Monday, May 09, 2005

த்தோம் த்தோம் சந்தித்தோம் !

தொகுப்பு : ஜெயந்தி சங்கர்



மூன்றாம் இலக்கிய சந்திப்பு

மே 8ஆம் தேதி, அதாவது நேற்று நான்கு மணிக்கு சிங்கப்பூரின் அங்க் மோகியோ நூலகத்தில் சிங்கப்பூர் வலை / இணைய நண்பர்களின் மூன்றாம் சந்திப்பு நடைபெற்றது. 9 பிப்ரவரி, மீண்டும் 20 மார்ச் ஆகிய சந்திப்புக்களுக்குப் பிறகு இது மூன்றாவது இலக்கியச் சந்திப்பு ஆகும்.

இடையில் குறுகிய காலத்தில் சிங்கப்பூர் கலையிலக்கியக்குழு நண்பர்களால் (சிங்கை முரசு) ஏற்பாடுசெய்யப்பட்டு 24 ஏப்ரல் அன்று நடந்த மலேசிய எழுத்தாளர் திரு ரே. கார்த்திகேசு அவர்களின் நூல் வெளியீட்டு விழாவை மறந்துவிடமுடியாது.

மூன்றாம் இலக்கிய சந்திப்பு ஒரு கலை தொடர்பானதாக அமைந்து பங்குபெற்ற எல்லோரையும் மகிழ்வித்தது. அஜீவன் என்றொரு கலைஞரைச் சந்திக்கவிருந்தோம். தவிர்க்க முடியாத சில காரணங்களினால், அவரால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமுடியாது போனது. நல்லவேளை ஈழநாதனிடம் அவரின் குறும்பட வட்டுக்கள் இருந்ததால், சந்திப்பு நிறைவாய் அமைந்தது.

அஜீவன்

அஜீவனைப் பலருக்கும் தெரிந்திருக்கலாம். அறியாதவர்களுக்கு சில தகவல்கள். தமிழ்ச் செல்வம் என்ற அஜீவன் இலங்கையில் பிறந்தவர். சிங்கப்பூரில் வளர்ந்தவர். தனது 'மூன்றாவது' கண்ணால் உலகைச் சுற்றிப் பார்ப்பவர். உலகெங்கும் போகுமிடமெல்லாம் தன் அடையாளத்தை விட்டுச் செல்லும் பழக்கமுடையவர். எதார்த்தமாய் காட்சிகள் அமைப்பதில் ஆர்வமுடைய இவர் பல இந்திய மொழிப்படங்களில் பணியாற்றி அனுபவப் பட்டவர். பிழைதிருத்தம், ஸ்கிரிப்ட் எழுதுதல் மற்றும் இயக்குதல் ஆகிய வெவ்வேறு துறைகளில் ஈடுபாடு கொண்டு திறனை வளர்த்துக் கொண்டுள்ளார். அஜீவன் சுவிஸ்ஸில் மட்டுமில்லாது உலகெங்கும் உள்ள தமிழ் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர்.



யாசீர்

தெமாஸிக் பாலிடெக்னிக்கில் படித்து முடித்துவிட்டிருக்கும் 21 வயது இளையர். இவரின் இலட்சியம் இந்தியக் கலைஞர்களை இயக்குவது. இன்னும் 10 வருடங்களில் இந்த முழுநீளப் படத்தை இயக்கிச் சாதிக்கப் போகிறாராம். இலக்குடனும் துடிப்புடனும் செயல் படுகிறார். இன்னும் அனுபவம் இல்லை என்று நேர்மையாக ஒத்துக்கொண்டு தனக்குத்தெரிந்ததைப் பகிர்ந்து கொண்டார். பெற்றோர் ஆதரவு கிடைத்திருப்பதையும் தன்னுடைய பாடத்தின் ஒரு பகுதியான குறும்படத்தைத் தன் தாய் மொழியில் இயக்கியதைப் பெருமையாக நினைப்பதாகவும் சொன்னார். 'பொம்மை' க்கு அவருக்கும் B + தான் கிடைத்தாம். ஆங்கிலத்தில் இயக்கியிருந்தால் நிச்சயம் A கிடைத்திருக்கும் என்றாலும் தமிழில் இயக்கியதால்தான் தான் அறியப் பட்டதாகவும் அந்த இயக்கம் நல்ல அனுபவமாய் அமைந்தது என்றும் கூறினார். sub title சம்பந்தமாகவும் தேர்வாளர்கள் குறைகள் சொன்னார்களாம்.
லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடக்கவிருக்கும் போட்டி ஒன்றுக்கு இதே 'பொம்மை'யை மீண்டும் எடுத்து மெருகூட்டி அனுப்பப் போகிறாராம்.

குறும்படம்



நிகழ்ச்சியின் தொடக்கமாக அஜீவனது 'எச்சில் போர்வை' என்ற குறும்படம் திரையிடப்பட்டது. திரையிடப்பயன்படும் ப்ரொஜெக்டர் கணியுடன் இணைக்கப் பட்டிருந்தது. அங்கேயிருந்த ஸ்பீக்கர் கொஞ்சம் சோதித்தது. அருள் குமரனும் ஈழநாதனும் சேர்ந்து, அங்கேயிருந்த நூலக ஊழியர்களையும் கேட்டு, வேறு ஒரு ஜோடி ஸ்பீக்கரைக் கேட்டு வாங்கிப் பொருத்தினார்கள். இதற்குள் கேட்ட லேசான ஒலியிலேயே நாங்கள் அந்தப் படத்தை இருமுறை பார்த்து விட்டோம். ஸ்பீக்கர் பொருத்தி மீண்டும் ஒரு முறை பார்த்தோம்.

'செருப்பு' என்ற குறும்படம் தான் மிகவும் பிடித்தது பொதுவாக எல்லோருக்கும். களம் இலங்கைக் கிராமம். புதுச் செருப்புக்கு ஆசைப் பட்டு காசுசேர்த்து, அப்பா வாங்கி வந்த செருப்பைப் போட்டுக்கொள்ள முடியாதபடி ஒரு காலை நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிக்கு பலி கொடுக்கிறாள் சிறுமி. இடதுகால் செருப்பை மட்டும் அணியும் காட்சியுடன் முடிகிறது. வறுமையைச் சொல்லும் ஆழமான காட்சிகள் அருமையாகவும் மிக எதார்த்தமாகவும் இருந்தன. இந்தப்படம் ஈழநாதனின் தேர்வு. இது ஏழில் ஒன்றாம். எல்லாமே யாழ்ப்பாணத்தில் 3 நாட்களுக்கு நடந்த பயிற்சிப்பட்டறையின் போது எடுக்கப்பட்டவையும் (Gautham மற்றும் குழுவினரால்). படத்தைப்பார்த்துக் கொண்டே கொடகொடவென்று கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன் நான். கண்ணைத் துடைத்துக்கொண்டே இடப்பக்கம் திரும்பினால், ரம்யாவும் என்னைப்போலவே அழுதுகொண்டிருந்தார்.

தெமாஸிக் பாலிடெக்னிக்கில் படித்தபோது யாசீர் எடுத்த படம் பொம்மை. ஸ்பைடர் பேன் பொம்மை வாங்க நினைக்கும் சிறுவன் பகலுணவைத் தியாகம் செய்து காசு சேர்க்கிறான். கடைசியில் அதைத் தொலைத்தும் விடுகிறான். அழுது ஓய்ந்து மீண்டும் எப்படியாவது சேர்த்து பொம்மையை வாங்குவேன் என்று சொல்லிக்கொண்டே போகிறான். அந்த விடாமுயற்சியைத்தான் சொல்ல நினைத்தாராம் யாசீர்.

அஜீவனின் 'நிழல் யுத்தம்' படம் ஐரோப்பியக் களம். கணவன் மனைவிக்குள் நடக்கும் மனப் போராட்டம். உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். இசை கச்சிதம். இயல்பான படம்.



வந்திருந்தோர்

சிங்கை முரசு/ சிங்கப்பூர் கலை இலக்கியக் குழுவைச் சேர்ந்த 10 பேரும். மேலும் பார்வையாளர்களாக 12 பேரும் வந்திருந்தனர். நான் எதிர்பார்த்து வராதோர், பனசை நடராஜன், எம். கே. குமார், பாலு மணிமாறன் மற்றும் ரமா சங்கரன்.



கேள்வி / பதில்

எச்சில் போர்வை படம் முடிந்ததும் எழுந்த கேள்வி -- அந்தத் தலைப்புக்கு என்ன பொருள்?

அதற்கு ஈழநாதன் அளித்த பதில் -- வண்ணத்துப்பூச்சியின்/புழுவின் எச்சிலால் பின்னப்பட்டிருக்கும் புழுக்கூடு போல, வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சுவிஸ் வாழ்க்கை எப்படியொரு மாயத் தோற்றமாக இருக்கக்கூடும் என்ற பொருளில் அமைந்த தலைப்பு.

பொம்மை குறித்து எழுந்த கேள்விகள் - சிங்கப்பூரின் சூழலில் $10 க்கு ஒரு பொம்மை வாங்க முடியாதா?

பட்டினிகிடந்து காசு சேர்க்கிறானே, அம்மா கேட்கமாட்டாளா?



