Friday, July 01, 2005

அனைத்துலக தமிழிலக்கிய அடையாளத்தை முன் வைத்து

அனைத்துலக தமிழிலக்கிய அடையாளத்தை முன் வைத்து தமிழவனின் மலேசிய, சிங்கப்பூர் குறித்த கருத்துக்கள்
சுப்பிரமணியன் ரமேஷ்

அனைத்துலக தமிழிலக்கிய அடையாளத்தை முன் வைத்து தமிழவனின் மலேசிய, சிங்கப்பூர் குறித்த கருத்துக்களை வாசித்தேன். இது குறித்து சற்று விரிவாகப் பேசுவது சிங்கப்பூர் இலக்கியவாதிகள் எதிர் நோக்கும் பிரச்சனையைப் புரிந்து கொள்ள உதவும்.

சிங்கப்பூர் இலக்கியம் குறித்து பேசுபவர்கள் அவர்கள் எந்தெந்த படைப்புகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டார்கள். புறங்கையால் நிராகரிப்பிற்கான காரணங்கள் என்னென்ன என்பதை குறிப்பிட்டால் ஒரு வேளை அது எங்களுக்கு உதவலாம். வெறும் அபிப்பிராயங்கள் எந்தவிதத்தில் உதவக்கூடும்?
@ @ @ @
முதலாவதாக சிங்கப்பூர், மலேசிய இலக்கியங்கள் ஒன்று போலத் தோன்றினாலும் சிலவிதங்களில் வேறுபடுபவை.

மலேசியாவில் தமிழில் எழுதும் எழுத்தாளர்கள், அரசியல் கலாச்சார சூழல்களில் புறக்கணிப்புக்குள்ளாவதாக ரே.கார்த்திகேசு போன்ற மலேசிய எழுத்தாளர்கள் கூறுகின்றனர்.

மாறாக சிங்கப்பூர் அரசு இலக்கிய வளர்ச்சியில் ஆர்வமும் அக்கரையும் கொண்டிருக்க, மக்கள் மெத்தனம் காட்டும் சூழல் சிங்கப்பூரிலிருக்கிறது.
இரு வருடங்களுக்கு ஒருமுறை 'நேஷனல் ஆர்ட் கவுன்ஸிலின்' மூலமாக தங்கமுனைப் போட்டியில் தமிழ் உட்பட நான்கு மொழிகளில் சிறந்த சிறுகதை, கவிதைகளுக்கு முதல் பரிசாக s$ 10,000 வெள்ளி ( இந்திய பணமதிப்பில் 2,60,000 ரூபாய்) வழங்குகிறது. ஆண்டுதோறும் தமிழில் வெளியிடப்படும் புத்தகங்களில் மேலான ஆக்கத்திற்கு s$10,000
பரிசளிக்கிறது. இது தவிர புதிதாக நூல்களை வெளியிடவும் மான்யம் வழங்குகிறது. இதுவரையான தேர்வுகள் நேர்மையாகவும், நாணயமாகவும் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன.
உலகத் தரத்திலான சிறந்த நூலகங்கள் நாடெங்கும் பரவியுள்ளன. தமிழில் சமீபத்திய நூல்களைக் கூட இங்கே காணலாம். இலக்கியம் குறித்த கூட்டங்களை நூலகங்கள் ஏற்பாடு செய்யவும், வெளிநாட்டிலிருந்து வரும் தமிழ் எழுத்தாளர்களுடன் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்கிறது. (சமீபத்தில் வந்தவர்கள், காலச்சுவடு கண்ணன், மாலன், வெங்கடேஷ், சிபிச்செல்வன், வாஸந்தி, சாருநிவேதா, அஜீவன், ரே.கார்த்திகேசு)

நூலகமும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் இணைந்து கதையும் காட்சியும் போன்ற நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகின்றன.
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் அவ்வப்போது சிறுகதைப் போட்டிகளும், நாவல் போட்டிகளும் நடத்துவதுடன், விழாக்களையும், பட்டி மன்றங்களையும் நிகழ்த்துகிறது. இவையன்றி கடற்கரைக் கவியரங்கம், இலக்கிய வட்டம், மாதவி மன்றம், வாசகர் வட்டம், சிங்கை முரசு, என பல்வேறு தமிழ் ஆர்வல அமைப்புகள் தமிழ் இலக்கியம் பேசுகின்றன.
@ @ @ @

இருப்பினும் சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியைக் காணவில்லை என்பது உண்மையே!
எனக்குத் தோன்றிய காரணங்களை பதிவு செய்கிறேன்.
* சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம் என்பது பெரும்பாலும் தமிழ் நாட்டின் இலக்கியப் போக்கை பின்பற்றும் இயக்கமாகவே இருந்து வந்திருக்கிறது.

-பண்டிதர்கள்/திராவிட இயக்க இலக்கியம் சார்ந்த குழுக்கள்.
-வானம்பாடி இயக்கத்தை ஒத்த குழுக்கள்
-நவீன தமிழ் இலக்கிய ர்வம் கொண்ட குழுக்கள்.

இப்படி சூழலும்கூட தமிழ் நாட்டின் சூழலாகவும், ஒருவரை ஒருவர் நிராகரிப்பதும் கூட தமிழ் சூழலைப் போன்றே இருக்கிறது. (இன்னமும் தௌ¤வாகச் சொன்னால் தமிழில் க.நா.சு விமர்ச்சன கால கட்டத்தை நினைவூட்டும் வகையில்) ஆனால் சிங்கப்பூரர்களின் வாழ்க்கை முறையும், அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும், ஒரு தமிழ்நாட்டு தமிழனின் பிரச்சனையிலிருந்து பெரும்பாலும் வேறானது. (உதாரணத்திற்கு: சாதியோ, மதமோ, இனமோ பெரிதாகப் பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாமல் இங்கே திருமணம் போன்ற முக்கிய முடிவுகளை ஒருவர் தீர்மானிக்கவும், எடுக்கவும், வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் இயலும். ஊழல், அரசியல் அராஜகம், கட்டாயக் கடையடைப்புகள் இன்றி ஒருவர் நேர்மையாகவும், கண்ணியமாகவும் வியாபாரம் செய்ய இயலும்.)
சிங்கப்பூரர்கள் தாங்கள் யார் என்பதை அறியும் தௌ¤விலிருந்தே, சிறப்பான இலக்கியங்கள் தோன்ற முடியும்.

* பரப்பளவில் மிகச் சிறிய குட்டித் தீவு சிங்கப்பூர், எந்த விதமான இயற்கை வளமோ, கனிம வளங்களோ அற்ற நாடு. இத்தகைய நாடு இன்று அற்புத பொருளாதார வளம் கண்டு முதலாம் உலக நாடுகளில் ஒன்றாக வளர்ந்திருப்பதற்கு ஊழலற்ற அரசு, தீர்க தரிசனம் கொண்ட திட்டங்கள் அடுத்த முக்கிய காரணம் மக்களின் கடுமையான உழைப்பு. இன்றைய கடினமான சந்தை சூழலில் இப்போதைய வசதியையும், வாழ்க்கையையும் தக்க வைத்துக் கொள்ள கடுமையாக உழைத்தே தீர வேண்டியுள்ளது. இலக்கியம் படிக்க நேரமற்ற வாழ்கை முறையும், சூழலும் மக்களுக்கு. மற்ற வளர்ந்த நாடுகளின் எழுத்தாளர்களைப் போல எழுத்தையே பணியாக கொள்ள முடியாதது மட்டுமல்லாமல் வேறு வேலைகளில் கடுமையாக உழைக்கவும் நேர்வதே சிங்கை எழுத்தாளனின் நிலை.( இது நியாயப் படுத்த அல்ல.) சிங்கப்பூர் எழுத்தாளர்களிலேயே தமிழிலக்கியத்தின் நவீன போக்குகள் குறித்தும், உலக இலக்கிய போக்குகள் குறித்தும் விரிவான வாசிப்பு கொண்டவர்கள் குறைவுதான்.

* சிங்கப்பூரில் சீன, மலாய், இந்திய, ங்கில இனங்கள் வாழ்கின்றன. இந்த இனங்களுக்கிடையில் இன்னமும் அதிகமான இலக்கியக் கருத்துப் பரிமாற்றங்களும், இவர்களின் படைப்புகள் மற்ற மொழிகளில் மொழி பெயர்க்கப் படவும் வேண்டியது முக்கிய தேவை. இத்தகைய முயற்சிகள் சிங்கப்பூரின் தனி அடையாளத்தை செழுமை படுத்தும். கோபால் பரதம் போன்ற ஆங்கிலத்தில் எழுதிய/எழுதும் தமிழர்கள் குறித்தும் விரிவாக தமிழில் பதிவு செய்யப்படவில்லை.
* சிங்கப்பூரிலிருந்து இப்போது நிறைய பேர் எழுதுகிறார்கள், ஆனால் அவர்களின் படைப்புகளை வெளியிட ஏற்ற களமில்லை. தமிழ் முரசு என்ற தமிழ் நாளிதழை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. ஒரு செய்தித்தாள் நடைமுறையில் இலக்கியத்திற்கு எவ்வளவு இடம் ஒதுக்க முடியும்? பரிசோதனை முயற்சிகளுக்கும், வித்யாசமான நவீன எழுத்துகளுக்கும், விமர்ச்சிக்கவும், விவாதிக்கவும், நூல் அறிமுகங்களுக்கும், உலக இலக்கிய வகைகளின் மாதிரிகளை வெளியிடவும், மொழிபெயர்ப்புகளுக்கும் இப்போதைக்கு இலக்கிய தமிழ் இதழ்களோ, சிறுபத்திரிக்கைகளோ இல்லாதது பெரும் குறை.( வலை இதழ்களும், வலைக்குழுக்களும், வலைப்பூக்களும் இதற்கு ஒரு நம்பிக்கைத் தரும் மாற்று. காலச்சுவடு, உயிர்மை, அமுதசுரபி போன்ற தீவிர இலக்கிய இதழ்களுக்கு எழுத முற்படுவதும் ஒரு நல்ல ஆரம்பமே)
@ @ @ @
மடிகணினியில் எழுதி சேமித்து விட்டு என்னெதிரே அமர்ந்திருக்கும் சிங்கப்பூர் தமிழ் இளைஞனைப் பார்க்கிறேன், சரியான முறையில் இப்போதைய தலைமுறை செயல்பட்டால் அவன் தலைமுறையில் தமிழிலக்கியத்தின் எல்லைகள் மேலும் விசாலப்படும்.
ஓ.பி கால்சராயும், பிலபாங் கேஷ§வல் சட்டையும், நைக் ஸ்போர்ட்ஸ் காலணிகளை சாக்ஸ் இன்றி அணிந்திருக்கிறான், இடது காதில் சிறிய கடுக்கன், ஒட்ட வெட்டப்பட்ட தலையில் ஏறி அமர்ந்திருக்கிறது ஓகிளியின் குளிர்கண்ணாடி, முதுகில் தொங்கிக் கொண்டிருக்கும் பையில் கண்டிப்பாக சமீபத்திய கணினி விளையாட்டுக்கான வட்டோ, ஸ்டார்வார்ஸ் படமோ இருக்கும், சாம்ஸோனைட் பையின் ஜிப்பின் திறந்த இடுக்கிலிருந்து வெண்ணிர கொடியென ஏறி அவன் காதுகளை அடைத்திருக்கிறது ப்பிள் ஐ-பாட்'டின் தொப்புள் கொடி..தொடர்ச்சியாய் சோனி-எரிக்சனின் கே700ஐ யில் அவன் விரல்கள் லாவகமான வேகத்தில் நர்த்தனமிடுகின்றன, குறுஞ்செய்திகள் அனுப்பிக்கொண்டிருக்கிறான் சந்திரமுகி படம் அல்லது எம்.டி.வி அல்லது ரொனால்டோ குறித்ததாய் இருக்கலாம், சென்னிற தலைச்சாயம் பூசிய தன் வகுப்புத்தோழிக்கோ அல்லது 'கூட்டாளிக்கோ'. அடிக்கடி கைத்தொலைப் பேசியைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறான். அபரிமித ற்றலும், வேகமும், பொறுமையின்மையும் தென்படுகிறது. கோவலனுக்கு ஜீன்ஸ§ம், கண்ணகிக்கு சுடிதாரும் போடுவதை விடுத்து சிங்கப்பூரின் படைப்புகள் அவனது உலகத்திற்குள் சென்று அவனைத் தொடாத வரை, அவனும் எங்கள் இலக்கியங்களைத் தொடப்போவதில்லை.
@ @ @ @
சுப்பிரமணியன் ரமேஷ்
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

2 கருத்துக்கள்:

கூறியவர்: Blogger பாலு மணிமாறன்

நல்ல பதிவு ரமேஷ். சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பற்றி உணர்வுப்பூர்வமாக சிந்திக்காமல், அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டிய காலச்சூழலில் சிந்திக்க வேண்டிய கருத்துக்களை முன் வைத்திருக்கிறீர்கள். இதைச்சார்ந்தும் ஓரம்நடந்தும் விலகியும் திரும்ப இணங்கியும் பல சிந்தனைகள் ஓடுகிறது மனசில்.பலருக்குள்ளும் ஓடியிருக்கக்கூடும்.

ஒவ்வொரு சிங்கப்பூர் தனிமனிதனுக்குள்ளும் ஒளிர்கிற தமிழ் இலக்கிய ஆர்வமும், அவனது சிந்தனையும், அதை அவன் எப்படி வெளிப்படுத்தத் துணிகிறான் அல்லது முனைகிறான் என்ற ஆதார செயல்பாடும், சமூகம் அவனுக்குத் தரத் துணிகிற நெம்புகோலுமே நேற்றைய சிங்கப்பூர் இலக்கிய வெளிப்பாடுகளை நிர்ணயித்தது...இன்றையும், நாளையையும் அதை அதுதான் நிர்ணயிக்கப் போகிறது.

இன்றைய இளைய சிங்கைத்தமிழ் சமூகத்திலிருந்து இன்னும் 10 வருடங்களுக்குள் ஒரு நா.கோவிந்தசாமியை, ஒரு இராம கண்ணபிரானை, ஒரு உதுமான்கனியை, ஒரு கனகலதாவை, ஒரு இந்திரஜித்தை அடையாளம் காணமுடிந்தால் போதும் ( நாராயணன், முகம்மது கஸாலி போன்ற இளையர்களிடம் அந்த "அக்னிக்குஞ்சு' இருக்கிறது ), நாளைய சிங்கை தமிழ் இலக்கியம் நம்பிக்கையளிப்பதாக இருக்கும்.

July 02, 2005 9:06 AM  
கூறியவர்: Blogger எம்.கே.குமார்

ரமேஷ் அவர்களின் மறுமொழி பலவகையிலும் சிந்திக்க வைத்தது.

அதனைத்தொடர்ந்து நானும் ஒரு மறுமொழி திண்ணைக்கு எழுதியிருக்கிறேன். அதன் நகல் இங்கே...

எம்.கே.

சிங்கப்பூரின் இலக்கியச்சூழல்- திரு. தமிழவன் அவர்களின் கட்டுரைக்கு மறுமொழி!

சிங்கப்பூரில் தீவிர இலக்கியத்திற்கான முகாந்திரங்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருந்ததாகத்தெரியவில்லை எனவும் சுந்தர ராமசாமி மற்றும் திலீப்குமார் உட்பட யாரும் எந்த சிங்கப்பூரைய படைப்பாளிகளையோ படைப்பையோ முன்னிறுத்தவில்லை எனவும் நல்ல படைப்புகள் இருக்கும்/இருந்த பட்சத்தில் அவர்களாலோ அல்லது அவைகளாகவோ பிரதானப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் தமிழவன் கூறிய கருத்துகளில், சிங்கப்பூரில் தற்போது வாழுகின்ற இளைய வாசகர்களில்/படைப்பாளிகளில் ஒருவனாகிய நானும் இயைந்துபோகும் வேளையில் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன். அவற்றிற்கு முன்பாக எனக்கெழுந்த சில எண்ணங்களையும் அடையாளப்படுத்துகிறேன்.

சிறுபத்திரிகைச் சூழலையும் சுந்தர ராமசாமி அவர்களையும் முன்னிறுத்தி, திரு.தமிழவன் அவர்களின் ஆராய்ச்சி அமைந்ததின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. உலகெங்குமான தரமான ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்கு சிறுபத்திரிகையினை அது சார்ந்தவர்களின் பார்வைகளை தமிழவன் அவர்கள் அளவுகோலாகக் கொள்வது சரியான நோக்கா என்பதை இலக்கிய விமர்சகர்கள் சொல்ல முன் வரலாம். தமிழகத்தின் இலக்கியவளர்ச்சியோடு சிங்கப்பூரின் இலக்கிய வளர்ச்சியை பொது நோக்குதலும் சரியான தன்மை கொண்டதுதானா என்பதையும் கொஞ்சம் சிந்தித்துப்பார்க்கவேண்டும். இவை எல்லாம் கொஞ்சம் ஆரோக்கியத் தன்மைக்கு அடிகோலினாலும் ஒப்பு நோக்குதலுக்கு பொருந்திவரும் எனக்கூற இயலவில்லை.

திரு. சுப்ரமணியன் ரமேஷ் (மானஸஜென்) அவர்கள் எழுதியதைப்போல, தமிழகத்தின் இலக்கிய நீட்சி கொண்டதாகவே இருக்க விரும்பி பல்வேறு குழுக்களோடு சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் பயணிக்கிறது என்பதை மூன்று (பண்டிதர்/திராவிட, வானம்பாடி மற்றும் நவீன) பிரிவுகளின் வழி நம்மால் உணர்ந்துகொள்ளமுடியும். இவற்றில் முதல் இரண்டு குழுக்களானது, இலக்கிய உலகின் முதலும் முடிவும் அதுவே என உருவகப்படுத்திக்கொண்டு ஒரே தளத்தில் இயங்கி வருகிறது. மூன்றாவது குழு, இணையம், சிறுபத்திரிகைகள் என அடுத்த தளத்திற்கு விரிவுபடுத்த முயல்கிறது.

சிங்கப்பூரில் ஜாதிப்பிரச்சனையை வைத்தோ, மதப்பிரச்சனையை வைத்தோ, சமூக அவலங்களை வைத்தோ, அரசின் செய்லபாடுகளை வைத்தோ படைப்புகள் உருவாக்குவது என்பது கடினம். அவற்றின் ஆழமும் சமுதாயத்தில் அவ்வளவாக (ஒரு படைப்பைப் பிரசவிக்கும் நிலையில்) இல்லாததால், அத்தகு படைப்புகளின் நிலைத்தலும் பிழைத்தலும் வேண்டாத பிரச்சனைக்குத்தான் வழி வகுக்கும்.

'பிள்ளை கெடுத்தாள் விளை' கதை பற்றி இங்கு எழுதினால் பாதிப்பேர் ஆபாசம் என்றும் மீதிப்பேர் புரியவில்லை என்றும் சொல்லிவிட்டுப்போகக்கூடும். இந்தியாவில் இருப்பதைப்போல கதை வந்து முடிந்து ஆறுமாதம், ஒருவருடம் ஆகியும் யாரும் அதை விமர்சித்துக்கொண்டிருக்கமாட்டார்கள். அத்தகு கதைக்களமும் இங்கில்லை என்பதும் இங்கு சொல்ல வேண்டிய அவசியத்திற்குள்ளாகிறது.

"ஒரு உரசல் இல்லாமல் எத்தகைய இலக்கிய வளர்ச்சியும் நடைபெற வாய்ப்பில்லாது போகலாம்; வாய்ப்புக்குறைவாக இருக்கலாம். ஆனால் பொருளியலிலோ கருத்தியலிலோ தனிமனித படைப்புகளிலோ ஒரு உரசல் இருக்கும்பொழுது நல்ல படைப்புகள் உருவாகலாம்" என்று ஒரு கூட்டத்தில் சொன்னார் சிங்கை அரசாங்க நிறுவனத்தில் முக்கியப்பதவியில் இருக்கும் திரு. அருண் மகிழ்நன் அவர்கள்.

இக்கூற்றில் இருந்து, படைப்புகள் எழும் நிலை, அவற்றின் அவசியம் நிலவும் தன்மை, அதன் சிங்கப்பூர் நிலைமை ஆகியவற்றை நாம் எளிதாக உணர்ந்துகொள்ளமுடியும். ஆயினும் சிங்கப்பூரில் தமிழை அரசாங்கம்தான் காக்கிறது; வளர்க்கிறது என்பதும் ஒரு மறுக்கமுடியாத உண்மை! (அண்மையில் சென்னையில் நடந்த புத்தகக்கண்காட்சியில் அதிகத்தொகைக்கு புத்தகம் வாங்கியது சிங்கப்பூர் தேசிய நூலகமாம்!)

சிங்கப்பூரிலிருந்து தமிழின் அடையாளமாக விளங்கும் சில விஷயங்களை இப்போது பார்ப்போம். தொலைக்காட்சி, செய்தித்தாள் மற்றும் வானொலி. தொலைக்காட்சியில் தமிழின் பங்கு சிங்கப்பூரின் இலக்கியத்தரத்துக்கு இணையாகவே உள்ளது. வாசிக்கப்படும் செய்திகளில் மட்டும் தமிழ்நாட்டின் செய்திவாசிப்பை விட இங்கு தமிழைக் கொஞ்சம் ரசிக்கமுடியும். அவ்வளவுதான்! வானொலியில் தமிழின் பங்கு உண்மையில் கொஞ்சம் நன்றாக இருக்கிறது. சினிமாப்பாடல்களுக்கும் விளம்பரங்களூக்கும் நடுவில் அவ்வப்போது தமிழையும் ஞாபகப்படுத்துகிறார்கள். ஆனால் பத்திரிகையின் நிலைமை?

தமிழ்முரசு என்றொரு நாளேடு. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 16 பக்கங்கள் போடும். அவற்றில் ஒரு பக்கம் முழுவதும் தமிழ்நாட்டு சினிமா செய்திகள்(அதற்கு முந்தைய வாரம் வந்த தினமலர்-வாரமலர் செய்திகள்!). இன்னொரு பக்கம், அப்பதிப்பில் தமிழில் வந்திருக்கும் முக்கிய செய்திகள் ஆங்கிலத்தில்! ஒரு பக்கம் ராசிபலன் தவிர கவிதை, கதை என்பதற்கு இருபக்கங்கள். இவைபோக வரிவிளம்பரங்கள்! மற்றபடி முந்தைய நாள் சன் டிவியில் வந்த செய்திகள் தலைப்புச்செய்திகளாய்! கொஞ்சம் உள்ளூர் செய்திகள்!

மற்ற நாட்களில் பத்துபக்கங்கள் மட்டும் என நினைக்கிறேன். சிங்கப்பூரின் தமிழ் மக்கள்தொகையில் மிக மிகச் சிறிய அளவே இதன் சர்குலேஷனாம். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கொஞ்சம் அதிகம். 'இவ்வளவு எளிமையானதாக வழங்கியுமே சிங்கப்பூரர்கள் வாங்குவதில்லை' என அவர்களும், 'என்ன இருக்கிறது வாங்குவதற்கு' என ஒரு சிலரும் அடிக்கடி பேசிக்கொள்வது காதில் விழுகிறது.

விகடன், குமுதம் தரத்தை ஒப்பிடுகையில் இந்நாளேடுவும் தமிழக மக்களின் ரசனைக்கு குறைந்ததல்ல. உண்மையில் இந்திய மக்களின் வாசிப்பும் குறைவாகவே இருக்கிறது. ஆங்கிலசெய்தித்தாள்கள் இலவசமாகவே கிடைக்கும்பொழுது இதையெல்லாம் யார் காசு கொடுத்து வாங்குவார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. பெரும்பாலும் தமிழ் செய்தித்தாள் வாங்குபவர்கள் இந்தியாவிலிருந்து வந்து உழைக்கும் தொழிலாளிகள் என்பதும் பரவலாக இருக்கும் கருத்து.

இதற்கிடையே நல்ல பத்திரிகைகளாய் ஆரம்பித்தவர்கள் எல்லாம் 'கைகடி'யோடு போய்விட்டார்கள். 1935ல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்முரசு இன்னும் நிலைத்து நின்று வருகிறது. அதை ஆரம்பித்த திரு. கோ.சாரங்கபாணி அவர்களின் ஆர்வத்துக்கும் தமிழ் உழைப்புக்கும் ஏற்றவகையில் இப்போது தமிழார்வலர்கள் யாரும் செயல்படுவதில்லை போன்று ஒரு தோற்றம் தமிழிலக்கிய உலகில் நிலவுகிறது.

ஒரே ஒரு பத்திகை (மாத இதழ்) மட்டும் பல வருடங்களாக தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. அது இந்தியன் மூவி நியூஸ்! பாலிவுட் கோலிவுட் செய்திகள், கவர்ச்சிப்புகைப் படங்கள், கிசுகிசுக்கள் மற்றும் பேட்டிகள் என அது வெளிவருகிறது. இவற்றை, தமிழர்கள் மட்டுமின்றி, பாலிவுட்டில் பெரும் ஆர்வம் கொண்ட வட இந்தியர்களும் மலாய் சமூகத்தினரும் தொடர்ந்து வாங்கி வருவது ஒரு காரணமாய் இருக்கலாம்.

பிழைப்பும் அது சார்ந்த பொருளியல் வாழ்க்கையுமாய் ஓடிக்கொண்டிருக்கும் இவ்வாழ்வில் இலக்கியத்தரங்களும் படைப்புகளும் பிறந்து சிறு குழந்தையாகவே நெடுநாட்களாக வளராமல் ஒதுங்கிக் கிடக்கின்றன. அரசாங்கத்தின் உதவியோடு இளைய தலைமுறை, தமது மூதாதையர்களின் துணைகொண்டு காரியத்தில் இறங்கினால் தமிழவன் ஆசைப்படும் விஷயம் வெளிவரலாம். ஆனால் அதற்கு முன்னால் அந்த இளைய தலைமுறையை இலக்கிய உலகின் பக்கம் திருப்பவேண்டியது அவசியமாகிறது. எப்படி அது என்பதுதான் இன்றைய கேள்வி!

எம்.கே.குமார்.

நன்றி: திண்ணை.காம்

July 03, 2005 8:06 PM  

Post a Comment

<< Home