Wednesday, April 06, 2005

உலகின் முதல் தமிழ் அசைபட இணையச் செயலி - ஒரு அறிமுகம்

(Words first Tamil online animation tool)
சென்ற ஆண்டு ஆகஸ்டு 9 அன்று (சிங்கையின் தேசிய தினம்) இணைய வெளியீடு கண்ட இந்த செயலிக்கு இப்போது 66 பயனர்கள் உள்ளனர். போதிய விளம்பரமும் விளக்கமும் இல்லாததுதான் தொலைபேசிவழி இணைப்பில்கூட பயன்படுத்தக்கூடிய இந்த இலவசச் செயலி குறைவான பயனர்களை கொண்டிருக்கக் காரணம். அந்த குறையை களைவதே இந்த பதிவின் முக்கிய நோக்கம்

அசைபடக்கலை தாளிலிருந்து கணினிவரை - சிறு அறிமுகம்

ஆரம்ப நாட்களில் அசைபடங்களை உருவாக்குவதில் அதிக சிரமம் இருந்தது, வினாடிக்கு 24 படங்கள் வீதம் தாளில் வரைந்த்துகொண்டு ஒவ்வொன்றாக அடுத்தடுத்து புகைப்படம் எடுத்தார்கள். பிறகு செல்லுலோஸ் அட்டைகளில் வரவு அசைபடத்துறையில் பெரும் மாறுதலை கொண்டுவந்தது. கண்ணாடி போன்று ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட செல்லுலோஸ் அட்டைகளை உபயோகித்து ஒரே நேரத்தில் பலரும் ஒரே படத்துக்கான பல பாகங்களை தனித்தனி அட்டைகளில் வரைந்து பின் அவைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி படமெடுப்பார்கள். வரைந்த இடங்கள் போக மிச்சமிருக்கும் இடம் கீழ் இருக்கும் அட்டையில் வரையப்பட்டதை காட்டும். கதாபாத்திரங்களைத் தனித்தனி அட்டைகளில் வரைந்துகொள்வதால் விருப்பம் போல நகர்த்தி படம் பிடிக்கலாம். இதனால் அசைபடக்கலைக்கு செல் அனிமேஷன் என்ற பெயர் ஏற்பட்டு நிலைத்தது.

ஒரு கலைஞரே எல்லா கதாபாத்திரங்களின் முகபாவத்தையும் சிறப்பாக பிரதிபலிக்கும்படி வரைவது கடினம் எனவே செல்லுலோஸ் அட்டையில் ஆளுக்கொரு கதாபாத்திரத்தை தொடர்ந்து வரைவார்கள்

தவிர ஒரு வினாடிக்கு 24 படம் என்றால் ஒரு கார்டூன் கலைஞர் முழுக்க தன் கையாலேயே வரைய வேண்டும் என்றால் அரை மணிநேர படைப்பை அவர் நிகழ்த்த எத்தனை நேரம் தேவைப்படும்?

எனவே அவர் (Key Artist) முக்கிய மாற்றங்களை மட்டும் வரைவார். அவற்றிற்கு கீ ஃப்ரேம் (Key Frame) என்று பெயர். இரண்டு கீ பிரேமுக்கு இடையே உள்ள படிப்படியான மாற்றங்களை மற்ற கலைஞர்கள் கவனித்துக்கொள்வார்கள் அவர்களுக்கு இன்பிட்வீனிங் ஆர்டிஸ்ட் (Inbetweening Artist) என்று பெயர். இது நாளடைவில் சுருங்கி டுவீனிங் (Tweening) ஆர்டிஸ்ட் என்று மாறிவிட்டது. இந்த வேலைக்கும் டுவீனிங் என்றே பெயராகிவிட்டது.

பின்னர் கணினிகளை அசைபடக்கலைக்கு பயன்படுத்தத் துவங்கினர். செல்லுலோஸ் அடுக்குகள் (Layers) போன்ற மெய்நிகர் அடுக்குகளை கணினிகள் திறம்பட சமாளித்தன. அவை மட்டுமல்ல பெரும்பாலான டுவீனிங் வேலைகளை தாங்களே பார்த்துக்கொண்டன.

கனவுலகம்

நீங்கள் பார்க்கப் போகும் இந்தச்செயலியும் மேற்கண்ட செயல்களை எளிதில் கையாளக் கூடியது அதன் அடிப்படைகளை எளிமையாக போதிக்கக் கூடியது.

இதில் பத்து காலப்பகுப்புகள் (Key Frames) உள்ளன. உங்களால் உள்ளிடப்பட்ட வடிவங்கள் இந்த பத்து காலப்பகுப்பிலும் எந்தெந்த இடத்தில் இருக்கவேண்டும் என்று கீ ஆர்டிஸ்டான நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அந்தந்த இடங்களுக்கு செல்ல வேண்டுமானால் எப்படி நகர வேண்டும் என்பதை டுவீனிங் ஆர்டிஸ்டான கணினி பார்த்துக்கொள்ளும்.

