Sunday, April 03, 2005

தீவிர இலக்கியம் என்றால் என்ன?

வட அமெரிக்க இலக்கிய இதழ் 'தென்றல்'. இதன் ஆசிரியர்கள் P.அசோகன், மணி M. மணிவண்ணன் மற்றும் மதுரபாரதி ஆகியோர். மார்ச் மாத இதழில் 'அம்மா பேசினாள்' என்ற என்னுடைய கதை பிரசுரமாகியுள்ளதால், மார்ச் இதழின் ஒரு பிரதி கிடைக்கப்பெற்றேன்.

பகிர்ந்துகொள்ள இதழில் நிறைய இருந்தாலும், 'இளம் எழுத்தாளர்கள் குழுக்களில் மாட்டிக்கொள்ளக்கூடாது' என்று அக்கறையோடு கூறியுள்ள திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் நேர்காணலில் இருந்த பல கேள்விகளில் ஒரு கேள்வி, 20 மார்ச் அன்று நடந்த நமது இரண்டாவது கூட்டத்தின்போது எழுப்பப்பட்ட கேள்வியின் தொடர்பானது என்று தோன்றியதால், அதை மட்டும் தட்டச்சி இங்கு இடுகிறேன். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் பதில், இதழில் திருப்பூர் கிருஷ்ணன் அளித்த பதில் என்பதை மீண்டும் சொல்லிக்கொண்டு, தொடர்ந்து படிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்,.

அன்புடன் ஜெயந்தி சங்கர்

-----------------------------------------------------------------

நேர்காணல் : கேடிஸ்ரீ
தொகுப்பு: மதுரபாரதி


கே: தீவிர இலக்கியம் என்றால் என்ன?

பதில் :

பல்வேறு வகை வாசகர்கள் பல்வேறு வகை மனத்தளங்களில் இயங்குகிறார்கள்.

ஒருவருடைய மனத்தினுடைய உயரம் என்பது இன்னொருவரின் மனத்தின் உயரம் போன்று இருக்காது. உலகம் பலவகைப்பட்டது. ஏராளமான வாசகர்கள் இருக்கிறார்கள்.

ஆழ்ந்த இலக்கியம் என்பது மனம் முதிர்ந்த வாசகர்களுக்காக வாழ்க்கையினுடைய உண்மைகளை ஒரு விசாரணையின் மூலம் தேடிக் கண்டுபிடித்து இப்படியெல்லாம் வாழ்க்கை இருக்கிறது என்பதைச் சொல்கிறது.

சா.கந்தசாமி, ஜெயமோகன், சுந்தரராமசாமி, ஜானகிராமன் போன்றோரின் நாவல்களைப் பார்த்தால், அவற்றில் வாழ்க்கையைப் பற்றிய விசாரிப்பு இருக்கும். வாழ்க்கையின் ஆழ்ந்த தத்துவங்கள் அவர்களின் நாவல்களில் இருக்கும். உலகில் மனிதன் பிறக்கிறான், ஒருநாள் இறக்கிறான். இடையில் இருக்கும் வாழ்க்கையில் பல்வேறு வகையான கருத்துப்போக்குகள், உணர்ச்சிகள் அவனை அலைக்கழிக்கின்றன. அதைப்பற்றிய ஆழ்ந்த விசாரணையாக அமைவது ஆழ்ந்த இலக்கியம்.

மேலோட்டமான எழுத்து என்று ஒன்று இருக்கிறது. அந்த வாசகத் தளத்தில் இருப்பவர்களுக்கு அத்தகைய எழுத்து தேவையானதாக இருக்கும். அவர்களுக்காக அத்தகைய எழுத்து வரும். ஆனால், அவை இலக்கியமாகா. அதே சமயத்தில் இன்றைக்கு இருக்கிற பல நவீன இலக்கியவாதிகள் ஏதோ சொல்லவருவதாக நினைத்துக்கொண்டு யாருக்கும் புரியாத மொழியில் ஒரு போலி இலக்கியம் செய்து, பம்மாத்துசெய்வதும் இலக்கியமல்ல. இலக்கியத்துக்கு நாம் இலக்கணம் வகுத்து, இப்படித்தான் இலக்கியம் என்று சொல்வதைவிட கு.ப ராஜகோபாலன், கு. அழகிரிசாமி, புதுமைப்பித்தன் போன்ற முன்னோடி எழுத்தாளர்கள் எழுதியதைப்போன்ற எழுத்துக்கள் இலக்கியம் என்று சொல்லலாம்.

இவை ஏன் இலக்கியத்துக்கான இலக்கணம் என்றால் இவர்கள் வாழ்க்கையைப் பற்றிய விசாரணைகளில் இறங்குகிறார்கள். இவர்களின் எழுத்தைப் படிப்பதன் மூலமாக நமக்கு உள்ளுணர்வில் ஒரு மேம்பாடு ஏற்படுகிறது. இதுபோன்ற விஷயங்களை அத்தகைய தளத்தில் சொல்வது இலக்கியம் ஆக முடியும்.

எல்லாம் இலக்கியம் என்று சொல்லமுற்பட்டால் மர்ம நாவல் கூட இலக்கியமாகிவிடும். அவை எல்லாம் தமிழ் எழுத்தின் வகைகள் என்று சொல்லலாம். எல்லா விதமான எழுத்துக்களும் தேவைதான். அவற்றையும் சிலர் விரும்பிப் படிப்பார்கள். சமூகவிரோதம் இல்லாத எழுத்து எதுவாக இருந்தாலும் அது சமுதாயத்திற்குத் தேவைதான்.

தற்போது பொதுவுடைமைக் கட்சியில் ஈடுபாடு உடையவர்கள் பலர் எழுதுகிறார்கள். அவர்களின் எழுத்து நேரடியாக, கருத்துகளை அப்படியே சொல்வதுபோல் இருக்கிறது. அவர்கள் இலக்கிய வடிவத்தைவிடக் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், பொன்னீலன், மேலாண்மை பொன்னுசாமி, சின்னப்பபாரதி போன்றோர் அதை அடக்கி வாசிக்கிறார்கள். பொதுவுடைமைக் கருத்துகளை வெளியில் துருத்திக்கொண்டு நிற்காமல் உள்ளடங்கிக் கொடுப்பதால், அவை இலக்கியமாகின்றன.

ஒரு விஷயத்தை இலக்கியம் அல்லது இலக்கியமல்லாதது என்று பிரிப்பது எப்படி என்றால், அந்த இலக்கியம் மனித வாழ்விற்குப் பயன்படுகிறதா, இல்லையா என்பதைப் பொறுத்தது. நான் பொதுவுடைமைவாதி அல்ல. ஆனால், நான் பொதுவுடைமை சார்ந்த இலக்கியத்தை ரசிக்கிறேன். கொண்டாடுகிறேன். இதற்குக் காரணம், எல்லோருக்குமே ஏதாவது ஒரு வயதில் பொதுவுடைமைக் கண்ணோட்டம் இருந்திருக்கும். உழைப்பாளிகளும் தொழிலாளர்களும் மகிழ்ச்சியான வளமான வாழ்க்கை வாழவேண்டும் என்பது ஒருவகையில் பார்த்தால் வள்ளலாரின் தத்துவம்தான். ஆகையால், அடிப்படையில் அதில் எனக்கு எந்தவித வேறுபாடும் இல்லை. கட்சிசார்ந்து நான் இயங்கவில்லை. அந்தக் கருத்தின் தாக்கம் எல்லோருக்கும் ஏன் மனித குலத்துக்கே, இருக்கிறது. நம் தேசப் பிதா காந்தியின் லட்சியத்தைப் பார்த்தால் அதுவும் பொதுவுடைமை இலட்சியத்துடன் தான் இணையும். ஆனால், வழிகள் தாம் வெவ்வேறு.

எல்லா இலக்கியப் போக்குகளும் தமிழுக்குத் தேவைதான்.

------------------------------------------------------------------

(தட்டச்சு : ஜெயந்தி சங்கர்)
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

6 கருத்துக்கள்:

கூறியவர்: Blogger Narain Rajagopalan

இதற்கான இணையதளம் ஏதாவதிருக்கிறதா. கதை இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

April 03, 2005 8:14 PM  
கூறியவர்: Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy)

வாழ்த்துகள் ஜெயந்தி.

தட்டச்சிட்டுப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. :)

---

நாராயணன்,

http://archives.aaraamthinai.com/thendral/

வலைப்பதிவர் கூட்டத்திற்கு ஹரியண்ணாவின் நண்பர் மதுரபாரதி வந்தால் விடாதீர்கள். அவருக்கு 'தென்றல்'உடன் தொடர்பிருக்கிறது.

April 03, 2005 8:46 PM  
கூறியவர்: Blogger எம்.கே.குமார்

கரெக்டா புடிச்சிங்க பாருங்க! அது!

தடட்டச்சியதற்கு நன்றி.

எம்.கே

April 04, 2005 9:23 AM  
கூறியவர்: Blogger Vijayakumar

மிக பயனுள்ள பதிவு. நன்றி ஜெயந்தியக்கா.

April 04, 2005 12:13 PM  
கூறியவர்: Blogger நாலாவது கண்

திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுடன் எனக்கு சில கருத்து முரண் உண்டு என்றாலும், அவை தனிப்பட்டவை. அதைத்தாண்டி, பரவலான வாசிப்பும், இளைஞர்களை ஊக்குவிக்கும் தன்மையும்... இன்னும் பல குணங்களும் அவரிடம் உண்டு என்பது அவருடன் நான் பணியாற்றி காலத்தில் உணர்ந்தது. ஏன், இன்று எனது வலைபதிவில் தந்துள்ள 'வாய்ப்பு' என்ற கதைகூட, 4 வருடங்களுக்கு மேல் பிரசுரத்துக்கு காத்திருந்தது என, 'இது நல்ல கதைதான். ஏன் மற்றவர்கள் பிரசுரிக்கவில்லை!' என்று சொல்லி அதை அம்பலத்தில் ஏற்றியவர் அவர்தான். அவரைப் பற்றிய எனது மதிப்பீட்டை இன்னும் நிறைய எழுதலாம். ஆனால் அதற்கு இது சரியான நேரமும், தளமும் அல்ல என நினைக்கிறேன் - சந்திரன்.

April 04, 2005 3:44 PM  
கூறியவர்: Blogger பாலு மணிமாறன்

உங்கள் கருத்தில் எனக்கு பூரண உடன்பாடு உண்டு சந்திரன்... 2000-ஆவது வருஷமென்று நினைக்கிறேன்... எனது கவிதைகளை அம்பலமேற்றியதோடு நில்லாமல் என்னை தொடர்ந்து எழுதச்சொல்லி மின்னஞ்சல் மூலம் ஊக்கப்படுத்தினார் திருப்பூர் கிருஷ்ணன்....

ஏதோ ஒரு மின்னம்பல தீபாவளிச் சிறப்பிதழில், "நனைவு நினைவுகள்" என்ற எனது கவிதையை, சில வருடங்களுக்குப்பின் தற்செயலாக பார்த்து சந்தோஷித்தது இன்னும் இனிப்பாக நினைவுகளின் ஓரத்தில் படர்ந்து கிடக்கிறது.

அவரால் பலனடைந்தவர்களில் - நானொருவன்! இன்னும் எத்தனை பேரோ....

April 04, 2005 5:52 PM  

Post a Comment

<< Home