலங்கைக் கிராமம். புதுச் செருப்புக்கு ஆசைப் பட்டு காசுசேர்த்து, அப்பா வாங்கி வந்த செருப்பைப் போட்டுக்கொள்ள முடியாதபடி ஒரு காலை நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிக்கு பலி கொடுக்கிறாள் சிறுமி. இடதுகால் செருப்பை மட்டும் அணியும் காட்சியுடன் முடிகிறது. வறுமையைச் சொல்லும் ஆழமான காட்சிகள் அருமையாகவும் மிக எதார்த்தமாகவும் இருந்தன. இந்தப்படம் ஈழநாதனின் தேர்வு. இது ஏழில் ஒன்றாம். எல்லாமே யாழ்ப்பாணத்தில் 3 நாட்களுக்கு நடந்த பயிற்சிப்பட்டறையின் போது எடுக்கப்பட்டவையும் (Gautham மற்றும் குழுவினரால்). படத்தைப்பார்த்துக் கொண்டே கொடகொடவென்று கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன் நான். கண்ணைத் துடைத்துக்கொண்டே இடப்பக்கம் திரும்பினால், ரம்யாவும் என்னைப்போலவே அழுதுகொண்டிருந்தார்.

தெமாஸிக் பாலிடெக்னிக்கில் படித்தபோது யாசீர் எடுத்த படம் பொம்மை. ஸ்பைடர் பேன் பொம்மை வாங்க நினைக்கும் சிறுவன் பகலுணவைத் தியாகம் செய்து காசு சேர்க்கிறான். கடைசியில் அதைத் தொலைத்தும் விடுகிறான். அழுது ஓய்ந்து மீண்டும் எப்படியாவது சேர்த்து பொம்மையை வாங்குவேன் என்று சொல்லிக்கொண்டே போகிறான். அந்த விடாமுயற்சியைத்தான் சொல்ல நினைத்தாராம் யாசீர்.

அஜீவனின் 'நிழல் யுத்தம்' படம் ஐரோப்பியக் களம். கணவன் மனைவிக்குள் நடக்கும் மனப் போராட்டம். உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். இசை கச்சிதம். இயல்பான படம்.வந்திருந்தோர்

சிங்கை முரசு/ சிங்கப்பூர் கலை இலக்கியக் குழுவைச் சேர்ந்த 10 பேரும். மேலும் பார்வையாளர்களாக 12 பேரும் வந்திருந்தனர். நான் எதிர்பார்த்து வராதோர், பனசை நடராஜன், எம். கே. குமார், பாலு மணிமாறன் மற்றும் ரமா சங்கரன்.கேள்வி / பதில்

எச்சில் போர்வை படம் முடிந்ததும் எழுந்த கேள்வி -- அந்தத் தலைப்புக்கு என்ன பொருள்?

அதற்கு ஈழநாதன் அளித்த பதில் -- வண்ணத்துப்பூச்சியின்/புழுவின் எச்சிலால் பின்னப்பட்டிருக்கும் புழுக்கூடு போல, வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சுவிஸ் வாழ்க்கை எப்படியொரு மாயத் தோற்றமாக இருக்கக்கூடும் என்ற பொருளில் அமைந்த தலைப்பு.

பொம்மை குறித்து எழுந்த கேள்விகள் - சிங்கப்பூரின் சூழலில் $10 க்கு ஒரு பொம்மை வாங்க முடியாதா?

பட்டினிகிடந்து காசு சேர்க்கிறானே, அம்மா கேட்கமாட்டாளா?நிகழ்வின் போது காதில் வந்து மோதிய சில கலாய்ச்சல்கள்

==>'நிழல் யுத்தம்' ஓடிக்கொண்டிருக்கும்போது
படம் முழுக்க ஈழத்தமிழில் இருந்ததால், இதற்கு 'தமிழ்' subtitle வேண்டும்
==> நெத்திச் சுட்டியெல்லாம் வைத்துக் கொண்டுதான் கோவிலுக்குப் போவார்களா ஐரோப்பாவில் தமிழர்கள்
==> விருந்தினரே வராம ஒரு நிகழ்ச்சியா


இறுதியில் நிகழ்வுக்கு அப்பாற்பட்ட கலந்துரையாடல்

மானசாஜென் ரமேஷ் மற்றும் அன்பு கொண்டு வந்திருந்த புத்தகங்கள் நண்பர்களுக்குள் பகிர்ந்துகொள்ளப் பட்டன. இரவலாகத்தான் !
இன்னும் நிறைய ஆக்கப்பூர்வமான நிகழ்வுகளுக்கான திட்டங்கள் உண்டு. எல்லோரும் சேர்ந்து செய்யவிருக்கிறோம். அவற்றைப் பற்றியும் கடைசியில் உட்கார்ந்து பேசினோம். அருள் குமரன் தமிழ் வலைப்பதிவுகளையே கைத்தொலைபேசி வழியே பயணத்தின் போது படிக்கும் சாத்தியக்கூறு குறித்துச் சொன்னார். ஒரு வெள்ளோட்டமும் காட்டினார். அருள் ஏராளமான யோசனைகள் கைவசம் வைத்திருக்கிறார். ஈழநாதனும் தான் கலை இலக்கியத்தில்.மாப்பிள்ளையில்லாமல் கல்யாணமே நடந்துவிடுகிறது. இதெல்லாம் எம்மாத்திரம். அஜீவனின் குறும்படவட்டுக்களையும் இரண்டாவது விருந்தினரான யாசிரையும் வைத்து நடத்திவிட்டோமே நிகழ்வை. இதுவே சடங்குபூர்வமாக நடக்கும் சம்பிரதாயக் கூட்டமென்றால் கொஞ்சம் இக்கட்டாகிப்போயிருக்கும். எங்களுடையது 'சந்திப்பு' . சின்ன குழப்பத்துடன் (அஜீவன் வராததால்) தொடங்கி பின் தொய்வோடு (ஸ்பீக்கர் பிரச்சனை) தொடர்ந்து, பின் ஈடுபாட்டுடன் நடந்து, நிறைவாகவே முடிந்தது. எல்லோருக்குமே திருப்தியாக இருந்தது.

என் கவலை

அஜீவன் நல்லபடியாக சிங்கப்பூர் வந்தாரா? அல்லது கிளம்பவேண்டிய ஊரிலாவது நலமாக இருக்கிறாரா? என்பதே. இது குறித்து நண்பர்கள் சொல்லவேண்டும்.


மீடியா

மீடியா கார்ப் என்றறியப்படும் ஊடகத்திலிருந்து வந்திருந்தவர்கள் கொஞ்சம் படம் எடுத்துவிட்டு, யாசீரைப் பேட்டி கண்டு விட்டுப்போனார்கள். அஜீவன் இருந்திருந்தால், அவருடைய பேட்டி ஒன்று நன்றாக அமைந்திருக்கும்.

நன்றி

துடிப்போடு செயலாற்றிய ஈழநாதன் & அருள் குமரன், நூலக வாரியத்தின் தோழி திருமதி புஷ்பலதா மற்றும் அனைத்து நண்பர்கள்.

மலரும் நினைவுகள்

1 ) மூர்த்தி எல்லோரையும் சந்திக்க மிகவும் ஆசைப்பட்டு, குமாரிடம் பேச, குமார் சித்ரா ரமேஷ¤டன் சேர்ந்துகொண்டு முதல் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். தீவிரமான விழைவுக்குத் தான் எத்தனை பலம் !அது கடந்த 2005, பிப்ரவரி 9 ஆம் தேதி. எதிர்பாராமல் நா.கண்ணன் கலந்துகொண்டது இனிய அதிர்ச்சி எங்களுக்கெல்லாம்.

'நான் அவனில்லை/அவளில்லை'

'தொழில் நுட்பம்'

'பின்னூட்டங்கள்',..........

என்று கலந்துரையாடல் விரிந்து, 4-5 மணிநேரம் போனதே தெரியாமல் இனிமையாக அமைந்தது.

2) முதல் சந்திப்புக்கு வராத ரம்யாவும் மானசாஜென் ரமேஷ¤ம் இரண்டாம் சந்திப்புக்கு வந்திருந்தனர். கடந்த 2005, 20 மார்ச் அன்று நடந்த இந்த சந்திப்பிற்கு துளசி கோபாம் நியூஸிலந்திலிருந்து வந்திருந்தார். அதாவது அவர் வந்திருந்த போது நாங்கள் சந்தித்தோம்.

மானசாஜென் ரமேஷின் ஓவியங்கள் கண்ணுக்கு விருந்தாக
அன்பு கொண்டு வந்திருந்த புத்தகங்கள் கருத்துக்கு விருந்தாக
மூர்த்தி மற்றும் பனசை நடராஜன் கவிதைகள் பிரசுரம் பற்றிப் பேசி சில சிரிப்புவெடிகளுக்கு வழிவிட
மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் பற்றி மானஜென் ரமேஷ் மற்றும் ஈழநாதன் பேசியவை காதுக்கும் கருத்துக்கும் விருந்தாக
அருளின் தொலைபேசிப் புத்தகம் பிரமிப்புக்கு விருந்தாக
அமைந்தன.

சிலபல திட்டங்களும் தீட்டப்பட்டன.தாய்மார்களுக்கும் தாயுமானவர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் ! நன்றி.

தொகுப்பு : ஜெயந்தி சங்கர்
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்: