Wednesday, July 06, 2005

தயவுசெய்து தாய்மையைக் கொச்சைப் படுத்தாதீர்கள்!

வலைப்பூவில் நடந்துவரும் அசிங்கங்களுக்கும் ஆபாச அர்ச்சனைகளுக்கும் எதிராக ஒரு தோழியின் குமுறல். ஒட்டுமொத்த பெண்களின் கருத்து மட்டுமில்லை இது. தாய்மையைக் கேவலப்படுத்தும் இகழ்வுக்கு எதிரான எல்லோருடைய குரலும்தான்! குழுவில் வலியறியத்தந்தது, இங்கே பொதுவில்!
_______________________________________________________________________________________________
வலைப்பூ என்ற பெயரைக் கேட்கும் போது ஏதோ புதுக் கவிதை போல நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த வலைப்பூக்கள் வழியாக நடக்கும் ஆபாசங்களைப் படிக்கும் போது இது பூக்களா இல்லை போர்க்களமா என்ற கேள்வி எழுகின்றது. படித்த புத்தகங்களைப் பற்றி, பார்த்து ரசித்த இல்லை ரசிக்காத திரைப்படங்களைப் பற்றி, சமுதாயப் பொது விஷயங்களைப் பற்றி, வாழ்க்கை அவலங்களைப் பற்றி, தங்களுடைய சொந்த அனுபவங்களைப் பற்றி என்று எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். எல்லோரிடமும் ஒரு எழுத்தாளர் ஒளிந்து கொண்டிருக்கிறார். அதை வெளிப்படுத்த ஒரு அழகான அருமையான ஊடகம் கிடைத்து விட்டது என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த இணைய நண்பர்களுக்கு தொடர்ச்சியாக வரும் அசிங்கங்களைப் படித்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக ஒரு மூன்றாந்தரமான பாக்கெட் நாவல் அதுவும் வெறும் ஆபாசத்திட்டுகளாக படிக்கும் போது அருவெறுப்புத்தான் மிஞ்சுகிறது.

பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று யாரும் இல்லை. மனிதனின் உயர்வும் தாழ்வும் தோலின் நிறத்தாலோ, பிறப்பாலோ முடிவு செய்யப் படுகின்ற விஷயம் இல்லைதான். நன்கு படித்த நாகரிகம் பெற்ற மனிதர்கள் அனைவருமே இதை அறிந்திருந்தாலும் உலகமுழுவதும் இதைப் போன்றச் சிறுமைகள் தொடர்ந்து கொண்டுத்தான் இருக்கிறது. இந்த விஷயத்தை எதிர்ப்பதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்ற விஷயம்தான். தனி மனிதனுக்கு இருக்கும் எழுத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி இதைப் போன்ற சமூக அவலங்களை சுட்டிக் காட்டியும் தட்டிக் கேட்டும் எழுதட்டும்.

ஆனால் இதை பற்றி எழுத்தும் போது ஒரு தனி மனிதனை குறி வைத்து திட்டுவதும் அவர் தன் இனம் தான் உயர்ந்தது என்று கூறி கொள்கிறார் என்பதற்காக அந்த இனத்தையே ஒட்டு மொத்தமாக திட்டி, அவர் என்னவோ அந்த இனத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் கடவுளா என்ன? அப்படிச் அவர் சொல்வது அவரின் தனிப்பட்டக் கருத்தாக இருக்கலாம். உண்மையிலேயே இந்த ஆபாசத் திட்டுகளால் பாதிப்படைவது பெண்கள்தான்! ஒரு பெண்ணை மோசமாகத் திட்டுவது என்று தீர்மானித்து திட்ட ஆரம்பித்தால் அவளின் நடத்தயை மோசமாக வர்ணித்துத் திட்டினால் போதும். அதேப் போல் ஒரு ஆணை மோசமாகத் திட்டுவது என்று தீர்மானித்து திட்ட ஆரம்பித்தால் அவனை எதுவும் தனிப்பட்ட முறையில் திட்ட வேண்டாம். அவன் தாய், சகோதரி, மனைவி, மகள் போன்ற பெண் உறவுகளை கொச்சைப் படுத்தி யாருக்கு யாருடன் உறவு? எப்படிப்பட்ட உறவு? என்று திட்டினால் போதும். அவனைத் திட்டியதாக அர்த்தம். இது சரியா? தலித்துகள் சமுதாயத்தில் சரியாக நடத்தப்படுவதில்லை என்று ரத்தம் கொதிக்க எழுதுகிறார்களே தலித்துகளை விட மோசமாக பெண்கள் நடத்தப்படுவதைப் பார்த்தால் தலித்துகள் பெண்கள் சமுதாயம்தான்!

ஒரு ஆண் பல பெண்களுடன் பழகி, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் வைத்திருந்தால் அது அவனுடைய ஆண்மையின் வெற்றி! இப்படியே மூளைச்சலவை செய்யப் பட்ட சமூகத்தில் அம்மாவையும் உடன் பிறந்தவளையும் சொந்த மகளையும் தரம் கெட்ட வார்த்தைகளால் திட்டப் படுவதைப் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதானிருக்க முடியும். நரகலின் மேல் கல்லைப் போட்டால் அது மேலே தெரிக்கத்தானே செய்யும்? அதைச் சந்தனம் என்று வாரிப் பூசிக்கொள்ள முடியுமா?

இணையத்தின் மூலம் பல எழுத்தாள நண்பர்கள் கண்ணியமானவர்கள் என்று நம்பிகொண்டிருக்கும் பெண்கள் அடுத்த முறை அவர்களைச் சந்திக்கும் போது ஒரு சிறு நெருடல் பல்லில்சிக்கிய நார் போல!

அதை அகற்றினாலதான் அந்த அவஸ்தை தீரும். நம் எழுத்துகளைப் படித்து அதற்கு பின்னூட்டம் தந்தால் இனிமேல் அசட்டுத்தனமாக நன்றி என்று கூடப் பதில் போட வேண்டாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஹை டெக் ஆசாமிகளைப் போல் துப்பறியும் திறமையெல்லாம் எல்லோருக்கும் கிடையாது. தமிழ் மட்டுமே நன்றாகத் தெரியும். கணிணியில் அடிப்படை அறிவு அதுவும் நமக்குத் தேவையான விஷய ஞானம் மட்டுமே பெற்றிருக்கும் சாதாரணர்களுக்கு இதைப் போன்ற சைபர் சண்டைகளில் (நிஜமாகவே இது சைபர் சண்டைதான்! சப்பை மேட்டரான இட்லியில் தொடங்கியது) இன்னும் தேர்ச்சி பெறவில்லை.

சிலம்பாட்டம் தெரிந்தவரிடம்தான் சிலம்பம் ஆடி வெற்றி பெற்றால்தான் அது வெற்றி. குச்சியே பிடிக்கத் தெரியாதவரை போட்டு அடிஅடி யென்று அடித்து குற்றுயிரும் கொலையுருமாக ஆக்குவதில் என்ன வீரம் இருக்கிறது? அடுத்த முறையாவது முன்பின் பார்க்காத பெண்களையும் தாயையும் திட்டுவதை விட்டு விட்டு வேறு ஆயுதங்களைத் தேடுங்கள்!

சித்ரா ரமேஷ்
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

6 கருத்துக்கள்:

கூறியவர்: Blogger dondu(#11168674346665545885)

"ஆனால் இதை பற்றி எழுத்தும் போது ஒரு தனி மனிதனை குறி வைத்து திட்டுவதும் அவர் தன் இனம் தான் உயர்ந்தது என்று கூறி கொள்கிறார் என்பதற்காக அந்த இனத்தையே ஒட்டு மொத்தமாக திட்டி, அவர் என்னவோ அந்த இனத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் கடவுளா என்ன? அப்படிச் அவர் சொல்வது அவரின் தனிப்பட்டக் கருத்தாக இருக்கலாம்."

நீங்கள் குறிப்பிட்ட நபர் நான்தான். ஆகவே நான் உண்மையில் என்ன கூறினேன், அதை எந்தச் சூழ்நிலையில் கூறினேன் என்பதை இங்கு கூறுகிறேன், முடிவு உங்கள் கையில்.

என் ஜாதிதான் உயர்ந்தது என்று நான் எப்போதுமே கூறவில்லை. உண்மை நிலை என்னவென்றால் பார்ப்பனர்கள் நிலை தமிழகத்தில் கேவலமாக இருப்பதால் பல பார்ப்பனர்கள் தங்கள் வேர்களை மறைத்து வாழ்கின்றனர். அவர்களில் சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று பார்ப்பனர்களை மற்றவர்களை விட அதிகம் தாக்குகின்றனர். இந்த நிலையில் நான் முன் வந்து என் பார்ப்பன வேரைக் கூறிக் கொண்டு அதில் பெருமை அடைகிறேன் என்றும் கூறியதை ஒரு சவாலாகத்தான் செய்தேன். கல் வீச்சுக்கள் வரும் என்றாலும் அதை செய்தேன். அதை செய்ததற்காக வருத்தப்படவில்லை.

இவற்ரையெல்லாம் "சில வெளிப்படையான எண்ணங்கள்" என்றப் பதிவில் என் வலைப்பூவில் ஏப்ரல் இரண்டாம் தேதி 2005-ல் எழுதினேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/04/blog-post.html

இப்பதிவுக்கு வந்த பின்னூட்டங்களையும் பாருங்கள். எவ்வளவு கண்ணியமாக விவாதங்கள் நடந்தன என்று. ஆனால் ஒருவர் மட்டும் என்னை விட்டாது பின் தொடர்ந்தார். நான் எதைப்பற்றி, யாரைப் பற்றி எழுத வேண்டும் என்றெல்லாம் உபதேசம் செய்ய ஆரம்பித்தார். அவருடன் எனக்கு ஏற்பாட்ட கருத்து மோதல்கள் தமிழ்மணத்தில் எல்லோருக்கும் தெரியும். பிறகு என் பெயரில் போலி பின்னூட்டங்கள் வந்தன இதுவும் எல்லோரும் அறிவர். இப்போதைக்கு அவ்வளவுதான் கூற முடியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

July 06, 2005 12:57 PM  
கூறியவர்: Blogger எம்.கே.குமார்

நண்பர்களே,

பாக்கியராஜ் தனது சகோதரிகளுடன் ஒரு படத்திற்குச் செல்வார். படத்தின் இடையில் வரும் கவர்ச்சியான காட்சியொன்றைத் தவிர்க்க, ஒரு ரூபாய் நாணயத்தைக் கீழே போட்டுவிட்டு அவர்களைத் தேடச்சொல்லுவார். திரையில் ஓடும் அக்காட்சி, அவர்கள் அக்காசை எடுத்து விடுவதற்குள் முடீந்துவிடவேண்டுமே என தவிப்பார். தனது சகோதரிகளை மிகவும் நேசிக்கும் ஒருவனுடைய தவிப்பும் நேசமும் இப்படித்தான் இருக்கும்.

சகோதரிகளாக, தோழிகளாக, குடும்ப நண்பர்களாக எத்தனையோ பெண்களை இணையம் வழி(யும்) நாம் பழகி வந்த்திருக்கிறோம். அவர்களும் இணையம் படிக்கிறார்கள்; இதுபோக வீட்டிலுள்ளவர்களும் இங்குள்ளவற்றையெல்லாம் படிக்கிறார்கள்.

இந்த கருமாந்திரத்தையெல்லாம் படிக்கும்போது எங்கே அவர்களெல்லாம் இதைப் படித்துவிடப்போகிறார்களோ என்ற பயமும் தவிப்பும் எனக்கு வந்துவிட்டது. மிக வருத்தமாகவும் ஆகிவிட்டது.

ஜாதி, மதமெல்லாம் தாண்டி மனித உறவுகளும் அன்புமே வாழ்க்கைக்கு முக்கியம். அவற்றைக் குழியில் வைத்து மூடி விடாதீர்கள். உலகிலேயே மிகப்புனிதமானவர்கள் நமது தாய்மார்கள். அவர்களை எப்போதும் வருத்தத்திற்குள்ளாக்காதீர்கள்.அது கொடிய பாவம்!

எம்.கே.குமார்.

July 06, 2005 12:57 PM  
கூறியவர்: Blogger Salahuddin

//அடுத்த முறையாவது முன்பின் பார்க்காத பெண்களையும் தாயையும் திட்டுவதை விட்டு விட்டு வேறு ஆயுதங்களைத் தேடுங்கள்!//

கருத்து வேறுபாடுகள், கொள்கை மோதல்களை வெளிப்படுத்த எவ்வளவோ நாகரீகமான வழிகள் இருக்கின்றனவே! தாய்மையையும் சகோதர உறவுகளையும் அசிங்கப்படுத்தி ஒருவர் என்ன சாதிக்கப்போகிறார்? இணையம் தரும் முகமூடி வசதியை பயன்படுத்திக்கொண்டு இவ்வாறெல்லாம் எழுத்ததுணிவது மிக வருத்தத்திற்குறிய செயல்.

- சலாஹுத்தீன்

July 06, 2005 1:03 PM  
கூறியவர்: Blogger குழலி / Kuzhali

mika varuthamana seykai, purakaniyungal endrum sollamudiyavillai mika vedhaniyana seyal

July 06, 2005 2:22 PM  
கூறியவர்: Blogger ramachandranusha(உஷா)

வருத்தமாய் இருக்கிறது. இனி இணையம் பக்கம் வர வேண்டுமா என்ற எண்ணம் கூட டோண்டு அவர்களின் வலைப்பதிவை காலையில் பார்த்துவிட்டு, தோன்றியது. என்ன நடக்கிறது? பயமாகவும் இருக்கிறது.

July 06, 2005 2:33 PM  
கூறியவர்: Blogger ஜெ. ராம்கி

கிண்டல், கேலியாக ஆரம்பித்து தனிமனித தாக்குதலில் தொடர்ந்து இன்று ஆபாச கதைகளையும் தாண்டி அசுரத்தனமாக எகிறும் கலாசாரம் பயமுறுத்துகிறது. ஆள்மாறாட்டங்களினால் பல பதிவுகளை படிக்கவும் கருத்து சொல்லவும் பயமாக இருக்கிறது. இப்படியோ போனால், வலைப்பதிவாளர்கள் கூட்டங்களில் இணைய சகோதரிகளின் முகத்தில் விழிக்க என்னால் முடியாது.

July 06, 2005 4:14 PM  

Post a Comment

<< Home