Saturday, October 22, 2005

சரித்திரக்கதைஞனுக்கு சிங்கையில் நினைவஞ்சலிக்கூட்டம்!

சிங்கப்பூரின் எஸ்பிளனேட் கலையரங்க ஆற்றுக்கரை அமைதியில் எந்தவித துக்க இடிபாடுகளுக்கும் அன்று இடமில்லை! வானத்திலிருந்த இறங்கிய கருமையனைத்தையும் மொத்தமாய் விழுங்கிக்கொள்ளும் வேட்கையில் நீர், மனிதர்கள் மற்றும் வாகனங்கள்! அவற்றிற்கான ஒட்டுமொத்த ஆதரவை நல்கியவாறும் தூரத்து நட்சத்திரங்களுக்குப் போட்டியாயும் சிலிர்த்து சிரித்துக்கொண்டிருக்கின்றன உயர்மாடி மின் மெழுகுவர்த்திகள். தூரத்தில் ஆற்றைக்கடக்கும் அப்பாலத்தில், விளக்குகளை விளம்பரப்படுத்தியபடி இரைந்து செல்கின்றன வாகனங்கள்; பார்வையிலிருந்து ஒரு கனவைப்போல மறைந்துவிட முயல்கின்றன இவையனைத்தும்.

தூரத்தில் மேடையறிவிக்கும் இசையாடல்களைச் சுமந்து வரும் காற்றானது, அதனருகில் நிகழும் இளமையாட்ட வாசனைகளையும் தொடரும் உடல்மொழி வடிவங்களையும் பின் தொடரும் கருமையையும் உள்வாங்கி உலாவரும் வழியில் ஆங்கே அமர்ந்திருக்கும் எங்களையும் மெதுவாக சாடிச்செல்கிறது. சாடலின்வழி நாங்கள் பெறும் சிந்தனையையும் உவகையையும் காற்றில் கலந்த அப்பேரோசை வியாபித்து தானும் நிறைகிறது; மகிழ்கிறது.

புறப்பட இடம் தெரியும்; போகுமிடம் தெரியாது, தெரிந்துகொண்டு தொடரும் நாய்வாய்க்கழி குருடனைப்போல வாழ்வதில் அர்த்தமில்லை என்று சொன்ன அந்த மாபெரும் எழுத்தாளருக்கு அன்று நினைவஞ்சலி கூட்டம். இயற்கையை நேசிக்காத எழுத்தாளன் இருப்பானா என்ன? அதிலும், அந்தி மயங்கிய பொழுதில், தூரத்தே வீணையொலியைக் கேட்டுக்கொண்டே இருக்கும் ஒரு கலைஞருக்கு, அத்தகைய இயற்கையின் மடியில் அமர்ந்து இனிமையான அவரது நினைவுகளைப் பகிர்வதுபோன்றதொரு அனுபவம் எல்லோருக்கும் கிடைக்குமா என்ன?

திரு. சுந்தர ராமசாமி அவர்களுடன் நேருக்கு நேர் உறவாடியவர்கள் இருவர் என்றும் அவரின் இலக்கியவாயில் நுழைந்து சிந்திப்பதின் இன்பமும், வாழ்வதின் அர்த்தமும் உணரத்துடிக்கும் இளையவர்கள் என மற்றவர்களும் இணைந்திருந்த அப்பொழுதில், 1991ல் தான் ஒரு திருமணத்திற்காகவும், சிறந்த சிறுகதைகள் சிலவற்றை 'சிட்டாடல்' நிறுவனத்திற்காக தொலைக்காட்சிப்படமாக்கும் முயற்சியில் ஒரு படியாகவும் தனது நண்பரோடு நாகர்கோவில் சென்று, அந்த ஜவுளிக்கடையில் சுந்தர ராமசாமி அவர்களைப் பார்க்கவேண்டும் என்று அவரிடமே கேட்டதில் ஆரம்பித்து அவரைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு திரும்பி, அதை அவருக்கும் அனுப்பி மறுமடல் கண்டது வரை அனைத்து அனுபவங்களையும் நறுமலர்களாய் எங்களைச்சுற்றி பரப்பினார் திரு.மானசாஜென் ரமேஷ் முதலில்.

எந்தவித மேதாவித்தனங்களும் வெளிப்பூச்சுகளும் இல்லாத ஒரு சாதாரணவனைப்போல அவர்களிடம் அவர் உறவாடியதிலிருந்து, அவர்களுக்குத்தெரிந்ததை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முனைந்ததுவரை, அல்லது அவர்களுக்குப்பிடித்த/தனக்குப்பிடிக்காத எழுத்தாளர்களது ஆளுமை தொடர்பான விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டவையனைத்தையும் சொன்னார்.

அப்போது எழுத்துத்தவத்தில் இருந்த ஒரு நாவலின் கையெழுத்துப்பிரதியை சு.ரா படிக்கத்தந்ததையும் எந்தவொரு புத்தகத்தையும் வெவ்வேறு இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் படிக்கும் பழக்கமுடையவராக அவர் இருந்தமையை அவரே சொன்னதாகவும் சொன்னார்.

க நா.சு பற்றியும் அசோகமித்திரன், வண்ணநிலவன் மற்றும் வண்ணதாசன் பற்றியும் அவரது கட்டுரை விளக்கமுகங்களும் அதற்கு, தான் க.நா.சுவைச்சந்தித்தபொழுது அவர், திரு.சு.ரா பற்றிச்சொன்ன மேன்மையான விஷயங்களையும் சொல்லி முடித்துக்கொண்டவர், தனது தந்தையர்களின் மேல் தீராத கோபம் கொண்ட அவ்வட்ட படைப்பாளர்களையும் அவர்களின் படைப்புகளின் பின்புலம் முழுவதும் அவர்களது இளமையும் அல்லது நோய்வாய்வாழ்க்கையும் மிதந்து நிற்பதையும் நினைவு கூர்ந்தார்.

சுந்தர ராமசாமி போன்றவர்களுக்கான ஒரு இரங்கல் கூட்டமானது எப்படி நடக்கவேண்டும் என்பதை அவர் இப்போது நம்மிடையே இருந்தால் எப்படி விரும்புவார் என்ற நுட்பமான உணர்வுகளுடன் ஆரம்பித்தார் திரு. பாண்டியன், சிங்கப்பூரின் படைப்பாளி/வாசகர். இருட்டை முழுவதும் நுகர்ந்து விலக்கிவிடத்தீர்மானிக்கும் விளக்குகளின் மங்கிய தரிசனத்துக்கிடையே ஒரு மதிமயங்கும் மாலைவேளையில் ஆற்றங்கரை அல்லது கடற்முகத்துவாரம் என்பதைத்தேர்த்தெடுத்தவர் இவர்தான்.

உரையாடல்களின் வழியே வெளிப்படும் அழகியலையும் மெல்லிய நகையையும் நுட்பமான வார்த்தை வீச்சுகளையுமே திரு.சுந்தர ராமசாமி இவ்வாறான ஒரு நினைவஞ்சலியை எதிர்கொண்டிருந்தால் எதிர்பார்த்திருப்பார் என்பதை தமக்கு ஏற்பட்ட அவரது சந்திப்புகளின் விளைவாக அறியத்தந்தார்.

(ஜே.ஜே.சில குறிப்புகளில் ஜே.ஜே. இறந்தபின் அவனுக்கு அஞ்சலி செய்யும் கூட்டம் ஒன்று நடக்கும். அப்போது 'சிட்டுக்குருவி' என்று அழைக்கப்படும் 'திருமதி ராதா பாஸ்கரன்' ஜே.ஜே.வுக்கு அஞ்சலி தெரிவிக்கும் காட்சி(யை தயவுசெய்து யாரும் படிக்காமல் தவறவிட்டு விடாதீர்கள். பக்கம் 59, 60) திரு. ரமேஷால் ஞாபகப்படுத்தப்பட்டு கலகலப்பை உண்டுபண்ணியது!)

('எனக்குத்தெரிந்த பூனை ஒன்று இறந்துவிட்டது' என்று ஆரம்பிக்கும் பசுவய்யாவின் ஒரு கவிதையும் ஞாபகப்படுத்தப்பட்டு சுந்தர ராமசாமி இத்தருணத்தில் என்ன எதிர்பார்த்திருப்பார் என்ற பாண்டியனின் நுட்ப உணர்வுக்கு வலுசேர்க்கும்படியிருந்தது.)

பசுவய்யாவின் சில கவிதைகளை (கன்னியாகுமரி கவிதையும் ஒன்று) மிகவும் சிலாகித்த திரு.பாண்டியன், அக்கவிதையின் அழகியல் வெளிப்பாட்டை மிகவும் ரசிக்கத்தந்தார்.

புதுமைப்பித்தனால் இறுக்கமாக கட்டப்பட்டு லேசான துருத்தலாய் இருந்த அந்த நடை, சுந்தர ராமசாமியால் இன்னும் கொஞ்சம் (ஆரம்பத்தில் மிகவும் கொஞ்சமே!) இறுக்கம் தளர்த்தப்பட்டு இப்போது ஜெயமோகனால் முழுவதும் பிரித்து அறியத்தரப்படுவதாகத் தாம் உணர்வதாகச்சொன்னார் அவர்.

மரபைக் கட்டவிழ்த்து புதுமை பண்ணும் சுந்தர ராமசாமியின் முயற்சியானது இலக்கிய உலகில் புதுப்புனலாய் புகுந்து வந்தது எனவும் அதுவே இன்றைய வெற்றிக்கு அடிகோலியது எனவும் புதுவித நவீன உரையாடலை தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகப்படுத்திய (பு.பித்தனுக்குப் பிறகு, சுஜாதாவைத்தவிர்த்து) பெருமையும் புகழும் அவருக்கே சாரும் என்பதையும் நண்பர்களின் ஆமோதித்தலோடு சொன்னார்.

மூன்று வார்த்தைகளில் சொல்லமுடிந்ததை நான்கு வார்த்தைகளில் அவர் எப்போதுமே சொல்லமாட்டார் எனவும் அவருடைய பதிப்புலக வாழ்க்கையிலும் முடிந்தளவு இதைப்பின்பற்றியிருப்பதாகவும் பசுவய்யாவின் கவிதை எளிமையானதாய் இருந்தாலும் எல்லா வார்த்தைகளும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாயும் ரமேஷ் சொல்ல பாண்டியனும் தனது கருத்தை இங்கு அறியத்தந்தார்.

தனது அறுபதாவது வயது வரை மிகவும் இறுக்கமாகவும் மெதுவாகவும் தோன்றிவந்த அவருடைய படைப்புகள் கடைசி சில ஆண்டுகளில் மிகவும் விறுவிறுப்பு கொண்டு எழுந்து வந்ததாயும் ஆனால் இறுக்கம் பெருமளவு குறைந்துபோயிருந்து எளிமையாய் இருந்ததாகவும் தனக்குத் தோன்றுவதாகச் சொன்னார். இதற்கு (ஜெயமோகன் போன்ற) தற்காலிக படைப்பாளிகளின் போக்குக்கு இணையான அவரது சில சமரசங்களும் ஒரு காரணமாயிருக்கலாம் என்றும் சொன்னார்.

ஜெயமோகனைப் படித்த பின்பே, அவர் அதிகமாக மோதல் போக்கை கடைபிடித்து வந்த, சுந்தரராமசாமியை படிக்க முனைந்ததாகச் சொன்னார் ஈழநாதன். முடிந்தவரை அவரது கவிதைகள் மற்றும் கதைகளை ஞாபகப்படுத்தினார். சமரசமில்லாத அவரது இலக்கியப்பணியின் பிற்பகுதியில் சமரசங்கள் வந்ததும் வெங்கட் சாமிநாதன் போன்றவர்களின் மோதலும் வருந்தவைத்தாலும் அவர் தன்னளவில் எங்கும் குன்றிப்போகவில்லை என்றார். இதே கருத்தை வலியுறுத்திய திரு.பொன்.ராமச்சந்திரன் (கவிஞர்), வெங்கட் சாமிநாதனுடனான அவரது மோதலில், அவருக்கு தற்கால அரசியல் இலக்கிய மனோபாவம் வந்துவிட்டதில் எனக்கு உடன்பாடில்லை என்றார்.

தீவிர வாசக நண்பர்கள் திரு. அன்பு மற்றும் திரு. ஷாந்தன் ஆகியோரும் சுந்தர ராமசாமியின் படைப்புகளைப்பற்றி மேலும் அறிய ஆவலாகவும் விருப்பமாகவும் இருப்பதாய்ச்சொன்னார்கள். எழுத்தாளர் அருள்குமரன் தனது எண்ணப்போக்குகள் மற்றும் சுந்தர ராமசாமியின் இலக்கியம் தொடர்பான சந்தேகங்களை வினவினார்.

எந்தவொரு பணியானாலும் அதன் மூலம் தனது உள்ளொளியைக் காண முனைவதன் அவசியத்தைச் சொன்ன சுந்தர ராமசாமி, தனது வாழ்வில் அதை அதிகம் கண்டிருந்தார் எனவும் தனது இலக்கியப்பணி மூலம் குறைந்தபட்சமாய் வாசகனிடையே ஒரே ஒரு சிந்தனை விதையை ஊன்றச்செய்வதையும் கடைசிவரை உன்னதமாய் கொண்டிருந்தார் எனவும் அதன்மூலம் இன்னும் எத்தனையோ வருடங்களுக்கும் பின்வரும் தலைமுறைகள் தேடிச்சென்று படிக்கும்விதம் ஜே.ஜே.சில குறிப்புகள் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் என்று சொன்னார் எம்.கே.குமார்.

மரணத்துக்குப்பின்னே புலமையை உணரும் தமிழ்ச்சமூகம் வழிவழியாய் இன்றும் அதைப்பின்பற்றுவது/பின்பற்றப்போவது அவலத்திற்குரியது என்றும் சொன்னார். ஜே.ஜே நாவலை மிகவும் சிலாகித்த இவர், ரயிலில் ஓமனக்குட்டியுடன் ஏற்படும் கருத்துமோதல் காதல் தோல்வியாவதும் நெருங்கிய நண்பனே தனித்து நிற்பதற்காய் அவனது எதிர்முகத்தையே எப்போதும் தேடிக்கொண்டிருப்பதையும் எடுத்துச் சொன்னார்.

ஆங்காங்கு வந்துவிழுந்த உணர்தல்கள் அறிந்த நகைச்சுவையினூடே சுந்தர ராமசாமியைப் பற்றியும் அவரது படைப்புகளின் மனவலம் பற்றியும் வெகுவான ரசிப்புகளுடன் நகர்ந்தது கூட்டம்.

சமூகம் சார்ந்த மேதைமைகளில் விருப்புவெறுப்பின்றி ஒரு உன்னதத்தோடு , நேர்மைகொண்ட வாழ்தல்களும் சமரசம் அற்ற படைப்புகளும் கொண்டதாய் விளங்கிய ஒரு படைப்பாளியின் பின்னே, அத்தகைய தன்மைகொண்ட நீண்ட இடைவெளி ஒன்று பரவிக்கிடப்பதையும் அதை எதிர்கொள்வதன் மூலம் இன்றைய எழுத்தாளர்களும் வாசகர்களும் என்ன உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதைப்பற்றியும் தொடர்ந்த ஆராய்தல்களோடு தூரத்தே தெரிந்த நட்சத்திரத்தின் மினுமினுப்பை உள்வாங்கிக்கொண்டு மெதுவாக எழுந்து நகர்ந்தோம். மென்மையாக தழுவிச்சென்றது பேரோசைகொண்ட அக்குளிர்காற்று!


சிங்கை முரசு நண்பர்கள் சார்பாக,
எம்.கே.குமார்.

(பதிவு முழுவதும் எவ்விதக்குறிப்பும் இன்றி நினைவிலிருந்து எழுதியவை . கருத்துப்பிழைகளும் சொற்பிழைகளும் இருக்கலாம்.)
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

5 கருத்துக்கள்:

கூறியவர்: Blogger குழலி / Kuzhali

முதலில் மன்னிப்பு கேட்கின்றேன், அஞ்சலி கூட்டத்திற்கு வர இயலாததற்கு, சு.ரா. என்ற இலக்கிய மேதைக்கு என் அஞ்சலி, சு.ரா.வின் சில சிறுகதைகள் மட்டுமே படித்துள்ளேன், அவரின் மற்றைய படைப்புகளை அறிந்து கொள்ளும் எண்ணத்தில் வருவதாக இருந்தேன், வேலைப்பளுவினால் வர இயலாமல் ஆகிவிட்டது.

சு.ரா. வின் படைப்புகளின் பட்டியல் எங்கேயாவது கிட்டுமெனில் சுட்டி தரவும்.

நன்றி

October 23, 2005 3:16 AM  
கூறியவர்: Blogger ஜோ/Joe

குமார்,
வேலை காரணமாக கலந்து கொள்ள முடியாத எனக்கு உங்கள் இந்த பதிவு அவசியமாயிருந்தது.நன்றி!

October 23, 2005 3:30 AM  
கூறியவர்: Blogger Ramya Nageswaran

அழகாக தொகுத்தளித்தற்கு நன்றி, குமார்.

October 23, 2005 6:34 PM  
கூறியவர்: Blogger doondu

அந்த லூசுப்பயமகன் விஜய் கலந்து கொள்ளவில்லையா???

October 24, 2005 2:19 PM  
கூறியவர்: Blogger Muthu

ஐம்பது ஆண்டுக்காலம் இலக்கிய உலகில் சமரசங்களற்று,உயர்ந்த தரத்தை மட்டுமே தம் மதீப்பீடுகளாக முன்வைத்து,என் போன்ற எத்தனையோ இளைஞர்களை தமிழ் இலக்கியத்தின் பால் திருப்பிய பேராசான்.முதன்முதலாக அவரின் கட்டுரைகளை படிக்க் நேர்ந்தப்போது நான் அடைந்த அதிர்ச்சிகளுக்கு அளவே இல்லை.இவை என் உரைகள் என்ற அந்த அவரின் கட்டுரை தொகுப்பு மிகவும் ஆழமானது. இளைஞர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது.

எளிமையான விளக்கங்கள்,எள்ளல் தேய்ந்த நடை, சமரசங்களற்ற உயர்ந்த மதிப்பீடுகள் ஆகியவை அவரின் படைப்பு திறனின் சிறப்புகளின் சில கூறுகள்.

"இல்லாத அற ஒழுக்கங்களைப் படைப்புகளில் திணித்தால் அது வாழ்க்கையில் அமலாகிவிடுமா? நாவல் என்பது உட்டோப்பியா அல்ல.எவ்வாறு வாழ்க்கை இருக்கவேண்டும் என்று கனவு காண்பது அல்ல நாவல். எவ்வாறு வாழ்க்கை இருக்கிறது என்ற பரிசீலனை நாவலாசிரியனை சார்ந்தது"..

"எழுத்தாளன் என்ற முறையில் நான் தூக்கி சுமக்க வேண்டிய சித்தாந்தங்கள் என்று எதுவும் இல்லை. காலத்தின் பக்கம் நின்று சாட்சியம் சொல்வது என் வேலை."

"இன்றைய திரைப்படங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.ஒன்றுக்கும் பிரயோஜுனமில்லாத ஒரு கதாநாயகன்,ஒன்றுக்கும் உதவாதவன் என்று பெண் வீட்டாரால் கருதக்கூடிய ஒரு கதாநாயகன்,அவன் கூலி வேலை செய்யக்கூடியவனாகவோ,டாக்சி ஓட்டக்கூடியவனாகவோ இருக்கலாம்.அவன் அந்த திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆங்கிலத்தில் சில வசனங்கள் பேசும் போது எண்ணற்ற பார்வையாளர்கள் கரகோஷம் செய்வார்கள்.அந்த கரகோஷத்திற்கு அர்த்தம் 'அவன் அறிவாளி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது' என்பதுதான்.இவை நாம மன ரீதியாக எவ்வளவு பெரிய நோயாளியாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளங்கள்"

எவ்வளவு ஆழமாக அதே சமயம் எளிமையான கருத்துக்கள். சுந்தர ராமசாமி,ஒரு படைப்பாளியின் நோக்கம் அவன் சார்ந்த சமூகத்தை சிந்திக்க வைப்பது தான் என்றால் உங்கள் வாழ்வின் நோக்கம் நிறைவேறிவிட்டது

October 27, 2005 6:11 PM  

Post a Comment

<< Home