Wednesday, July 13, 2005

சிங்கப்பூர் எழுத்தாளர் பெருவிழா

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சிங்கப்பூரில் நடைபெறும் சிங்கப்பூர் எழுத்தாளர் பெருவிழா எதிர்வரும் முதல் வரை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்,சீனம்,மலாய்,ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் அவற்றைப் பேசும் மக்களையும் அவர்களது இலக்கியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கவிதை,கதை,கட்டுரை,குறும்படங்கள் திரையிடல்,திரை விமர்சனம்,நாவல் விமர்சனங்கள்,வாசிப்புப் போட்டிகள் எழுத்தாளர் சந்திப்பு போன்ற பல நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியுள்ளன.

சிங்கையில் வதியும் எழுத்தாளர்களுடன் கூடவே தெற்கு,தென்கிழக்காசிய நாடுகளிலிருந்தும் பல்வேறு மொழிகளைப் பேசும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் நாடகாசிரியர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இலக்கியவாதிகளுடன் ஊடாடி அவர்களது நாட்டு இலக்கியங்களைப் பற்றி அறியும் வாய்ப்பு இது.

தமிழ் மொழி இலக்கியத்துவத்தைப் பிரதிநிதிக்கும் வகையில் கனடாவிலிருந்து கவிஞர் சேரனும்,தமிழ்நாட்டிலிருந்து பூமணி,பாமா இருவரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.இவர்களுடன் உள்ளூர் செயற்பாட்டளர்களாகிய கவிஞரும் நாடக ஆசிரியருமான இளங்கோவன்,சுந்தரராசு ஆகியோரும் பங்குபற்றுவார்கள்.
இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேராத பிறமொழி இலக்கியவாதிகள் மூவரும் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

மலேசிய இலக்கியத்தையும் சிங்கை இலக்கியத்தையும் ஒன்றாகத் தரிசிக்கும் நிகழ்வும் இநிகழ்வுகளுள் ஒன்றாகும்.

நிகழ்வுகளின் முத்தாய்ப்பாக புதிய இணைய எழுத்தாளர்கள் என்ற தலைப்பில் ஒவ்வொரு மொழியிலிருந்தும் சிங்கப்பூர் வலைப்பதிவாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவர்களின் வலைப்பதிவு அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் ஏற்பாடாகியிருக்கிறது.
வலைப்பதிவுகள் நிகழ்வில் தமிழைப் பிரதிநிதிக்க சிங்கை முரசு வலைப்பதிவு தேர்வாகியுள்ளது என்பதை மிகுந்த மனமகிழ்வுடன் அறியத் தருகிறோம்.
அறிமுக நிகழ்வின் போது சிறப்பினை அடையவேண்டுமென்பதற்காக இப்போதே சிங்கை முரசு தனது வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க இருக்கிறது.அங்கத்தினர்களின் முழு வினைத்திறனையும் காண்பிக்கவேண்டிய நேரமிது.மற்றைய மூன்று மொழிகளையும் விட தமிழ் வலைப்பதிவுகளின் பெருமையையும் கூடவே உலகத் தமிழ் வலைப்பதிவுகளின் பிரதிநிதித்துவத்தையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நேரமிது

சிங்கை பற்றிய வரலாற்றுக்குறிப்புகள்,புகைப்படங்கள்,சிறப்புச் செய்திகள் நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் என்று இந்தப் பக்கங்களை நிறையுங்கள்
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

4 கருத்துக்கள்:

கூறியவர்: Blogger அன்பு

தகவலை இங்கே இட்டு முந்திக்கொண்ட நண்பருக்கு நன்றியும், பாராட்டுக்களும்...

July 13, 2005 6:12 PM  
கூறியவர்: Blogger மாலன்

வாழ்த்துகள்.சிங்கப்பூரின் மிக முக்கிய இலக்கிய நிகழ்ச்சி இது. முன்பு ஒரு முறை (1994 என்று ஞாபகம்)நான் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு கலந்து கொண்டிருக்கிறேன். நானும் சா.கந்தசாமியும் கலந்துகொண்டோம். அதற்கு முந்தைய ஆண்டுகளில் சுந்தரராமசாமி, இ.பா, அசோகமித்ரன், ந.முத்துசாமி,அம்பை ஆகியோர் கலந்து கொண்டார்கள். க்டந்த ஆண்டு தமிழ்நிகழ்ச்சிகளுக்கு அதிகம் பேர் வரவில்லை எனக் கேள்விப்பட்டேன்.இந்த முறை அந்த மாதிரியான பெயர் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மற்ற மொழிகளில் (சீனம், மலாய், ஆங்கிலம்) என்ன நடக்கிறது என நேரிடையாக அறிந்து கொள்ள நல்லதோர் வாய்ப்பு. அறிந்து கொள்பவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் வலைப்பதிவை அசத்திவிடுவீர்கள் என எனக்கு நம்பிக்கை உண்டு.

அன்புடன்,
மாலன்

July 13, 2005 7:33 PM  
கூறியவர்: Blogger எம்.கே.குமார்

மகிழ்ச்சியான தகவலை யாவ்ரும் அறியத்தந்ததற்கு நன்றி.
வாழ்த்துகள் நண்பர்களே!

எம்.கே.

July 15, 2005 10:19 AM  
கூறியவர்: Blogger அன்பு

அன்புக்குரிய மாலன்,

வாழ்த்துக்களுக்கும், மேல் தகவலுக்கும் நன்றி.

கடந்த ஆண்டு தமிழ்நிகழ்ச்சிகளுக்கு அதிகம் பேர் வரவில்லை எனக் கேள்விப்பட்டேன்.இந்த முறை அந்த மாதிரியான பெயர் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கண்டிப்பாக முயற்சி செய்கிறோம்.

July 15, 2005 5:12 PM  

Post a Comment

<< Home