முதன் முதலாய் ...

உங்கள் பெயரை பதிந்துகொண்டு உள் நுழைந்த பின் "திற" என்னும் விசையை அழுத்தி "மீன் முத்தம்" எனும் எடுத்துக்காட்டை திறக்கவும் பின்னர் "Play" விசையை அழுத்தி ஒரு முறை எப்படி இயங்குகிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

பின்னர் மீன் வடிவத்தை சொடுக்கி வேண்டிய மாற்றங்கள் செய்து மீண்டும் இயக்கிப் பார்க்கவும்

மிச்ச விஷயங்கள் உங்களுக்கு புரியாதவையாக இருக்காது என்று நம்புகிறேன். புகுந்து விளையாடுங்கள் :)

தொடுப்பு

உங்கள் நண்பர்களுக்கும் கனவுலகை அறிமுகப்படுத்த கீழ்க்கண்ட நிரல்துண்டை உங்கள் வலைப்பதிவின் டெம்ப்ளேட் பகுதியில் சேர்த்து உதவலாம்


இந்த நிரல் சேர்க்கப்பட்ட பின் கீழ்க்காணும் இணைப்பு உங்கள் வலைப்பதிவில் தென்படும்



தமிழ் அசைபட இணையச் செயலி
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

Sunday, April 03, 2005

தீவிர இலக்கியம் என்றால் என்ன?

வட அமெரிக்க இலக்கிய இதழ் 'தென்றல்'. இதன் ஆசிரியர்கள் P.அசோகன், மணி M. மணிவண்ணன் மற்றும் மதுரபாரதி ஆகியோர். மார்ச் மாத இதழில் 'அம்மா பேசினாள்' என்ற என்னுடைய கதை பிரசுரமாகியுள்ளதால், மார்ச் இதழின் ஒரு பிரதி கிடைக்கப்பெற்றேன்.

பகிர்ந்துகொள்ள இதழில் நிறைய இருந்தாலும், 'இளம் எழுத்தாளர்கள் குழுக்களில் மாட்டிக்கொள்ளக்கூடாது' என்று அக்கறையோடு கூறியுள்ள திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் நேர்காணலில் இருந்த பல கேள்விகளில் ஒரு கேள்வி, 20 மார்ச் அன்று நடந்த நமது இரண்டாவது கூட்டத்தின்போது எழுப்பப்பட்ட கேள்வியின் தொடர்பானது என்று தோன்றியதால், அதை மட்டும் தட்டச்சி இங்கு இடுகிறேன். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் பதில், இதழில் திருப்பூர் கிருஷ்ணன் அளித்த பதில் என்பதை மீண்டும் சொல்லிக்கொண்டு, தொடர்ந்து படிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்,.

அன்புடன் ஜெயந்தி சங்கர்

-----------------------------------------------------------------

நேர்காணல் : கேடிஸ்ரீ
தொகுப்பு: மதுரபாரதி


கே: தீவிர இலக்கியம் என்றால் என்ன?

பதில் :

பல்வேறு வகை வாசகர்கள் பல்வேறு வகை மனத்தளங்களில் இயங்குகிறார்கள்.

ஒருவருடைய மனத்தினுடைய உயரம் என்பது இன்னொருவரின் மனத்தின் உயரம் போன்று இருக்காது. உலகம் பலவகைப்பட்டது. ஏராளமான வாசகர்கள் இருக்கிறார்கள்.

ஆழ்ந்த இலக்கியம் என்பது மனம் முதிர்ந்த வாசகர்களுக்காக வாழ்க்கையினுடைய உண்மைகளை ஒரு விசாரணையின் மூலம் தேடிக் கண்டுபிடித்து இப்படியெல்லாம் வாழ்க்கை இருக்கிறது என்பதைச் சொல்கிறது.

சா.கந்தசாமி, ஜெயமோகன், சுந்தரராமசாமி, ஜானகிராமன் போன்றோரின் நாவல்களைப் பார்த்தால், அவற்றில் வாழ்க்கையைப் பற்றிய விசாரிப்பு இருக்கும். வாழ்க்கையின் ஆழ்ந்த தத்துவங்கள் அவர்களின் நாவல்களில் இருக்கும். உலகில் மனிதன் பிறக்கிறான், ஒருநாள் இறக்கிறான். இடையில் இருக்கும் வாழ்க்கையில் பல்வேறு வகையான கருத்துப்போக்குகள், உணர்ச்சிகள் அவனை அலைக்கழிக்கின்றன. அதைப்பற்றிய ஆழ்ந்த விசாரணையாக அமைவது ஆழ்ந்த இலக்கியம்.

