Sunday, October 16, 2005

சுந்தர ராமசாமி-காற்றில் கலந்த பேரோசை

தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவரான சு.ரா அமெரிக்காவில், 14-அக்டோபர்- 2005 அன்று இந்திய நேரப்படி அதிகாலையில் காலமானார்.

ஒரு படைப்பாளியின் இடம், அந்தப் படைப்பாளி வாழ்க்கையை எவ்வளவு தீவிரமாகவும், ஆழமாகவும், உண்மையாகவும் அனுகுகிறார், அதன் மூலம் அடையும் விகாசத்தை எவ்வளவு நேர்மையாகவும், கலாபூர்வமாகவும் வெளியிடுகிறார் என்பதைப் பொறுத்தது.

ஒரு கலைஞன் நமக்கு என்னவாக அர்த்தப்படுகிறான் என்பது, நாம் வாழ்க்கையை எவ்வளவு தீவிரமாகவும், ஆழமாகவும், கலாபூர்வமாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ளவிழைகிறோம் என்பதைப் பொறுத்தது. அவ்வாறு ஒரு முறை உங்களின் வாழ்வின் சாரத்தை காட்டிப் போகும், கவனப்படுத்தும், அர்த்தப் படுத்தும் ஒரு மனிதர், ஒரு போதும் உங்களை விட்டுப் போவதில்லை. அவர் உங்களின் இருப்பின் சாரமாக தங்கிப் போகிறார். அவரை செரித்து, அவரை ஏற்றோ அல்லது மறுத்தோ அவரின் ஒரு தொடர்ச்சியாகவே நீங்கள் வளருகிறீர்கள். அத்தகைய மனிதர்கள்...ஒரு விதத்தில் சொல்லப் போனால் இறப்பதில்லை. உதாசீனப்படுத்துவது மட்டுமே அவர்களுக்கு நாம் தரும் மரணம். இன்னொரு கோணத்தில் பார்த்தால் மேம்போக்கான வாழ்க்கையிலிருந்து விடுபடும் வாய்ப்பை நாம் மறுப்பதன் மூலம் நாமே நிகழ்த்திக் கொள்ளும் ஒரு விதமான தற்கொலை.

விடாப்பிடியாய் மொண்னைத்தனமான வாழ்வு குறித்து தம் படைப்புகள் வழியே கேள்வி எழுப்பியும், விமர்சனத்தின் மூலமாக்கவும், மேன்மையான, சிந்தனை முறைகள், ஆளுமைகளை அறிமுகப்படுத்தியும், மேலான ஒரு வாழ்வு குறித்து தமிழ் சமூகம் கவனம் கொள்ள வைக்க கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக போராடி வந்தார். பெரும் பத்திரிக்கைகளும், ஊடகங்களும், தமிழ் சமூகமும், பெரும்பாலும் அவரை உதாசீனப் படுத்திய போதும், சமரசமின்றி இயங்கி இன்று ஒரு இயக்கமாக வளர்த்தெடுத்திருக்கிறார்.

மூன்று வார்த்தைகளில் சொல்லக் கூடியதை நான்கு வார்த்தைகளில் சொல்லக் கூடாதென்பதை அவர் தன்னுடைய இலக்கியக் கொள்கைகளின் ஒரு பகுதியாகவே கொண்டிருந்தார். வார்த்தைகளில் கச்சிதம், இலக்கைய வடிவங்களில் பரிசோதனை, நவீன இந்திய, உலக இலக்கியங்களை கவனத்திற்கு வைத்தது, மரபான சிந்தனைகளுக்கு மாற்றாக நவீன சிந்தனை முறைகள், ஆளுமைகளைத் தமிழ் சிந்தனைப் பரப்பில் விடாமல் அறிமுகம் செய்ய முயன்றது. நையாண்டி நடையை அற்புதமாக பயன்படுத்தி புது எல்லைகளை அடைந்தது இப்படியாக விரிகிறது அவரது இலக்கியப் பங்களிப்பு.

சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம், கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு, என சு.ரா வின் படைப்புகள் எப்போதும் தன்னை உயிர்ப்பித்துக் கொள்ள விரும்பும் யாரோ ஒருவனுக்காக காத்திருக்கின்றன எப்போதும்... அவரை நினைவு கூரவும், அன்னாருக்கு அஞ்சலி செலுத்தவும் இதை விடச் சிறப்பான வழி இல்லை.

-மானசாஜென்.
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

4 கருத்துக்கள்:

கூறியவர்: Blogger எம்.கே.குமார்

நேற்றிரவு தமிழ் மணத்தில் பத்ரியின் வலைப்பதிவை பார்த்தபோதுதான் இத்துயரச்செய்தியை நான் அறிந்துகொள்ளமுடிந்தது. இனிய நண்பனை இழந்ததைப் போன்ற ஒரு சோகமும் தவிப்பும் மனதில் ஒட்டிக்கொண்டன.

தமிழ் இலக்கிய நண்பர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

எம்.கே.குமார்

October 16, 2005 6:16 PM  
கூறியவர்: Blogger ooviyam

சுந்தர ராமசாமிக்கு ஒரு அஞ்சலி!
நண்பர் ரமேஷ் எழுதிய பிறகும் நமக்கு எழுத என்ன இருக்கிறது? என்ற எண்ணம் ஒரு கணம் தோன்றினாலும் அவரைப் பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. அவர் எழுத்தை முதலில் படித்த போது கவர்ந்த விஷயம் நாஞ்சில் நாட்டு மொழியும் நடையும்! வட்டார வழக்கில் எழுதினாலும் அந்த மொழியின் மென்மையையும், கூடவே இழைந்தோடும் சில குறும்புகளையும் புன்னகையோடு ரசித்து படிக்க முடிந்தது. ஜே ஜே சில குறிப்புகளில் 'சிவகாமியம்மா சபதத்தை முடித்ததைப் பற்றி விசாரிப்பதை படித்து மனதில் நம்மையும் மீறி ஒருப் புன்னகை தோன்றும். எழுத்துக்கள் நமக்குள் தோன்றி அதை எழுதுவதே அந்த எழுத்து பிரசுரிக்கப்படுவதற்கும், பரிசு பெறுவதற்கும் மட்டும் என்ற இலட்சியத்துடன் எழுதும் இலக்கியவாதிகளுக்கு
இடையில் தன்னுடைய எழுத்துப் பிரசுரிக்கப்படாமல் இருபது வருடம் இருந்தாலும் பரவாயில்லை என்று யோசித்த வித்தியாசமான இலக்கியவாதியைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை.
சித்ரா

October 17, 2005 10:21 AM  

October 17, 2005 10:22 AM  
கூறியவர்: Blogger இறக்குவானை நிர்ஷன்

மிகச்சிறந்ததொரு இலக்கியவாதி பற்றி சிறந்தமுறையில் தந்துள்ளமை வரவேற்கத்தக்கது. சு.ரா வின் இலக்கியக்கொள்கையும் தமிழின் மீதுள்ள தீவிர ஈடுபாடும் மற்றவர்களுக்கும் ஓர் உதாரணமாகும்.

October 16, 2007 12:19 PM  

Post a Comment

<< Home