நிகழ்வின் போது காதில் வந்து மோதிய சில கலாய்ச்சல்கள்

==>'நிழல் யுத்தம்' ஓடிக்கொண்டிருக்கும்போது
படம் முழுக்க ஈழத்தமிழில் இருந்ததால், இதற்கு 'தமிழ்' subtitle வேண்டும்
==> நெத்திச் சுட்டியெல்லாம் வைத்துக் கொண்டுதான் கோவிலுக்குப் போவார்களா ஐரோப்பாவில் தமிழர்கள்
==> விருந்தினரே வராம ஒரு நிகழ்ச்சியா


இறுதியில் நிகழ்வுக்கு அப்பாற்பட்ட கலந்துரையாடல்

மானசாஜென் ரமேஷ் மற்றும் அன்பு கொண்டு வந்திருந்த புத்தகங்கள் நண்பர்களுக்குள் பகிர்ந்துகொள்ளப் பட்டன. இரவலாகத்தான் !
இன்னும் நிறைய ஆக்கப்பூர்வமான நிகழ்வுகளுக்கான திட்டங்கள் உண்டு. எல்லோரும் சேர்ந்து செய்யவிருக்கிறோம். அவற்றைப் பற்றியும் கடைசியில் உட்கார்ந்து பேசினோம். அருள் குமரன் தமிழ் வலைப்பதிவுகளையே கைத்தொலைபேசி வழியே பயணத்தின் போது படிக்கும் சாத்தியக்கூறு குறித்துச் சொன்னார். ஒரு வெள்ளோட்டமும் காட்டினார். அருள் ஏராளமான யோசனைகள் கைவசம் வைத்திருக்கிறார். ஈழநாதனும் தான் கலை இலக்கியத்தில்.



மாப்பிள்ளையில்லாமல் கல்யாணமே நடந்துவிடுகிறது. இதெல்லாம் எம்மாத்திரம். அஜீவனின் குறும்படவட்டுக்களையும் இரண்டாவது விருந்தினரான யாசிரையும் வைத்து நடத்திவிட்டோமே நிகழ்வை. இதுவே சடங்குபூர்வமாக நடக்கும் சம்பிரதாயக் கூட்டமென்றால் கொஞ்சம் இக்கட்டாகிப்போயிருக்கும். எங்களுடையது 'சந்திப்பு' . சின்ன குழப்பத்துடன் (அஜீவன் வராததால்) தொடங்கி பின் தொய்வோடு (ஸ்பீக்கர் பிரச்சனை) தொடர்ந்து, பின் ஈடுபாட்டுடன் நடந்து, நிறைவாகவே முடிந்தது. எல்லோருக்குமே திருப்தியாக இருந்தது.

என் கவலை

அஜீவன் நல்லபடியாக சிங்கப்பூர் வந்தாரா? அல்லது கிளம்பவேண்டிய ஊரிலாவது நலமாக இருக்கிறாரா? என்பதே. இது குறித்து நண்பர்கள் சொல்லவேண்டும்.


மீடியா

மீடியா கார்ப் என்றறியப்படும் ஊடகத்திலிருந்து வந்திருந்தவர்கள் கொஞ்சம் படம் எடுத்துவிட்டு, யாசீரைப் பேட்டி கண்டு விட்டுப்போனார்கள். அஜீவன் இருந்திருந்தால், அவருடைய பேட்டி ஒன்று நன்றாக அமைந்திருக்கும்.

நன்றி

துடிப்போடு செயலாற்றிய ஈழநாதன் & அருள் குமரன், நூலக வாரியத்தின் தோழி திருமதி புஷ்பலதா மற்றும் அனைத்து நண்பர்கள்.

மலரும் நினைவுகள்

1 ) மூர்த்தி எல்லோரையும் சந்திக்க மிகவும் ஆசைப்பட்டு, குமாரிடம் பேச, குமார் சித்ரா ரமேஷ¤டன் சேர்ந்துகொண்டு முதல் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். தீவிரமான விழைவுக்குத் தான் எத்தனை பலம் !அது கடந்த 2005, பிப்ரவரி 9 ஆம் தேதி. எதிர்பாராமல் நா.கண்ணன் கலந்துகொண்டது இனிய அதிர்ச்சி எங்களுக்கெல்லாம்.

'நான் அவனில்லை/அவளில்லை'

'தொழில் நுட்பம்'

'பின்னூட்டங்கள்',..........

என்று கலந்துரையாடல் விரிந்து, 4-5 மணிநேரம் போனதே தெரியாமல் இனிமையாக அமைந்தது.

2) முதல் சந்திப்புக்கு வராத ரம்யாவும் மானசாஜென் ரமேஷ¤ம் இரண்டாம் சந்திப்புக்கு வந்திருந்தனர். கடந்த 2005, 20 மார்ச் அன்று நடந்த இந்த சந்திப்பிற்கு துளசி கோபாம் நியூஸிலந்திலிருந்து வந்திருந்தார். அதாவது அவர் வந்திருந்த போது நாங்கள் சந்தித்தோம்.

மானசாஜென் ரமேஷின் ஓவியங்கள் கண்ணுக்கு விருந்தாக
அன்பு கொண்டு வந்திருந்த புத்தகங்கள் கருத்துக்கு விருந்தாக
மூர்த்தி மற்றும் பனசை நடராஜன் கவிதைகள் பிரசுரம் பற்றிப் பேசி சில சிரிப்புவெடிகளுக்கு வழிவிட
மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் பற்றி மானஜென் ரமேஷ் மற்றும் ஈழநாதன் பேசியவை காதுக்கும் கருத்துக்கும் விருந்தாக
அருளின் தொலைபேசிப் புத்தகம் பிரமிப்புக்கு விருந்தாக
அமைந்தன.

சிலபல திட்டங்களும் தீட்டப்பட்டன.



தாய்மார்களுக்கும் தாயுமானவர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் ! நன்றி.

தொகுப்பு : ஜெயந்தி சங்கர்
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

17 கருத்துக்கள்:

கூறியவர்: Blogger மானஸாஜென்

ஜெயந்தி கச்சிதமாக பத்தி எழுதியிருக்கிறீர்கள்!- வாழ்த்துகள்!

மானஸாஜென், அல்லது ரமேஷ் ஏதாவது ஒன்றில் அழைப்பது போதுமே!

நான் கொண்டு வந்த புத்தகங்கள் இரவலுக்கு அல்ல, உங்களுக்கே உங்களுக்கு.

-மானஸாஜென்

May 09, 2005 9:42 AM  
கூறியவர்: Blogger Vijayakumar

//அஜீவன் நல்லபடியாக சிங்கப்பூர் வந்தாரா? அல்லது கிளம்பவேண்டிய ஊரிலாவது நலமாக இருக்கிறாரா? என்பதே. இது குறித்து நண்பர்கள் சொல்லவேண்டும்.//

தவிர்க்க முடியாத காரணத்தால் விமானம் தாமதமாகி அஜீவனால் இன்று தான் சிங்கப்பூருக்கு வரமுடிந்தது.இன்று மாலை நண்பர்களுடன் அவரை சந்திக்கலாமென்று தோன்றுகிறது.

லேட்டாக உள்ளே வந்தாலும் லேட்டஸ்டாக நிகழ்ச்சிகளைக் கண்டுக்களித்தேன். என்னை பொருத்த வரையில் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக இருந்தது. குறும்படத்தைப் பற்றிய பல பேர்களின் ஆர்வத்தை கண்ணால் பார்க்க முடிந்தது.

//செருப்பு படத்தைப்பார்த்துக் கொண்டே கொடகொடவென்று கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன் நான். கண்ணைத் துடைத்துக்கொண்டே இடப்பக்கம் திரும்பினால், ரம்யாவும் என்னைப்போலவே அழுதுகொண்டிருந்தார்.//

உங்களின் விசும்பலைக் கண்டு உங்களைத் திரும்பி பார்த்தது எனக்கே பாவமாகி உங்களின் சோகம் என்னைத் தாக்கியது :-))))

May 09, 2005 9:45 AM  
கூறியவர்: Blogger Arul

புத்தக வள்ளல் மானஸாஜென் ரமேஷ் வாழ்க! வாழ்க!

தெளிவான தொகுப்புக்கு 'ஜே'க்கு ஒரு 'ஓ'

அரசியல் கட்சி அடித்தொண்டன் மூடில்
- அருள் குமரன்

May 09, 2005 10:51 AM  
கூறியவர்: Blogger Thangamani

நல்ல பதிவு. நன்றிகள்!

May 09, 2005 11:10 AM  
கூறியவர்: Blogger அன்பு

நல்ல தொகுப்புடன், நேர்த்தியான பதிவொன்று இட்டிருக்கிறீர்கள். நான் வீடுசென்று மின்ஞ்சல் பார்த்தால், அதற்குள் உங்கள் பதிவு வந்துசேர்ந்துவிட்டது. (அடுத்தடுத்த சந்திப்பில் என்னைப்போன்றவர்களிடம் தொகுப்புப்பொறுப்பைக்கொடுத்து, இவ்ளோ தீவிரமெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது, இப்பவே சொல்லிட்டேன்:)

நேற்றைய குறும்பட சந்திப்பு மிக சிறப்பாக அமைந்தது. முன்னின்று ஏற்பாடுசெய்த அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் நன்றி. அருமையாக இருந்தது. செருப்பு, ஏற்கனவே ஓரிருமுறை தனியாகவும், நிகழ்ச்சிக்கு வருமுன் மனைவி, மகளோடும் பார்த்ததால் அந்த சோகம் தெரியும். அதனால் பெரும்பாலும், பார்வையாளர்களை வேடிக்கைபார்த்தேன், உங்களுடைய முகபாவங்களை, ஈடுபாட்டை காணமுடிந்தது. வீட்டில் மனைவிக்கு படத்தின் சோகத்தைவிட, இசை மனதைப்பிசைய இசையை ம்யூட் செய்து பார்த்தோம். நேற்று பார்த்த செருப்பு, நிழல்யுத்தம், எச்சில்போர்வை & பொம்மை அனைத்தும் அருமை. நல்ல திரைப்படம் தேடி ஏங்குபவர்களுக்கு இது உண்மையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதிலும் அந்த "மனுஷி" பார்த்தீர்களா. ஏனோ அதைப் பார்த்தபிறகு - மனைவி அடுக்களையில் வேலையாக இருக்கும்போது - ஹாலில் தொலைக்காட்சி பார்க்க மனசு கூசுகிறது.

மொத்தத்தில் மீண்டும் ஒரு அருமையான சந்திப்பு.

May 09, 2005 11:14 AM  
கூறியவர்: Blogger பாலு மணிமாறன்

Nice Posting J!

May 09, 2005 11:26 AM  
கூறியவர்: Blogger ஈழநாதன்(Eelanathan)

நன்றாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் ஜெயந்தி அக்கா.செருப்பை பார்த்து நீங்கள் அழுதபோது ஏனடா இந்தப் படத்தை காட்சிக்குத் தெரிவு செய்தோம் என்றிருந்தது.
நல்லதொரு முன்னோடி நிகழ்வாக இது நடந்து முடிந்திருக்கிறது பல்வேறு நாடுகளையும் சேர்ந்த தமிழ்க் குறும்படங்களை திரையிடும் விழாவுக்கு நல்லதொரு உந்துசக்தி

May 09, 2005 12:06 PM  
கூறியவர்: Blogger ஈழநாதன்(Eelanathan)

பார்த்தீங்களா அன்பு,மனுசி திரையிடவில்லை என்று சொல்லி சுமதி ரூபனிடம் என்னைப் போட்டுக் கொடுக்கிறார்.பொறுங்கள் அடுத்த விழாவில் மனுசி கட்டாயம் உண்டு நாங்களெல்லாம் அன்பாக அழைத்தால் கறுப்பி கூட வந்து கலந்துகொள்வார்

May 09, 2005 12:08 PM  
கூறியவர்: Blogger எம்.கே.குமார்

நன்றாக தொகுத்திருக்கும் ஜெயந்தி மேடத்திற்கு நன்றி!

விழாவுக்கு வராத என்னைப்போன்றவர்களுக்கு என்னதான் நடந்தது' என்பதையறிய இது மிகவும் உதவியாக இருந்தது.

மானஸாஜென்னின் புத்தக அன்பளிப்பிலும் தாய்மார்களின் கண்ணீர் கரைதலிலும் என்னால் கலந்துகொள்ள முடியவில்லையே என்று வருத்தமிருந்தாலும்,

யாசீருக்கு எனது வாழ்த்துகள்! ஒருங்கிணைப்பாளர்களுக்கு எனது நன்றிகள்!

எம்.கே

May 09, 2005 10:26 PM  
கூறியவர்: Blogger எம்.கே.குமார்

மக்களே, ஒரு நல்ல ஓட்டு போடலாமுன்னு பாத்தா, 'ஏற்கனவேதான் ஓட்டு போட்டுட்டியே டுபுக்கு, அப்புறமென்ன? கள்ள ஓட்டா போடவந்தேன்னு' என்னையே கேக்குது டமில் ஸ்மெல்?

என்னவே நடக்குதுங்கே?

எம்.கே.

May 09, 2005 10:29 PM  
கூறியவர்: Blogger வசந்தன்(Vasanthan)

நல்ல தொகுப்பு.
உங்கள் முயற்சிக்கு எங்கள் பாராட்டுக்கள்.

May 10, 2005 10:18 PM  
கூறியவர்: Blogger சுந்தரவடிவேல்

சிங்கை நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

May 11, 2005 1:45 AM  
கூறியவர்: Blogger Jeevan

சிங்கை நண்பர்களே மன்னித்துக் கொள்ளுங்கள்...............

முத்தமிழ் மன்ற நண்பர்கள் அனைவருக்கும்
எனது முதற்கண் வணக்கங்கள் உரித்தாகுக.

கடந்த 8ம் நாள்
எனது வருகைக்காக சிங்கையில் காத்திருந்து
ஏமாற்றமடைந்த அனைத்து உள்ளங்களிடமும்
மானசீகமாக மன்னிப்புக் கோருகிறேன்.

இலங்கையில் இருந்து பயணமாக வேண்டிய
விமானத்தை தவற விட்டது போக
தொடர்பு இலக்கங்களை பெட்டிக்குள் பத்திரமாக வைக்கப் போய்
ஏற்பட்ட விபரீதம் என்னை நோக வைத்தாலும்
சாக்கு சொல்லித் தப்ப நான் தயாராக இல்லை.
தவறு என்னுடையதாகவே கருதுகிறேன்.
ஏற்றுக் கொள்கிறேன்.

அதை பெரிய மனது கொண்டு மன்னிக்கவும்.

எனது பங்குபற்றுதல் இல்லாமல்
குறும்பட திரையிடல் மற்றும் சந்திப்பை
வெற்றிகரமாக நடத்திய
வெற்றியாளர்களான நண்பர்களை
நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.

முத்தழுகுவின் அழைப்பை ஏற்றுக் கொண்ட நான்
சமூகமளிக்காத போது
எனது குறையை நிறைவு செய்த
ஈழநாதனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நிகழ்வை ஈழநாதன்
முகவுரையோடு தொடக்கி வைத்து
சிறப்பாக நடத்தியதாய் அனைத்து நண்பர்களும் சொன்னார்கள்.

அதுதான் என்னை கொஞ்சமாவது நிம்மதியடைய வைத்தது.

ஒரு நாள் தாமதமாக வந்த போது
ஒரு குறிப்பிட்ட சில நண்பர்களை
சந்திக்கவும் பேசவும் கிடைத்தது.

மனம் விட்டு என் எண்ணங்களை
என்னை வாழ வைத்த நாட்டில் பேசும் போது
மனதில் நிறைவு கொண்டதான ஓர் உணர்வு...............

எல்லோரும் பணிகளுக்குள் வாழ வேண்டிய நிலையால்
என்னை தனியாக்கினாலும்
தனிமையை மறக்க வைத்தது குமார்தான்.

இரவு வேலை முடிந்து
தூங்காமல் சிரித்த முகத்தோடு
என்னோடு சுற்றியவர் அவர்..........................

நான் எடுத்துச் சென்ற
குறும் படங்களை
நான் வெளியேறு முன் பிரதி பண்ணி
ஒரு புதுமையை தொடரும் எண்ணத்தில்
விழித்திருந்த ஈழநாதனின் மயக்கத்து கண்கள்
என்னை வழியனுப்ப வந்த போது
போதைக்குள் சிக்கியது போலத் தோன்றியது.

இனியாவது தூங்கம் வருமா?

பார்த்த நண்பர்கள் தவிர
ஒரு சிலரோடு தொலைபேசி வழி
தொடர்பு கொண்டேன்.

அப்படியாவது பேசினேனே என ஒரு நிம்மதிப் பெரு மூச்சு.

இருந்தாலும் அனைவரையும் சந்திக் க முடியாத வருத்தம் .............
இன்னும் தொடர்கிறது.......................
அது அடுத்த முறை வரை எனக்குள் தொடரவே செய்யும்.....................

சிங்கை தொலைக் காட்சியில் கொஞ்ச நேரம் பேசக் கிடைத்தது.

குறுகிய நேரத்துக்குள் ஏற்பாடு செய்த நண்பர்களுக்கும்
பேட்டியை நடத்திய இந்திரசித்துக்கும் என் நன்றிகள்.

நிகழ்வுக்காய் வந்த,
சந்தித்த அனைத்து நண்பர்களது விபரங்களும் இல்லாமையால்
பலரது பெயர்களை நான் குறிப்பிடாமல் விட்டிருக்கிறேன்.
இருப்பினும் தொடர்ந்து எழுதும் போது அவர்களையும் நினைவுக்குக் கொண்டு வருவேன்.
அவர்கள் எதிர்காலத்தில் செய்ய வேண்டிப் பேசிய விடயங்கள்
மற்றும் படைப்புகள் கூட அதற்கு வழி வகுக்கும்.

ஒரு இரவு இரு பகல்களை கடத்திய நான்
இதயத்தில் நட்பான எண்ணங்களை சுமந்து கொண்டு
பறந்த போது சிங்கை சிங்காரமாக என்னை வழியனுப்பியது.....................

நாம் வாழும் போது
நாம் வாழ்வது நம்மக்கான ஒரு தேசத்தில் என்று நினைத்தால்
அந்த தேசம் மட்டுமல்ல
உலகமே நமக்கான தேசம்தான்.

தொடரும்.......................................

_________________
அஜீவன்

May 14, 2005 3:57 PM  
கூறியவர்: Blogger Jeevan

This comment has been removed by a blog administrator.

May 14, 2005 3:59 PM  
கூறியவர்: Blogger Jeevan

இலங்கைத் தமிழர்களது பேச்சுகளை, இந்திய தமிழர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும்,இலங்கைத் தமிழை, குறும்படத்தில் இடப்பட்டிருந்த ஜேர்மன் மொழி உப தலைப்பின் வழி, இன்னுமொரு தமிழர் மொழி பெயர்க்க வேண்டி வந்தது வியப்பாக இருந்தாலும், சுவிஸ் போன்ற ஒரு நாட்டுக்குள், புலம் பெயர்ந்து வாழும் போது, இது எனக்கு வியப்பாக இல்லை.

ஏனைய மொழிகளிலும் இது போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன.

இருந்தாலும் இது ஒரு முக்கிய விடயமாகப்பட்டதால் இதுபற்றி எழுதுவதும், கருத்துகளை பகிர்ந்து கொள்வதும், பலருக்கும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

எனவே நான் வாழும் நாட்டிலிருந்து இவ்விடயத்தை அலச முயல்வது எனக்கு இலகுவாக இருக்கிறது.

சுவிசின் முக்கிய மொழிகளாக ஜேர்மன்,(German) பிரென்ஜ்,(Franch) இத்தாலி (Italy), ரொமானிஸ்(Romanish), ஆகிய மொழிகள் பேசப்படுவதோடு, அரசு ஆளும் முக்கிய பகுதிகளாக, ஜேர்மன் - பிரென்ஜ் - இத்தாலி பகுதிகள் என ஆட்சியாளர்களால் பிரித்தாளப்படுகின்றன.

சுவிசில் ஜேர்மன் மொழி, ஒரு பகுதியின் மிக முக்கிய ஆட்சி மொழியாகும்.

அது போலவே அண்டை நாடுகளான, ஜேர்மன்(Germany) ஒஸ்ரியா (osterreich) ஆகிய நாடுகளில் ஜேர்மன் மொழி, ஆட்சி மொழியாகும்.

இருப்பினும், சுவிஸ்-ஜேர்மன் மொழித் திரைப்படங்களை, ஜேர்மனியிலுள்ள அல்லது ஒஸ்ரிய மக்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.
(இதுவும் ஜேர்மன் மொழிதான் இருப்பினும் இலங்கைத் தமிழுக்கும் இந்தியத் தமிழுக்கும் இடையேயிருப்பது போன்ற பேச்சு வழக்கு முறையான பிரச்சனை இருக்கிறது.)

சுவிசில் தயாராகும் சுவிஸ்-ஜேர்மன் திரைப்படங்கள், எழுத்து மொழியிலான ஜேர்மன் உப தலைப்புகளுடன்தான், (சப்டைட்டில்) அவர்களுக்கு, திரையிடப்படுகின்றன.

ஆனால் ஜேர்மன் திரைப்படங்களை, சுவிஸ் ஜேர்மன் மக்களால் இலகுவாக புரிந்து கொள்ள முடிகிறது.

இதற்கு முக்கிய காரணம், பேச்சு தமிழ் போல, பேச்சு ஜேர்மன் ஒயில்கள் மாறுபட்டாலும், பாடசாலைகளில் கற்பிக்கும் எழுத்து ஜேர்மன் மொழி ஒன்றாக இருப்பதேயாகும்.

ஆனால் இவை எமது விடயத்தில் முழுமமையாக ஒத்துவருவதில்லை.

இந்திய தமிழுக்கும் இலங்கைத் தமிழுக்குமிடையே, பெரியதொரு புரிந்து கொள்ள முடியாத தன்மையிருக்கிறது.

இந்தியத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள், ஆங்கிலம் கலந்த தமிழையே பேசுகிறார்கள். இலங்கைத் தமிழர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் தவிர்த்து, பெரும்பாலனவர்கள் பேசும் தமிழில் ஆங்கலத்தைக் கலப்பதில்லை.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு கூட, இலங்கையின் மற்றுமொரு பிரதேசத்தில் வாழும் தமிழர்களது பேச்சுத் தமிழையே முழுமையாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

தென்னிந்தியாவிலும் இந்நிலை இருக்கிறது. இருப்பினும் தமிழ் சினிமாவின் தாக்கத்தால் அது பெரிதாகப் புலப்படுவதில்லை.

இந்திய தமிழர்களைப் போலவே இலங்கைத் தமிழர்களுக்கும் இருந்த ஒரு முக்கிய பொழுது போக்கு சினிமாதான். ஆரம்பம் தொட்டே இந்திய தமிழ் சினிமா இலங்கைத் தமிழர்களை ஆக்கிரமித்துக் கொண்டதால் இந்தியத் தமிழை இலங்கைத் தமிழர்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இலங்கை தமிழ் சினிமா , இலங்கையிலேயே தோல்வியடைந்ததாலும், பெரும்பாலான இலங்கை தமிழ் சினிமாக்கள், இந்திய தமிழ் சினிமா தமிழையே பேசியதாலும், வேறு நாடுகளில் வாழ்ந்த தமிழர்களுக்குக் கூட இலங்கைத் தமிழ் சென்றடையவில்லை அல்லது இலங்கை தமிழ் கடல் கடந்து செல்லவில்லை.

இலங்கைத் தமிழர்கள் கடல் கடந்தாலும், இலங்கையில் இருந்த நிலையே தொடர்கதையாகியது. இலங்கை மற்றும் புலம் பெயர் தமிழ் வானோலி-தொலைக் காட்சிகளில் கூட நாடகத் தமிழ் அல்லது மேடைத் தமிழ் வசனங்களை இவர்கள் பேசத் தலைப்பட்டனரே தவிர அதை மாற்றிக் கொள்ள எவரும் முன் வரவில்லை.

பெரும் பாலான புலம் பெயர் திரைப்படங்கள் கூட, சினிமா தமிழையே உச்சரித்தன. அத் திரைப்படங்கள் கூட ஒரு வரையறைக்குள் எம்மவரால் முடக்கப்பட்டன. இலங்கையிலோ புலம் பெயர் நாடுகளிலோ இலங்கை தமிழர்களால் தயாரிக்கப்பட்ட எத்தனையோ படைப்புகள் அவரவர் பெட்டிகளுக்குள் பிணமாகிக் கிடப்பதற்கு அது சம்பந்தப்பட்டவர்களும், ஊடகங்களும், வியாபாரிகளும் பொறுப்பேற்க வேண்டும்.

அண்மையில் நான் எழுதி-இயக்கி-ஒளிப்பதிவு செய்த குறும்படத்தை திரைப்பட விழாக்களுக்குக் கூட அனுப்ப முடியாமல் ஆக்கியதற்கு தமிழ் சினிமா ஒன்றை உருவாக்குவதாக மேடைகளில் முழங்கும் தயாரிப்பாளர் காரணமாயிருப்பது வேதனை தருகிறது. ஆதி முதல் இலங்கை தமிழ் சினிமா வளராமல் இருப்பதற்கு மட்டுமல்ல ஒருவருக்கும் போய் சேராமல் போனதற்கும் இப்படியானவர்களே காரணம். . . . . . . .

இலங்கை தமிழர்களது பிரச்சனைகளை இந்திய தமிழ் இயக்குனர்கள் கொண்டு வர முயன்றாலும், சினிமா என்ற வகையில் இந்திய தமிழர்களிடையே வெற்றி பெற்றாலும், இலங்கை தமிழர்களால் அத்திரைப்படங்கள் தங்களைப் பற்றிச் சொல்கின்றன என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அக்கதாபாத்திரங்கள் கூடப் பேசிய தமிழ், இலங்கைத் தமிழோ அல்லது சிங்களமோ அல்ல. மலையாளத் தமிழும் மலையாளம்-தெலுங்கு-கன்னடம் கலந்த சிங்களமுமேயாகும். இதைச்சொல்லக் கூட பலரால் முடியாததற்கு காரணம் அந்த மொழிகள் பற்றிய தெளிவில்லாமையேயாகும்.

இலங்கை தமிழ் பிரச்சனையை மையமாக்கிய ஒரு படத்தில், பிரகாஷ்ராஜ் பேசும் ஒரு வசனம் என்னை உலுக்கியதற்கு காரணம், அது "ஒரு குழந்தையை படுக்கை அறைக்கு அழைப்பதாக........." பேசப்பட்டிருந்ததேயாகும்.

அதை மொழி பெயர்த்தவரோ இயக்குனரோ அதை உணர வாய்ப்பில்லை.

ஓரு வார்த்தையை மொழி பெயர்க்கும் போது அது சரியாகத் தோன்றினாலும் அந்த (சிங்கள) வார்த்தை பாவிக்கப்படும் இடம்-தொனி காரணமாக படுக்கைக்கு அழைப்பதான கருத்தைத் தருகிறது.

இது போன்ற விடயங்கள் தெரிவதற்கு, மேடைகள் தேவை.......... விமர்சனங்கள் தேவை..........

அதற்கான தளத்தை நியுஜெர்சியில் நடைபெற்ற, சிந்தனை வட்டம் குறும்பட விழா வழி செய்திருப்பது மகிழ்வைத் தருகிறது.

இலங்கை தமிழர்களதும், புலம் பெயர் தமிழர்களதும் பிரச்சனைகள் வெளிவர ஒன்றிரண்டு குறும்படங்கள் மட்டும் போதாது. முழு நீளப்படங்களும், அத்துடன் கூடிய உப தமிழ் தலைப்புகளும் இருந்தாலன்றி இவை உலக அரங்குக்கல்ல, உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் சமூகத்துக்குக்கே கூட, போய் சேர வாய்ப்பில்லை. . . . . . . .

ஒரு சமூகத்தின் மொழி-கலை-பண்பாடுகள் பரவ கலைகள் அதுவும் சினிமாக்கலை எவ்வகையான பங்கை வகிக்கிறது என்பது இப்போதாவது இலங்கைத் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழ் ஊடகங்களுக்கும் புரியுமா?

பணிவன்புடன்
அஜீவன்
www.ajeevan.com
http://ajeevan.blogspot.com/
ajeevan@ajeevan.com

May 14, 2005 4:11 PM  
கூறியவர்: Blogger dondu(#11168674346665545885)

அதெல்லாம் ஓக்கே சிங்கை நண்பர்களே. இம்மாதிரி நீஈஈஈண்ட தலைப்பை வைத்ததில் தமிழ்மணம் வாசகர் பக்கத்தின் லே-அவுட்டே நாசம். நான் குறிப்பிடுவது: சிங்கை நண்பர்கள்
த்தோம் த்தோம் சந்தித்தோம் !

தயவு செய்து முதலில் இதற்கு ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

May 14, 2005 5:53 PM  
கூறியவர்: Blogger dondu(#11168674346665545885)

I am sorry I am unable to replace the apparently meaningless strings of letters, whish seem to stand for த்தோம் த்தோம் சந்தித்தோம in the readers page.்
Regards,
Dondu Raghavan

May 14, 2005 5:58 PM  

Post a Comment

<< Home