மேலோட்டமான எழுத்து என்று ஒன்று இருக்கிறது. அந்த வாசகத் தளத்தில் இருப்பவர்களுக்கு அத்தகைய எழுத்து தேவையானதாக இருக்கும். அவர்களுக்காக அத்தகைய எழுத்து வரும். ஆனால், அவை இலக்கியமாகா. அதே சமயத்தில் இன்றைக்கு இருக்கிற பல நவீன இலக்கியவாதிகள் ஏதோ சொல்லவருவதாக நினைத்துக்கொண்டு யாருக்கும் புரியாத மொழியில் ஒரு போலி இலக்கியம் செய்து, பம்மாத்துசெய்வதும் இலக்கியமல்ல. இலக்கியத்துக்கு நாம் இலக்கணம் வகுத்து, இப்படித்தான் இலக்கியம் என்று சொல்வதைவிட கு.ப ராஜகோபாலன், கு. அழகிரிசாமி, புதுமைப்பித்தன் போன்ற முன்னோடி எழுத்தாளர்கள் எழுதியதைப்போன்ற எழுத்துக்கள் இலக்கியம் என்று சொல்லலாம்.

இவை ஏன் இலக்கியத்துக்கான இலக்கணம் என்றால் இவர்கள் வாழ்க்கையைப் பற்றிய விசாரணைகளில் இறங்குகிறார்கள். இவர்களின் எழுத்தைப் படிப்பதன் மூலமாக நமக்கு உள்ளுணர்வில் ஒரு மேம்பாடு ஏற்படுகிறது. இதுபோன்ற விஷயங்களை அத்தகைய தளத்தில் சொல்வது இலக்கியம் ஆக முடியும்.

எல்லாம் இலக்கியம் என்று சொல்லமுற்பட்டால் மர்ம நாவல் கூட இலக்கியமாகிவிடும். அவை எல்லாம் தமிழ் எழுத்தின் வகைகள் என்று சொல்லலாம். எல்லா விதமான எழுத்துக்களும் தேவைதான். அவற்றையும் சிலர் விரும்பிப் படிப்பார்கள். சமூகவிரோதம் இல்லாத எழுத்து எதுவாக இருந்தாலும் அது சமுதாயத்திற்குத் தேவைதான்.

தற்போது பொதுவுடைமைக் கட்சியில் ஈடுபாடு உடையவர்கள் பலர் எழுதுகிறார்கள். அவர்களின் எழுத்து நேரடியாக, கருத்துகளை அப்படியே சொல்வதுபோல் இருக்கிறது. அவர்கள் இலக்கிய வடிவத்தைவிடக் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், பொன்னீலன், மேலாண்மை பொன்னுசாமி, சின்னப்பபாரதி போன்றோர் அதை அடக்கி வாசிக்கிறார்கள். பொதுவுடைமைக் கருத்துகளை வெளியில் துருத்திக்கொண்டு நிற்காமல் உள்ளடங்கிக் கொடுப்பதால், அவை இலக்கியமாகின்றன.

ஒரு விஷயத்தை இலக்கியம் அல்லது இலக்கியமல்லாதது என்று பிரிப்பது எப்படி என்றால், அந்த இலக்கியம் மனித வாழ்விற்குப் பயன்படுகிறதா, இல்லையா என்பதைப் பொறுத்தது. நான் பொதுவுடைமைவாதி அல்ல. ஆனால், நான் பொதுவுடைமை சார்ந்த இலக்கியத்தை ரசிக்கிறேன். கொண்டாடுகிறேன். இதற்குக் காரணம், எல்லோருக்குமே ஏதாவது ஒரு வயதில் பொதுவுடைமைக் கண்ணோட்டம் இருந்திருக்கும். உழைப்பாளிகளும் தொழிலாளர்களும் மகிழ்ச்சியான வளமான வாழ்க்கை வாழவேண்டும் என்பது ஒருவகையில் பார்த்தால் வள்ளலாரின் தத்துவம்தான். ஆகையால், அடிப்படையில் அதில் எனக்கு எந்தவித வேறுபாடும் இல்லை. கட்சிசார்ந்து நான் இயங்கவில்லை. அந்தக் கருத்தின் தாக்கம் எல்லோருக்கும் ஏன் மனித குலத்துக்கே, இருக்கிறது. நம் தேசப் பிதா காந்தியின் லட்சியத்தைப் பார்த்தால் அதுவும் பொதுவுடைமை இலட்சியத்துடன் தான் இணையும். ஆனால், வழிகள் தாம் வெவ்வேறு.

எல்லா இலக்கியப் போக்குகளும் தமிழுக்குத் தேவைதான்.

------------------------------------------------------------------

(தட்டச்சு : ஜெயந்தி சங்கர்)
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்: