Monday, May 30, 2005

படித்த புத்தகத்திலிருந்து

'குட்டி இளவரசன்' என்னைக் கவர்ந்த புத்தகங்களுள் ஒன்று, எளிமையாக தோன்றும் இந்தப் புத்தகம், அசப்பில் பார்த்தால் குழந்தைகளுக்கான புத்தகம் போன்று தோன்றும். உண்மையில் நாம் பெரியவர்களானதில் இழந்து விட்டவைகளை நினைவுறுத்தும் அறிய புத்தகம். 'பெரியவர்கள்'-என ஆசிரியர் குறிப்பது நம்முடைய அபத்தங்களைத்தான். மிகவும் முக்கியம் என நாம் நம்பும் அபத்தங்கள். ஒரு அறிமுகத்திற்காக 'குட்டி இளவரசனிலிருந்து சில பக்கங்களை தட்டச்சி இருக்கிறேன்.
- மானஸாஜென்.

@@@@@@

இப்போது பெரியவர்களுக்காக சில குறிப்புகள்! ;)

அந்த்வான்த் செந்த்-எக்சுபெரி ஒரு பிரஞ்சு தேசத்திய விமானி , விமானி என்றால் இப்போதைய விமானங்கள் அல்ல, தெளிவான ரேடாரோ, வரைபடங்களோ இல்லாத மிகவும் நம்பகத்தன்மையற்ற எஞ்சின்கள் கொண்ட பத்தான விமானங்கள். விமான ஓட்டிகள் அடிக்கடி காணாமலே போய்விடுவது போன்ற மோசமான சகஜங்கள் நிறைந்த 1925-45 காலகட்டத்திய விமானி. பறப்பதை மிகவும் நேசித்த எக்சுபரி தன் வாழ்வில் இரு முறை மிக மோசமான விபத்துகளிலிருந்து ஆச்சரியமாக உயிர் பிழைத்தார். இரண்டாவது விபத்தில் இவருடைய விமானம் சகாரா பாலையில் தரை இறங்கியது.

Sothern Mail (1929), Night Flight (1931), Wind, Sand Stars(1935), War Pilot, Letter to a Hostage, The Little Prince(1943) ஆகியவை இவரது அற்புதமான கொடை உலகத்திற்கு.

1900 ம் ண்டு ஜூன் 29ல் பிறந்த இவர், 1944 ஜூலை 31 ம் தேதி விமானத்தில் சென்றார். என்ன நிகழ்ந்ததென்றே தெரியாமல் அவரது விமானமும் அவரோடு சேர்ந்து காணாமல் போயிற்று. ஒரு வேளை அவர் குட்டி இளவரசனை மீண்டும் சந்தித்திருக்கக் கூடும். அவனுடைய கிரகத்திற்குச் சென்றிருக்கக் கூடும்!

@@@@@@@

குட்டி இளவரசன் ஆங்கில மொழியில் மொழி பெயர்க்கப் பட்டு கிடைக்கிறது. பிரஞ்சிலிருந்து வெ.ஸ்ரீராம் மற்றும் மதன்கல்யாணியால் நேரடியாக தமிழுக்கு அற்புதமாக மொழி பெயர்க்கப்பட்டு க்ரியா வின் வெளியீடாகக் கிடைக்கிறது.
@@@@@@@

குட்டி இளவரசன்:

ஒரு விமானியின் பார்வையிலிருந்து கதை துவங்குகிறது. அவனது விமானம் மோசமான விபத்தில் சிக்கி சகாரா பாலையில் தரை இறங்குகிறது. உணவுக் கையிருப்புகள் தீர்ந்து விடக்கூடிய அபாயமான சூழல், அவன் தன் விமானத்தை ஒக்கிட முயன்று கொண்டிருக்கும் வாழ்வா சாவா தருணத்தில் குட்டியாய் சிறுவன் ஒருவனைச் சந்திக்கிறான். அந்த சிறுவன் அவனிடம் ஒரு ஆட்டுக் குட்டி படம் வரைந்து தரச்சொல்லிக் கேட்கிறான்...இவ்வாறு தொடங்கும் நட்பின் ஊடாக குட்டி இளவரசன் அவனது குட்டிக் கிரகத்தை விட்டுகோபித்துக் கொண்டு வந்துவிட்டான் என்றும் வரும் வழியில் எண்ணற்ற குட்டி கிரகங்களில் பல வினோத பெரியவர்களை சந்தித்தானென்றும் அறிந்து கொள்கிறான். (குட்டி இளவரசனின் குட்டிக் கோளில் அவனும் ஒரு ரோஜா செடியும் மட்டுமே, அவன் தன் ரோஜா செடியை அளவற்று நேசிக்கிறான், பெண்களின் ஊடலின் பாசாங்கு தெரியாதவனாய், அந்த ரோஜா அவனை விரும்பவில்லை என நினைத்து, வெளியேறி வழியில் தென்படும் கிரகங்களில் வேடிக்கைப் பார்த்தபடி கடைசியாக பூமிக்கு வருகிறான்.) அவரின் புத்தக சமர்ப்பணத்திலேயே தொடங்கிவிடும் கிண்டல். தற்பெருமைக்காரன் பற்றிய குறிப்பை படிக்கும் போதெல்லாம் எனக்கு என் எழுத்தாள நண்பர்கள்தான் நினைவுக்கு வருவார்கள்;)

(நானும் என் நண்பர்களும் பெரியவர்கள் என்ற வார்த்தையை ரொம்பகாலம் கிண்டலுக்கு உபயோகித்துக் கொண்டிருந்தோம், அதிலும் ரஜினி சொல்வதைப் போன்ற பாணியில் இன்னார் ரொம்பப் பெரிய மனிதன் என்று கூறிச் சிரித்துக் கொள்வோம்)

HAVE NICE READING!

@@@@@@@@@@


" லேஓன் வெர்த்திற்கு
இந்தப் புத்தகத்தை பெரியவர் ஒருவருக்குச் சமர்ப்பித்ததற்காக நான் குழந்தைகளிடம் மன்னிப்புக் கேட்கிறேன். இதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு: இந்தப் பெரியவர்தான் உலகத்திலேயே எனக்குக் கிடைத்த சிறந்த நண்பர். மற்றொரு காரணமும் உண்டு: இந்தப் பெரியவர் எல்லாவற்றையும் புரிந்து கொள்வார், குழந்தைகளின் புத்தகங்களைக்கூட. மூண்றாவது காரணம்: இவரோ பிரான்ஸ் நாட்டில் இப்போது பசியிலும் குளிரிலும் வசிப்பவர். இவருக்கு உண்மையான றுதல் தேவை. இந்தக் காரணங்கள் எவையுமே போதவில்லை என்றால் இந்தப் புத்தகத்தை ஒரு காலத்தில் குழந்தையாய் இருந்த இந்தப் பெரியவருக்குச் சமர்ப்பிக்கச் சம்மதிக்கிறேன்.பெரியவர்கள் எல்லோருமே முதலில் குழந்தைகளாக இருந்தவர்கள்தாம் (ஆனால் சிலருக்கு மட்டுமே இது நினைவிருக்கும்). ஆகவே என் சமர்ப்பணத்தைத் திருத்தி அமைக்கிறேன்:

லேஓன் வெர்ட்த்திற்கு
அவர் சிறு பையனாக இருந்த போது."

@@@@@@@@

"..............குட்டி இளவரசனின் கிரகம் சிறுகோள் பி. 612 கத்தான் இருக்க வேண்டும் என்பதற்குச் சரியான காரணங்கள் உண்டு. ஏனென்றால் இக்கிரகம் 1909-ல் துருக்கி வானவியலாளன் தொலை நோக்கியில் ஒரே ஒரு முறை மட்டும் தான் தொன்றியது.

உடனே அகில உலக வானவியலாளர் மாநாட்டில் தன் கண்டுபிடிப்பிற்கு நீண்டதொரு விளக்கத்தைத் தந்தான். னால் யாரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் அணிந்திருந்த டைதான் அதற்குக் காரணம். பெரியவர்களே இப்படித்தான்.

நல்ல காலமாக, சிறுகோள் பி. 612-ன் கௌரவத்தை நிலை நாட்ட, ஒரு கொடுங்கோள் துருக்கி மன்னன் தன் குடிமக்களுக்கு மரண தண்டனையைக் காட்டி, ஐரோப்பிய டைகளை அணியும்படிக் கட்டளையிட்டான். 1920-ல் எழிலான டையணிந்து அந்த வானவியலாளன் அதே விளக்கத்தை மறுபடியும் தந்தான். இம்முறை எல்லோரும் அவன் கருத்துக்களை ஏற்றுக் கொண்டனர்.

சிறுகோள் பி. 612 பற்றி நான் உங்களுக்கு இவ்வளவு விளக்கங்களைக் கதையாகக் கூறியதும், அதன் எண்ணை அறிவித்ததும் பெரியவர்களுக்காகத்தான். பெரியவர்களுக்கு எண்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு புதிய நண்பனைப் பற்றி நீங்கள் அவர்களிடம் பேச நேர்ந்தால், அவர்கள் முக்கியமானவற்றைப் பற்றி ஒருபோதும் விசாரிப்பதே இல்லை. "அவன் குரல் எப்படி இருக்கும்? அவனுக்குப் பிடித்த விளையாட்டுகள் என்ன? அவன் பட்டாம்பூச்சிகளைச் சேகரிக்கிறானா?" என்று உங்களிடம் ஒரு போதும் கேட்கவே மாட்டார்கள். " அவன் வயது என்ன? அவனுக்கு உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்? அவன் எடை என்ன? அவனுடைய அப்பா எவ்வளவு சம்பாதிக்கிறார்?" என்று உங்களை விசாரிப்பார்கள் அப்போதுதான் அவனைத் தெரிந்து கொண்டதாக நினைக்கிறார்கள். நீங்கள் பெரியவர்களிடம் "நான் செங்கல்லால் கட்டப் பட்ட ஒரு அழகிய வீட்டைப் பார்த்தேன். பலகணியில் கொத்துக் கொத்தாக ழெரேனியம் மலர்கள் இருந்தன. கூரைமேல் புறாக்கள் இருந்தன..." என்று சொன்னால், அவர்கள் அவ்வீட்டைக் கற்பனைக் கண்ணால் காணச் சக்தியற்றவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு " நான் இலட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டைப் பார்த்தேன்" என்றுதான் சொல்ல வேண்டும். உடனே, "என்ன அழகு " என்று வாய்பிளப்பார்கள்.........."

@@@@@@@

"-- ஒரு கிரகத்தில் செக்கச் சிவந்த பிரமுகர் ஒருவரை நான் சந்தித்தேன். அவர் ஒருபோதும் மலரை முகர்ந்ததில்லை. வின்மீணை ஒருபோதும் கவனித்ததில்லை. யாரிடமும் அன்பு செலுத்தியதில்லை. கூட்டல் கணக்கைத் தவிர வேறொன்றையும் செய்ததில்லை. நாள் முமுவதும் உன்னைப் போலவே 'நான் ஒரு கண்டிப்பான மனிதன்! நான் ஒரு கண்டிப்பான மனிதன்!' என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதுவே அவரை கர்வத்தால் நிமிர வைக்கிறது. ஆனால் அது மனிதனல்ல, காளான்.

என்ன?

ஒருகாளான்!........."

@@@@@@@@@

" ........இரண்டாவது கிரகத்தில் ஒரு தற்பெருமைக்காரன் வசித்து வந்தான்:

--ஆகா! இதோ ஒர் ரசிகன்! என்று கூவினான், குட்டி இளவரசனைத் தூரத்தில் கண்ட உடனே. ஏனெனில், தற்பெருமைக்காரர்களுக்கு மனிதர்கள் எல்லோரும் ரசிகர்கள்.

---வணக்கம், உங்கள் தொப்பி வேடிக்கையாக இருக்கிறது, என்றான் குட்டி இளவரசன்.

---இது வணங்குவதற்காக உள்ளது. என்னைக் கைதட்டிப் பாராட்டும் போது வணங்குவதற்காக இது. இந்தப் பக்கம், துரதிருஷ்டவசமாக யாரும் ஒரு போதும் வருவதில்லை, என்றான் அந்தத் தற்பெருமைக்காரன்.

---உண்மையாகவா? என்றான் எதுவும் புரிந்து கொள்ளாத குட்டி இளவரசன்.

__ எங்கே, கொஞ்சம் கைதட்டு, என்று கேட்டுக் கொண்டான் தற்பெருமைக்காரன்.

குட்டி இளவரசன் கைகளைத் தட்டினான். தற்பெருமைக்காரன் தொப்பியைத் தூக்கிப் பணிவாக வணங்கினான்.

__ அரசன் சந்திப்பைக்காட்டிலும் இது வேடிக்கையாக இருக்கிறது, என தனக்குள்ளே கூறிக்கொண்டான், குட்டி இளவரசன். திரும்பவும் கைகளைத் தட்டினான். தற்பெருமைக்காரன் மீண்டும் தொப்பியைத் தூக்கி வணங்கினான்.

இவ்வாறு ஒரே மாதிரியான விளையாட்டின் ஐந்து நிமிடப் பயிற்சிக்குப் பின், சலிப்பினால் குட்டி இளவரசன் களைப்படைந்தான்:

__அது சரி, தொப்பி கீழே விழுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். ஆனால் தற்பெருமைக்காரனுக்கு இது காதில் விழவில்லை.

தற்பெருமைக்காரர்கள் எப்போதும் புகழுரைகளை மட்டுமே காதில் வாங்கிக் கொள்வார்கள்.

__நீ உண்மையிலேயே என்னைப் பாராட்டுகிறாயா? என்று குட்டி இளவரசனிடம் கேட்டான்.

__ பாராட்டுதல் என்றால் என்ன?

__பாராட்டுதல் என்றால், நான்தான் கிரகத்திலேயே மிக அழகானவன், மிகச் சிறப்பாக ஆடை அணிந்திருப்பவன், மிகவும் பணக்காரன், மிகவும் புத்திசாலி என்று அங்கீகரிப்பது.

__ ஆனால் நீ ஒருவன்தானே இந்தக் கிரகத்தில் இருக்கிறாய்!

__ என்னுடைய இந்த ஆசையை நிறைவேற்று. போனால் போகிறது என்று என்னைப் பாராட்டு!

__நான் உன்னைப் பாராட்டுகிறேன். ஆனால், இதில் உனக்கு என்ன இவ்வளவு ஆர்வம்? என்று தோள்களைச் சற்றே குலுக்கியவாறு கேட்டான் குட்டி இளவரசன்.

குட்டி இளவரசன் புறப்பட்டான்.

"பெரியவர்கள் நிச்சயமாக விசித்திரமானவர்கள்தான்" என்று தனக்குள் கூறிக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தான்.


@@@@@@
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

11 கருத்துக்கள்:

கூறியவர்: Blogger Arul

ரசித்தேன். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
>சிறுகோள் பி. 612-ன் கௌரவத்தை நிலை நாட்ட, ஒரு *கொடுங்கோள்* துருக்கி மன்னன்

இது கொடுங்கோல் தானே?

அன்புடன்,
இர.அருள் குமரன்

May 30, 2005 9:24 AM  
கூறியவர்: Blogger Vijayakumar

ரமேஷ், நான் இந்த புத்தகத்தின் ஆங்கில வெர்ஷனை பார்த்தேன். படங்கள் எல்லாம் சிறுவர்கள் புத்தகமோ என சந்தேகம் எழுப்பியதால் தவற விட்டு விட்டேன். நல்ல அறிமுகம் இந்த புத்தகத்திற்கு. படிச்சிரலாம் விடுங்க. BTW அந்த புத்தகத்தின் தமிழ் வெர்சன் உங்ககிட்ட இருந்தா நான் முன்பதிவு செய்துகிறேன். கட்டாயம் எனக்கு வேனும்.

May 30, 2005 9:30 AM  
கூறியவர்: Blogger சுந்தரவடிவேல்

இது நான் விரும்பும் புத்தகங்களுள் ஒன்று!

May 30, 2005 9:48 AM  
கூறியவர்: Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)

அன்புள்ள ரமேஷ்,
இந்தப்புத்தகத்தை என் மகனுக்கு வாங்கி கொடுத்து அவன் படித்தபிறகு, எங்கேயோ வைத்திருக்கிறேன். ஆங்கிலப் பதிப்பு. தேடிப்பார்க்கவேண்டும். படிக்கத்தூண்டிவிட்டீர்கள். இத்தியாசமான புத்தகத்திற்குத் தேவையான பதிவு. நன்றி. அன்புடன், ஜெ

May 30, 2005 10:12 AM  
கூறியவர்: Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)

மன்னிக்கவும்

//இத்தியாசமான//

வித்தியாசமான என்றிருக்கவேண்டும்.

May 30, 2005 10:13 AM  
கூறியவர்: Blogger ஈழநாதன்(Eelanathan)

ரமேஷ் அந்நியன் தந்த தாக்கத்தில் குட்டி இளவரசன் படிக்க பெருவிருப்புக் கொண்டிருக்கிறேன்.விரைவில் படித்துவிட்டுப் பகிர்கிறேன் நன்றி இங்கே பகிர்ந்துகொண்டதற்கு

May 30, 2005 11:53 AM  
கூறியவர்: Blogger Thangamani

அருமையான புத்தகம். தமிழ் மொழிபெயர்ப்பும் புத்தகத்தின் அருமையை குலைக்காத வகையில் இருக்கும். புத்தகத்தின் ஆங்கில வடிவை (http://www.angelfire.com/hi/littleprince/frames.html) இங்கு படிக்கலாம்.

பதிவுக்கு நன்றி!

May 30, 2005 12:52 PM  
கூறியவர்: Blogger Vijayakumar

//புத்தகத்தின் ஆங்கில வடிவை (http://www.angelfire.com/hi/littleprince/frames.html) இங்கு படிக்கலாம். //

நன்றி தங்கமணி அண்ணாச்சி. 25 வெள்ளிகளை சேமிக்க வைத்தீர்கள்.

May 30, 2005 12:58 PM  
கூறியவர்: Blogger Vijayakumar

தங்கமணி அண்ணாச்சி கொடுத்த சுட்டியிலிருந்து சுட்டு, ஒரேயடியாக அந்த புத்தகத்தை உங்கள் கணியில் இறக்கி ஆப்-லைனில் படிக்க PDF மற்றும் MS Reader வடிவத்தில் கிடைக்கிறது. உங்கள் கணியில் இறக்கிக் கொள்ள

http://s7.yousendit.com/d.aspx?id=226N3HJ8TP4OA09I0WG8Z8W36Y

அய்யா வாங்க... அம்மா வாங்க... வாங்க வாங்க வாங்க... ஒரு வரம் மட்டுமே புக்கு கிடைக்கும் வாங்க வாங்க... அய்யா வாங்க அம்மா வாங்க... வாங்க வாங்க... அள்ளிகிட்டு போங்க... வாங்க வாங்க.

May 30, 2005 2:07 PM  
கூறியவர்: Blogger எம்.கே.குமார்

அண்மைக்காலத்தில் நான் படித்த மறக்கமுடியாத புத்தகங்களுல் ஒன்று இது. புத்தகத்தைக் கொடுத்து உதவிய 'சிறுவர்களில் ஒருவரான' மானஸாஜென்னுக்கு எனது நன்றிகள். :-)

எழுத்தாள நண்பர்களில் சில 'பெரியவர்கள்' இருப்பதாக மானஸாஜென் சொன்னதின் அர்த்தம் இப்போதுதான் எனக்கு விளங்குகிறது.
அடப்பாவிகளா!
இனிமே யாரிடமாவது "நீங்க பெரிய ஆளூங்க" என்று இவர் சொன்னால் பத்தடி தள்ளியே நிற்கவேண்டும் போல! :-)

காட்சிக்குக் காட்சி கிண்டலையும் பெரியவர்களின் மீதான சாடலையும் இப்புத்தகத்தில் காணக்கிடைக்கிறது.

முழுவதையும் தான் சொல்வதை விட அவர்களே படித்துத் தெரிந்துகொள்ளட்டும் என்ற நோக்கில்
நல்ல புத்தகத்தை கண்களில் காட்டி(மட்டும்)விட்டிருக்கிறார். அவருக்கு நன்றி.

அல்வா மக்கா, பாத்திரத்தோட இறக்கி சூடா உள்ளே வெச்சிடோம்ல?! நன்றிவெ.

அன்பன்,
எம்.கே.குமார்

May 31, 2005 9:55 AM  
கூறியவர்: Blogger லதா

/அல்வா மக்கா, பாத்திரத்தோட இறக்கி சூடா உள்ளே வெச்சிடோம்ல?! நன்றிவெ./

ஆனா எப்போ சாப்டுவோம்னு சொல்லமாட்டோம்ல :-))

June 11, 2005 3:50 AM  

Post a Comment

<< Home